தமிழ்

பாவத்தால் முடங்கிப்போதல்

மார்ச் 24, 2020
தவக்காலம் நான்காம் வாரம் செவ்வாய்க்கிழமை
இன்றைய வாசகங்கள்

இயேசு அவரிடம், “எழுந்து, உமது படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும்” என்றார்.  உடனே அவர் நலமடைந்து, தமது படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்தார்.  யோவான் 5:8–9

மேலுள்ள பகுதி அடையாளமாக உணர்த்தும் தெளிவான பொருள்களில் ஒன்றைப் பார்ப்போம்.  இயேசு குணமாக்கிய மனிதர் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்; அவரால் நடக்கவோ தம்மையே கவனித்துக்கொள்ளவோ இயலவில்லை.  பிறருடைய அன்பையும் கவனிப்பையும் எதிர்பார்த்துக் குளத்தருகே அமர்ந்திருந்த அவரை மற்றவர்கள் புறக்கணித்தனர்.  இயேசு அவரைக் கண்டு, தமது முழுக் கவனத்தையும் அவர்மீது செலுத்துகிறார்.  சிறிது நேரம் உரையாடிய பின், இயேசு அவரைக் குணமாக்கி, எழுந்து நடக்கும்படி கூறுகிறார்.

அவரது உடல் முடக்கம், நம் வாழ்வில் பாவம் ஏற்படுத்தும் விளைவின் ஓர் உருவகமாக இருப்பது, இப்பகுதி அடையாளமாக உணர்த்தும் தெளிவான செய்திகளில் ஒன்றாகும்.  நாம் பாவம் செய்யும்போது நம்மையே “முடக்கிக்கொள்கிறோம்”.  பாவம் நம் வாழ்வில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவற்றுள் மிகத் தெளிவான விளைவு, நம்மால் எழுந்து கடவுளின் வழிகளில் நடக்க இயலாமல் போவதே.  குறிப்பாக, கனமான பாவம் அன்பு செய்வதற்கும் உண்மையான சுதந்திரத்துடன் வாழ்வதற்கும் நம்மை ஆற்றலற்றவர்களாக்குகிறது.  அது நம்மைச் சிக்கவைத்து, நமது ஆன்மிக வாழ்வையோ பிறரையோ எந்த வகையிலும் கவனித்துக்கொள்ள இயலாதவர்களாக்குகிறது.  பாவத்தின் விளைவுகளை உணர்ந்துகொள்வது முக்கியம்.  சிறிய பாவங்கள்கூட நமது திறன்களைத் தடுத்து, நம் ஆற்றலைப் பறித்து, ஏதோ ஓர் அளவில் நம்மை ஆன்மிக ரீதியாக முடக்கிவிடுகின்றன.

இதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்றும், இது உங்களுக்குப் புதிய வெளிப்பாடாக இருக்காது என்றும் நம்புகிறோம்.  ஆனால், இப்போது உங்களிடமுள்ள பாவக் குற்றத்தை நேர்மையாக ஒப்புக்கொள்வதே உங்களிடம் புதிதாக நிகழ வேண்டியது.  இந்த நிகழ்வில் உங்களையே நீங்கள் காண வேண்டும்.  இந்த ஒரு மனிதரின் நன்மைக்காக மட்டுமே இயேசு அவரைக் குணமாக்கவில்லை.  உங்கள் பாவத்தின் விளைவுகளை அனுபவித்துச் சிதைந்த நிலையில் இருக்கும் உங்களைத் தாம் காண்கிறார் என்பதை உங்களுக்கு உணர்த்துவதும், அவர் அந்த மனிதரைக் குணமாக்கியதற்கான காரணங்களில் ஒன்று.  உதவி தேவைப்படும் நிலையில் உங்களைக் காண்கிறார்; உங்களை நோக்கிப் பார்த்து, எழுந்து நடக்க உங்களை அழைக்கிறார்.  உங்கள் வாழ்வில் அவர் குணமளிக்க அனுமதிப்பதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.  உங்கள்மீது விளைவுகளைச் சுமத்தும் மிகச் சிறிய பாவத்தைக்கூட அடையாளம் காணத் தவறாதீர்கள்.  உங்கள் பாவத்தைப் பாருங்கள்; இயேசு அதைக் காண அனுமதியுங்கள்; குணமும் விடுதலையும் அளிக்கும் அவரது சொற்களுக்குச் செவிகொடுங்கள்.

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்த மனிதர் இயேசுவைச் சந்தித்தபோது நிகழ்ந்த வல்லமைமிக்க சந்திப்பைக் குறித்து இன்று சிந்தியுங்கள்.  அந்தக் காட்சியில் உங்களையும் வைத்துப் பாருங்கள்; இந்தக் குணமளிப்பு உங்களுக்காகவும் நிகழ்த்தப்படுகிறது என்பதை உணருங்கள்.  இந்தத் தவக்காலத்தில் இதுவரை நீங்கள் பாவசங்கீர்த்தனம் செய்யவில்லை என்றால், பாவசங்கீர்த்தனம் செய்து, அந்த அருளடையாளத்தில் இயேசுவின் குணமளிப்பைக் கண்டறியுங்கள்.  உங்களுக்காகக் காத்திருக்கும் விடுதலையை அடைவதற்கான வழி பாவசங்கீர்த்தனமே; குறிப்பாக, நேர்மையுடனும் முழுமையாகவும் அதில் பங்கேற்கும்போது.

ஆண்டவரே, என் பாவங்களுக்காக என்னை மன்னித்தருளும்.  அவற்றைக் கண்டுணரவும், அவை என்மீது சுமத்தும் விளைவுகளை ஏற்றுக்கொள்ளவும் விரும்புகிறேன்.  இந்தச் சுமைகளிலிருந்து என்னை விடுவிக்கவும், அவற்றின் வேரிலேயே குணமளிக்கவும் நீர் விரும்புகிறீர் என்பதை நான் அறிவேன்.  ஆண்டவரே, குறிப்பாக ஒப்புரவு அருளடையாளத்தில், என் பாவங்களை உம்மிடம் அறிக்கையிட எனக்குத் துணிவைத் தாரும்.  இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

சிலுவையடியில் 40 நாள்கள் – தியானம் இருபத்தேழு – அவமானப்படுத்தப்படுதல் – ஆடைகள் களையப்படுதல்

தவக்காலத்திற்கான வளங்கள்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான இறைவேண்டல்களும் இணையவழித் திருப்பலியும்

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்