தமிழ்

மன்னிப்பை நாடும் துணிவு

ஜூலை 2, 2020
பொதுக்காலம் பதின்மூன்றாம் வாரத்தின் வியாழன்
இன்றைய வாசகங்கள்

இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரிடம், “துணிவுகொள், மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.  மத்தேயு 9:2b

இயேசு முடக்குவாதமுற்றவரைக் குணமாக்கி, “எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்” என்று அவரிடம் சொல்வதோடு இந்த நிகழ்வு நிறைவடைகிறது.  அவரும் அவ்வாறே செய்கிறார்; மக்கள் கூட்டம் வியப்பில் ஆழ்கிறது.

இங்கு இரண்டு புதுமைகள் நிகழ்கின்றன.  ஒன்று உடல் சார்ந்தது; மற்றொன்று ஆன்மா சார்ந்தது.  இந்த மனிதரின் பாவங்கள் மன்னிக்கப்படுவது ஆன்மா சார்ந்த புதுமை.  அவரது முடக்குவாதம் குணமாவது உடல் சார்ந்த புதுமை.

இந்தப் புதுமைகளில் எது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது?  இவற்றில் எதை அந்த மனிதர் அதிகமாக விரும்பியிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அந்த மனிதரின் எண்ணங்கள் நமக்குத் தெரியாததால், இரண்டாவது கேள்விக்குப் பதிலளிப்பது கடினம். ஆனால் முதல் கேள்விக்குப் பதிலளிப்பது எளிது.  அவரது பாவங்கள் மன்னிக்கப்படுவதான ஆன்ம நலமே இந்த இரண்டு புதுமைகளில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.  அது அவரது ஆன்மாவிற்கு நித்திய விளைவுகளைத் தருவதால், அதுவே மிகவும் முக்கியமானது.

உடல்நலம் பெறுவது போன்ற தேவைகளுக்காக இறைவனிடம் வேண்டுவது நம்மில் பெரும்பாலானோருக்கு எளிதாக இருக்கிறது.  இறைவனிடம் உதவிகளையும் ஆசிகளையும் கேட்பது நமக்கு மிகவும் எளிதாக இருக்கலாம்.  ஆனால் மன்னிப்புக் கேட்பது நமக்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது?  இது பலருக்குக் கடினமாக இருக்கலாம். ஏனெனில், இதற்கு முதலில் நாம் தாழ்மையுடன் செயல்பட வேண்டியுள்ளது.  மன்னிப்புத் தேவைப்படும் பாவிகள் நாம் என்பதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

நமக்கு மன்னிப்புத் தேவை என்பதை ஏற்றுக்கொள்ளத் துணிவு வேண்டும். ஆனால் இந்தத் துணிவு ஒரு சிறந்த நற்பண்பு; அது நம்மிடமுள்ள மிகுந்த மனவலிமையை வெளிப்படுத்துகிறது.  நம் வாழ்வில் இயேசுவின் இரக்கத்தையும் மன்னிப்பையும் நாடி அவரிடம் வருவதே நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான இறைவேண்டல்; நம்முடைய மற்ற எல்லா இறைவேண்டல்களுக்கும் அதுவே அடித்தளம்.

இறைவனிடம் மன்னிப்புக் கேட்பதில் நீங்கள் எவ்வளவு துணிவுடன் இருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் பாவத்தை எவ்வளவு தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறீர்கள் என்பதையும் இன்று சிந்தியுங்கள்.  இவ்வாறு தாழ்மையுடன் செயல்படுவது, நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான செயல்களில் ஒன்றாகும்.

ஆண்டவரே, எனக்குத் துணிவு தாரும்.  குறிப்பாக, உமக்கு முன்பாக என்னைத் தாழ்த்திக்கொள்ளவும், என் பாவங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவும் எனக்குத் துணிவு தாரும்.  இவ்வாறு தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும்போது, என் வாழ்வில் நாள்தோறும் உமது மன்னிப்பையும் நாட எனக்கு உதவியருளும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

படம்: பெத்சதா குளத்தருகே நடக்க இயலாதவர்களைக் கிறிஸ்து குணமாக்குதல் — பீட்டர் வான் லிண்ட் வரைந்தது