தமிழ்

தாழ்ச்சி + நம்பிக்கை = இரக்கம்

ஆகஸ்ட் 5, 2020
பொதுக்காலம் பதினெட்டாம் வாரத்தின் புதன்கிழமை
இன்றைய வாசகங்கள்

புனித மரியன்னை பெருங்கோவிலின் அர்ப்பணிப்பு—விருப்ப நினைவு

ஆனால் அப்பெண் வந்து அவரைப் பணிந்து, “ஆண்டவரே, எனக்கு உதவியருளும்” என்றார். அவர் மறுமொழியாக, “பிள்ளைகளின் உணவை எடுத்து நாய்களுக்குப் போடுவது முறையல்ல” என்றார். அதற்கு அவர், “தயவுகூரும், ஆண்டவரே; நாய்களும் தங்கள் உரிமையாளர்களின் மேசையிலிருந்து விழும் உணவுத் துண்டுகளை உண்ணுமே” என்றார்.  மத்தேயு 15:25-27

இந்தப் பெண்ணுக்கு உதவுவது நாய்களுக்கு உணவைப் போடுவதுபோன்றது என்றா இயேசு உண்மையிலேயே குறிப்பிட்டார்?  நமது செருக்கின் காரணமாக, இயேசு சொன்னதைக் கேட்டு நம்மில் பெரும்பாலோர் மிகவும் புண்பட்டிருப்போம்.  ஆனால் அவர் சொன்னது உண்மையானது; அது எந்த வகையிலும் மரியாதைக் குறைவானதல்ல.  இயேசு மரியாதைக் குறைவாக நடந்துகொள்ளவே முடியாது என்பது தெளிவு.  இருந்தாலும், மேலோட்டமாகப் பார்க்கும்போது அவரது கூற்று மரியாதைக் குறைவானதுபோல் தோன்றுகிறது.

முதலில், அவரது கூற்று எவ்வாறு உண்மையானது என்று பார்ப்போம்.  இந்தப் பெண் தன் மகளைக் குணமாக்க வருமாறு இயேசுவிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.  அடிப்படையில், இந்த அருளைப் பெற அவர் எந்த வகையிலும் தகுதியற்றவர் என்றே இயேசு அவரிடம் சொல்கிறார்.  அது உண்மைதான்.  மேசையிலிருந்து உணவளிக்கப்படுவதற்கு ஒரு நாய்க்கு எவ்வாறு தகுதி இல்லையோ, அவ்வாறே இறைவனின் அருளைப் பெற நமக்கும் தகுதி இல்லை.  இதைச் சொல்லும் விதம் அதிர்ச்சியளிப்பதாக இருந்தாலும், நமது பாவ நிலை மற்றும் தகுதியின்மை பற்றிய உண்மையை முதலில் விளக்குவதற்காகவே இயேசு இவ்வாறு சொல்கிறார்.  அப்பெண்ணும் அதை ஏற்றுக்கொள்கிறார்.

இரண்டாவதாக, இயேசுவின் கூற்று இந்தப் பெண் மிகுந்த தாழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் பதிலளிக்க வழிவகுக்கிறது.  மேசையிலிருந்து உண்ணும் ஒரு நாயுடன் தம்மை ஒப்பிடுவதை அவர் மறுக்காததில் அவரது தாழ்ச்சி வெளிப்படுகிறது.  மாறாக, நாய்களும்கூட உணவுத் துண்டுகளை உண்கின்றன என்பதை அவர் தாழ்ச்சியுடன் சுட்டிக்காட்டுகிறார்.  ஆ! இதுவல்லவா தாழ்ச்சி!  உண்மையில், இயேசு அவரிடம் சற்றே அவமானப்படுத்துவதுபோன்ற இந்த முறையில் பேசியதற்குக் காரணம், அவர் எவ்வளவு தாழ்ச்சியுள்ளவர் என்பதை இயேசு அறிந்திருந்தார் என்பதும், தமது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் தமது தாழ்ச்சி ஒளிரும்படி அவர் பதிலளிப்பார் என்பதை இயேசு அறிந்திருந்தார் என்பதும்தான் என்று நாம் உறுதியாகக் கூறலாம்.  தாம் தகுதியற்றவர் என்ற தாழ்மையான உண்மையால் அவர் புண்படவில்லை; மாறாக, அதை ஏற்றுக்கொண்டதோடு, தமது தகுதியின்மையையும் மீறி இறைவனின் அளவற்ற இரக்கத்தை நாடினார்.

நம்பிக்கை வெளிப்பட வழிதிறக்கும் ஆற்றல் தாழ்ச்சிக்கு உண்டு; நம்பிக்கையோ இறைவனின் இரக்கமும் வல்லமையும் செயல்பட வழிதிறக்கிறது.  இறுதியில், அனைவரும் கேட்கும்படி இயேசு, “அம்மா, உமது நம்பிக்கை பெரிது!” என்று கூறுகிறார்.  அவரது நம்பிக்கை வெளிப்பட்டது; அந்தத் தாழ்மையான நம்பிக்கைக்காக அவரைப் பெருமைப்படுத்த இயேசு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார்.

இறைவனுக்கு முன்பாக உங்களிடம் உள்ள தாழ்ச்சியைப் பற்றி இன்று சிந்தியுங்கள்.  இயேசு உங்களிடம் இவ்வாறு பேசியிருந்தால், நீங்கள் எப்படிப் பதிலளித்திருப்பீர்கள்?  உங்கள் தகுதியின்மையை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு உங்களிடம் தாழ்ச்சி இருந்திருக்குமா?  அப்படியானால், உங்கள் தகுதியின்மையையும் மீறி இறைவனின் இரக்கத்திற்காகக் கதறி மன்றாடும் அளவுக்கு நம்பிக்கையும் உங்களிடம் இருந்திருக்குமா?  இந்த அற்புதமான பண்புகள் ஒன்றோடொன்று இணைந்துள்ளன (தாழ்ச்சியும் நம்பிக்கையும்); இறைவனின் இரக்கம் செயல்பட அவை வழிதிறக்கின்றன!

ஆண்டவரே, நான் தகுதியற்றவன்.  இதை உணர எனக்கு உதவியருளும்.  என் வாழ்வில் உமது அருளைப் பெற நான் தகுதியற்றவன் என்பதை உணர எனக்கு உதவியருளும்.  ஆயினும், தாழ்மையான இந்த உண்மையில், உமது அளவற்ற இரக்கத்தையும் நான் உணர்ந்துகொள்ளவும், இரக்கத்திற்காக உம்மை அழைக்க ஒருபோதும் அஞ்சாதிருக்கவும் அருளும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர் – புனித மரியன்னை பெருங்கோவிலின் அர்ப்பணிப்பு

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

படம்:  கிறிஸ்துவின் காலடியில் கானானியப் பெண் — வரைந்தவர்: ஜான் ஜெர்மேன் துருவே