தமிழ்

குழந்தைகளைப் போல மாறுதல்

ஆகஸ்ட் 11, 2020
பொதுக்காலம் பத்தொன்பதாம் வாரத்தின் செவ்வாய்க்கிழமை
இன்றைய வாசகங்கள்

புனித கிளாரா, கன்னி—நினைவு

“நீங்கள் மனந்திரும்பிக் குழந்தைகளைப் போல ஆகாவிட்டால், விண்ணரசில் நுழைய மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தக் குழந்தையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய குழந்தை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.”  மத்தேயு 18:3-5

நாம் எப்படிக் குழந்தைகளைப் போல மாறுவது? குழந்தை மனம் கொண்டிருப்பது என்றால் என்ன? குழந்தைகளைப் போல மாறுவது குறித்து இயேசு கூறுவதற்கு மிகப் பொருத்தமாக இருக்கக்கூடிய சில பண்புகள் இவை: நம்பிக்கை கொள்ளுதல், சார்ந்திருத்தல், இயல்பாக இருத்தல், தன்னியல்பாகச் செயல்படுதல், வியந்து நிற்றல், பகட்டின்றி இருத்தல், கள்ளங்கபடமின்றி இருத்தல். இவற்றில் சிலவோ, அனைத்துமோ இயேசு குறிப்பிடுவதற்குப் பொருத்தமாக இருக்கலாம். கடவுளோடும் பிறரோடும் நமக்குள்ள உறவில் இந்தப் பண்புகளில் சிலவற்றைப் பார்ப்போம்.

நம்பிக்கை கொள்ளுதல்: குழந்தைகள் தங்கள் பெற்றோரை எந்தக் கேள்வியும் இன்றி நம்புகிறார்கள். கீழ்ப்படிய அவர்கள் எப்போதும் விரும்பாமல் இருக்கலாம்; ஆனால் தங்களுக்குத் தேவையானவற்றைத் தந்து, தங்களைக் கவனித்துக்கொள்வார்கள் என்ற பெற்றோர் மீதான நம்பிக்கையை இழப்பதற்குக் குழந்தைகளுக்கு மிகக் குறைந்த காரணங்களே உள்ளன. உணவும் உடையும் கிடைக்கும் என்று உறுதியாக நம்புவதால், அவற்றைக் குறித்துக் கவலைப்படுவதுகூட இல்லை. பெரிய நகரத்திலோ வணிக வளாகத்திலோ இருக்கும்போது, தாயின் அல்லது தந்தையின் அருகில் இருப்பதில் பாதுகாப்பை உணர்கிறார்கள். இந்த நம்பிக்கை அச்சத்தையும் கவலையையும் அகற்ற உதவுகிறது.

இயல்பாக இருத்தல்: குழந்தைகள் பெரும்பாலும் தாங்கள் தாங்களாகவே இருக்கச் சுதந்திரம் கொண்டிருக்கிறார்கள். தாங்கள் வேடிக்கையாகத் தோன்றுவோமோ, சங்கடத்திற்கு ஆளாவோமோ என்று அவர்கள் அளவுக்கு அதிகமாகக் கவலைப்படுவதில்லை. பிறர் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாமல், பெரும்பாலும் இயல்பாகவும் தன்னியல்பாகவும் தாங்கள் தாங்களாகவே இருப்பார்கள்.

கள்ளங்கபடமின்றி இருத்தல்: குழந்தைகளின் பார்வை இன்னும் திரிபடையவில்லை; அவர்கள் எல்லாவற்றையும் அவநம்பிக்கையோடு பார்ப்பதில்லை. பிறரைப் பார்த்ததுமே அவர்களைப் பற்றி மிக மோசமாக எண்ணுவதில்லை. மாறாக, பெரும்பாலும் பிறரை நல்லவர்களாகவே காண்கிறார்கள்.

வியந்து நிற்றல்:  புதியவற்றைக் கண்டு குழந்தைகள் பெரும்பாலும் ஈர்க்கப்படுகிறார்கள். ஓர் ஏரியையோ மலையையோ புதிய விளையாட்டுப் பொருளையோ முதன்முதலாகப் பார்க்கும்போது வியந்து நிற்கிறார்கள்.  

இந்தப் பண்புகள் அனைத்தையும் கடவுளோடு நமக்குள்ள உறவில் எளிதாகக் கடைப்பிடிக்கலாம். எல்லாவற்றிலும் கடவுள் நம்மைக் கவனித்துக்கொள்வார் என்று நாம் நம்ப வேண்டும். நம் அன்பு ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்று கவலைப்படாமல், அச்சமின்றி அதை வெளிப்படுத்தி, இயல்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க நாம் முயல வேண்டும். முற்சார்பு எண்ணங்களுக்கும் ஒருதலைச்சார்புக்கும் இடமளிக்காமல், பிறரைக் கள்ளங்கபடமின்றிப் பார்க்க நாம் முயல வேண்டும். கடவுளையும் நம் வாழ்வில் அவர் செய்யும் புதிய செயல்கள் அனைத்தையும் கண்டு தொடர்ந்து வியந்து நிற்க நாம் முயல வேண்டும்.

இந்தப் பண்புகளில் எது உங்களிடம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று இன்று சிந்தியுங்கள். நீங்கள் இன்னும் அதிகமாகக் குழந்தை மனம் கொண்டவராக மாற வேண்டும் என்று கடவுள் எவ்வாறு விரும்புகிறார்? விண்ணரசில் நீங்கள் உண்மையிலேயே பெரியவராக விளங்கும்படி, குழந்தைகளைப் போல எவ்வாறு மாற வேண்டும் என்று அவர் விரும்புகிறார்?

ஆண்டவரே, குழந்தை மனம் கொண்டவனாக மாற எனக்கு உதவியருளும். ஒரு குழந்தையின் தாழ்மையிலும் எளிமையிலும் உண்மையான மேன்மையைக் கண்டடைய எனக்கு உதவியருளும். எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்திலும் உம்மீது முழுமையான நம்பிக்கை கொண்டிருக்க அருளும். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர் – புனித கிளாரா, கன்னி

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

படம்: அந்தோனி வான் டைக் வரைந்த ‘குழந்தைகள் என்னிடம் வரட்டும்’