மே 29, 2021
பொதுக்காலத்தின் எட்டாம் வாரம் சனிக்கிழமை
புனித ஆறாம் பவுல், திருத்தந்தை—விருப்ப நினைவு

“நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள்; எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்வேன். யோவானின் திருமுழுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா, மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்.” மாற்கு 11:29–30
தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மூப்பர்களும் கோவில் வளாகத்தில் இயேசுவை அணுகி, அவர் செய்தவற்றை எந்த அதிகாரத்தால் செய்தார் என்று கேட்டபோது, இயேசு அளித்த பதில் இதுவே. இயேசு அப்படி என்ன செய்தார்? முந்தைய நாள் இயேசு கோவிலில் இருந்தபோது, நாணயம் மாற்றுவோரை வெளியே விரட்டியடித்து, “என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கப்படும் என்று எழுதப்படவில்லையா? ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்” என்று கூறினார். இது சமயத் தலைவர்களைக் கடும் சினமடையச் செய்தது. இயேசுவை எவ்வாறு கொல்லலாம் என்று அவர்கள் உடனே ஆலோசிக்கத் தொடங்கினர்.
முதலில், அங்கு நிலவிய பதற்றத்தைச் சிந்தித்துப் பாருங்கள். இறைமகனாகிய இயேசுவைக் கொல்ல அவர்கள் உண்மையாகவே சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர். வெறுப்பும் பொறாமையும் நிறைந்தவர்களாய், அவரை நம்ப மறுத்தனர். அவர்களின் கடின உள்ளத்தை இயேசு கண்டார். அவர்களுடைய கேள்விக்குத் தாம் பதிலளிப்பதற்கு முன்பு, தமது கேள்விக்கு அவர்கள் முதலில் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தினார். இயேசு ஏன் இப்படிச் செய்தார்?
இயேசு அவர்களிடம் கேட்ட கேள்வி, உண்மையில் அவர் காட்டிய மாபெரும் இரக்கத்தின் செயல். மனந்திரும்புவதற்கு அவர் அவர்களுக்கு ஓர் வாய்ப்பளித்தார். தாழ்மையான நம்பிக்கையோடும் நேர்மையோடும் அவருடைய கேள்விக்கு அவர்கள் பதிலளித்திருந்தால், தங்கள் உயிரைக் காத்துக்கொண்டிருக்க முடியும். மாறாக, அவருடைய கேள்வியைக் குறித்து அவர்கள் தங்களுக்குள் கலந்துபேசி, தங்களுக்கு அரசியல் ரீதியாகப் பாதிப்பு வராத பதிலை அளித்தனர். யோவானின் திருமுழுக்கு கடவுளிடமிருந்து அல்ல, மனிதரிடமிருந்தே வந்தது என்று சொன்னால், மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பிவிடுவார்களோ என்று அஞ்சினர். எனவே, “எங்களுக்குத் தெரியாது” என்று மட்டும் கூறினர். ஆனால் அவர்கள் சரியான பதிலைக் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். தங்களுக்குள் கலந்துபேசி, யோவானின் திருமுழுக்கு உண்மையாகவே கடவுளிடமிருந்து வந்தது என்றும், தாங்கள் அவரை நம்பியிருக்க வேண்டும் என்றும் முடிவுக்கு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவர்கள் தங்களைத் தாழ்த்தி, யோவானைக் குறித்துத் தாங்கள் பெரிதும் தவறிவிட்டதை ஒப்புக்கொண்டிருந்தால், இயேசு அவர்களுடைய கேள்விக்குப் பதிலளித்திருப்பார்; உண்மையான நம்பிக்கையிலான அவர்களது வாழ்வும் தொடங்கியிருக்கும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. பிடிவாதமாகவே இருந்தனர். தாங்கள் தவறு செய்ததை அவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை.
மிகவும் ஆபத்தான பாவங்களுள் பிடிவாதமும் ஒன்று. அது மன்னிக்கப்பட முடியாத பாவம்; ஏனெனில், அதன் அடிப்படைத் தன்மையே மாற மறுப்பதுதான். ஒருவர் தமது பாவத்தை ஒப்புக்கொள்ளவும் மாறவும் மறுக்கும்போது, கடவுளால் அவருக்கு உதவ முடியாது. அவர் தமது பாவத்திலேயே வழிதவறியவராக இருந்து, அதன் விளைவுகளை அனுபவிக்கிறார்.
உங்கள் வாழ்வில் பிடிவாதத்தோடு போராடுகிறீர்களா? நீங்கள் தவறு செய்யும்போது அதை ஒப்புக்கொள்வது கடினமாக இருக்கிறதா? மற்றொருவரிடம் மன்னிப்புக் கேட்பதும் மாற முயல்வதும் உங்களுக்குக் கடினமாக இருக்கிறதா?
நீங்கள் எதில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள். நம்ப மறுக்கும் விசுவாச உண்மைகள் ஏதேனும் உள்ளனவா? தாழ்மையுடன் சீர்செய்ய மறுக்கும் முறிந்த உறவுகள் உள்ளனவா? உங்கள் பாவத்தை நியாயப்படுத்திக்கொண்டு, உங்கள் குற்றத்தையும் நீங்கள் மாற வேண்டிய தேவையையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்களா? தாழ்மையான இதயம் என்னும் கொடைக்காக நம் ஆண்டவரிடம் மன்றாடுங்கள். பல வகைகளில், தாழ்மை என்பது கடவுளின் முன்னிலையில் உங்களிடமும் பிறரிடமும் முற்றிலும் நேர்மையாக இருப்பதே அன்றி வேறல்ல. இந்தச் சமயத் தலைவர்களின் முன்மாதிரியைப் பின்பற்றாதீர்கள். நம் ஆண்டவர் உங்கள் உள்ளத்தில் நுழைந்து, உங்கள் வாழ்வில் தமது இரக்கத்தைக் கொண்டுவரும்படி, உங்கள் இதயத்திலிருந்து பிடிவாதம் அனைத்தையும் அகற்றத் தாழ்மையுடன் முயலுங்கள்.
உறுதியில் தளராத என் இயேசுவே, பெருமையும் ஆணவமும் பிடிவாதமும் கொண்டவர்களை மிகுந்த வலிமையோடும் அன்போடும் நீர் எதிர்கொள்கிறீர். அவர்களது உள்ளத்தின் பிடிவாதத்தை வெல்ல அவர்களுக்கு உதவுவதற்காகவே நீர் அவ்வாறு செய்கிறீர். அன்பு ஆண்டவரே, நான் எப்போதும் என் பாவத்தை ஒப்புக்கொண்டு, அன்போடு உம்மிடம் திரும்புவதற்குத் தாழ்மை என்னும் அருளை எனக்குத் தாரும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்
இன்றைய புனிதர் – புனித ஆறாம் பவுல், திருத்தந்தை
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்




