தமிழ்

அன்னை மரியாவின் வியாகுல இதயம்

புதன்கிழமை, செப்டம்பர் 15, 2021

வியாகுல அன்னையின் நினைவு நாள்

இன்றைய வாசகங்கள்

காணொளி

இயேசுவின் சிலுவை அருகில் அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரியும், கிலயோப்பாவின் மனைவி மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். யோவான் 19:25

இறைமகனின் தாயாகிய நம் புனித அன்னை, தம் மகனை நிறைவான அன்போடு நேசித்தார். ஒவ்வொரு நற்பண்பையும் தம் வாழ்வில் முழுமையாக வெளிப்படுத்தினார். தம் மகன்மீது அவர் கொண்டிருந்த அன்பு, நம்மால் கற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் கடந்த அன்பாக இருந்தது. அவர் அற்புதமான முறையில் இயேசுவைக் கருத்தாங்கினார்; தம் வயிற்றில் சுமந்தார்; அவரைப் பெற்றெடுத்தார்; பாலூட்டினார்; வளர்த்தார்; அவருடைய வாழ்நாள் முழுவதும் அவரை நேசித்தார். இயேசுவின்மீது அவர் கொண்டிருந்த அன்பின் ஆழத்தையும் அழகையும் கற்பனை செய்துபார்ப்பதுகூடக் கடினம். பொதுவாக, ஒரு தாயின் அன்பு வலிமையானது, அசைக்க முடியாதது, ஆழமானது, கனிவு நிறைந்தது. அன்னை மரியாவின் மாசற்ற இதயத்தையும், அந்த இதயத்தில் உயிரோட்டமாய் விளங்கும் அன்பின் வியத்தகு ஆழத்தையும் கற்பனை செய்துபாருங்கள்.

மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள நற்செய்திப் பகுதியில் சித்தரிக்கப்படும் காட்சியையும் கற்பனை செய்துபாருங்கள். அன்பு நிறைந்த இந்த அன்னை, சிலுவையில் அறையப்பட்ட தம் மகனை உற்றுநோக்கியபடி, தாய்மைக்குரிய ஒவ்வொரு நற்பண்பையும் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு சிலுவையடியில் நின்றார். தம் மகன்மீது அவர் கொண்டிருந்த அன்பின் ஆழத்தைப் புரிந்துகொள்வது கடினமாக இருப்பதால், இயேசுவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைப் பார்த்தபோது அவர் தாங்கிய துயரத்தின் ஆழத்தையும் உள்ளத்தின் வேதனையையும் கற்பனை செய்வதும் மிகவும் கடினம். கொடிய வேதனை நிறைந்த அந்த நேரத்தில், அவருக்கு அருகிலும் அவரோடும் நிற்பதைத் தவிர அன்னையால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அந்த நேரத்தில், அவர்மீது கொண்டிருந்த பிரமாணிக்கத்தின் வழியாக அன்னையின் அன்பு வெளிப்பட்டது.

அவருடைய மாசற்ற இதயத்தில் அன்பும் துயரமும் பரிவும் வேதனையும் ஒன்றாக இணைந்திருந்தன என்பதை அறிவது அழகானது. அழகு நிறைந்த அவருடைய இதயத்தில் மனித உணர்வுகள் அனைத்தும் இருந்தன. இறையருளால் ஊட்டம் பெற்ற அந்த உணர்வுகள், தம்மிடம் இருந்த மிகச் சிறந்த கொடையாகிய தாய்மையைத் தம் மகனுக்கு அளிக்க அவருக்கு ஆற்றல் தந்தன. தம் வாழ்நாள் முழுவதும் அவர் உண்மையான தாயாகத் திகழ்ந்தார். தம் மகன் சிலுவையில் தொங்கிய அந்த நேரத்தில், அவருடைய தாய்மை முழுமையான மனித வெளிப்பாடாக உச்சத்தை எட்டியது.

வேறொருவரால் அன்பு செய்யப்பட நாம் அனைவரும் ஏங்குகிறோம். நாம் கொடுக்கவும் பெறவும் கூடிய மிகச் சிறந்த கொடை அன்பை வழங்குவதும் பெறுவதுமே. அன்புக்காகவே நாம் படைக்கப்பட்டோம்; வாழ்வில் நாம் நிறைவு பெறுவதற்கான ஊற்றும் அன்பே. அன்னை மரியா சிலுவையடியில் நின்றபோது, அவருடைய மனித இதயம் இதுவரை அறியப்பட்டதிலேயே மிகப் பெரிய நிறைவை அனுபவித்தது என்பதை நாம் உறுதியாக நம்பலாம். தம் தாயன்பை அவர் முழுமையாக வெளிப்படுத்தியதால் அவருடைய இதயம் நிறைவு பெற்றது.

இன்று இறைவனின் தாயின் திருவுருவத்தை உற்றுநோக்குங்கள். குறிப்பாக, தம் மனித இதயத்தில் அவர் அனுபவித்திருக்கக்கூடிய அனைத்தையும் சிந்தித்துப்பாருங்கள். இந்தத் தியானத்தைப் பற்றி இறையியலாளர்கள் பல நூல்களை எழுதக்கூடும். ஆனாலும், அன்பு நிறைந்த அவருடைய இதயத்தைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த வழி செப மனநிலையிலான தியானமே. இன்று தம் இதயத்தை உங்களுக்கு வெளிப்படுத்துமாறு நம் புனித அன்னையிடம் கேளுங்கள். முழுமையான தாயன்பின் இந்தப் புனிதத் திருவுருவத்தை அமைதியாக வணங்கியபடி அமர்ந்திருக்கச் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அவ்வாறு செய்யும்போது, இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ளுங்கள். முதலாவதாக, அன்னை மரியா உங்கள்மீதும் இதே ஆழமான அன்பைக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அதைச் சந்தேகிக்காதீர்கள். நீங்கள் பாவத்தில் இருக்கும்போதுகூட, அவர் உங்களை உற்றுநோக்குகையில் அவருடைய இதயம் பரிவால் பற்றி எரிகிறது. இரண்டாவதாக, நம் புனித அன்னையின் அன்பு உங்கள் இதயத்தையும் நிரப்பி, பிறருடைய வாழ்விலும் பொங்கி வழிய வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவருடைய பரிவும் அக்கறையும் பிரமாணிக்கமும் இரக்கமும் நம் இதயங்கள் வழியாகப் பாய்ந்தோட நாம் அனைவரும் இடமளிக்க வேண்டும். நம் புனித அன்னையின் இதயத்தோடு நீங்கள் யாரை அன்பு செய்ய வேண்டும்? இறைவனின் தாயின் இதயத்திலுள்ள அன்பைப் பெறவும், அந்த அன்பைப் பிறருக்கு வழங்கவும் நாடுங்கள். அதை உங்களுக்குள் ஏற்றுக்கொண்டு, பின்னர் அது உங்களிடமிருந்து பாய்ந்தோட இடமளியுங்கள். இந்த அன்பின் புனிதத் திருவுருவத்தைவிட அழகும் வியப்பும் ஊட்டக்கூடியது இவ்வுலகில் உண்மையிலேயே வேறெதுவும் இல்லை.

மாசற்ற என் வியாகுல அன்னையே, தாயன்பின் நிறைவோடு உமது மகனின் சிலுவையடியில் நீர் நின்றீர். புனிதமான ஒவ்வொரு நற்பண்போடும் கலந்த துயரத்தால் உமது இதயம் நிறைந்திருந்தது. இந்த அன்பை நான் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவும், அதனால் உமது அன்புக்கு என் இதயத்தையும் திறக்கவும் எனக்காக வேண்டிக்கொள்ளும். அவ்வாறு நான் செய்யும்போது, என் வாழ்வில் துன்புறுவோருக்கும், கனிவான பரிவும் இரக்கமும் மிகுதியாகத் தேவைப்படுவோருக்கும் உமது இதயத்தின் அன்பைக் கொண்டுசெல்லும் கருவியாக நான் மாற வேண்டும் என மன்றாடுகிறேன். மரியாவின் வியாகுல இதயமே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர் – வியாகுல அன்னை

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: கன்னி மரியா, மகதலா மரியா, புனித யோவான் ஆகியோருடன் சிலுவையில் கிறிஸ்து; ஓவியர்: பர்த்தலோமே எஸ்தெபான் முரில்லோ; விக்கிமீடியா காமன்ஸ் வழியாக


சிலுவையடியில் 40 நாள்கள்:
நம் புனித அன்னையின் இதயத்திலிருந்து ஓர் அன்புப் பார்வை