தமிழ்

நீங்கள் பிறரைத் தீர்ப்பிடுகிறீர்களா?

ஜூன் 20, 2022
பொதுக்காலம் பன்னிரண்டாம் வாரம் திங்கட்கிழமை
இன்றைய வாசகங்கள்

காணொளி

“நீங்கள் தீர்ப்புக்கு உள்ளாகாதபடி, பிறரைத் தீர்ப்பிடுவதை நிறுத்துங்கள். ஏனெனில், நீங்கள் எவ்வாறு தீர்ப்பிடுகிறீர்களோ, அவ்வாறே நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாவீர்கள்; நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”  மத்தேயு 7:1-2

பிறரைத் தீர்ப்பிடும் மனப்பான்மையை விட்டொழிப்பது கடினமாக இருக்கலாம்.  ஒருவர் வழக்கமாகக் கடுமையாகவும் குறைகாணும் விதமாகவும் சிந்தித்துப் பேசும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டால், அவர் மாறுவது மிகவும் கடினம்.  உண்மையில், ஒருவர் குறைகாணவும் தீர்ப்பிடவும் தொடங்கிவிட்டால், அவர் அதே பாதையில் தொடர்ந்து சென்று, மேலும் மேலும் குறைகாண்பவராகவும் தீர்ப்பிடுபவராகவும் மாறுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

இயேசு இந்த மனப்போக்கை இவ்வளவு கடுமையாகக் கண்டிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.  மேலே உள்ள பகுதிக்குப் பிறகு இயேசு, “வெளிவேடக்காரனே, முதலில் உன் கண்ணிலிருந்து மரக்கட்டையை அகற்று…” என்று கூறுகிறார்.  இவ்வார்த்தைகளையும், பிறரைத் தீர்ப்பிடுவதை இயேசு கடுமையாகக் கண்டிப்பதையும், தீர்ப்பிடும் நபர்மீது அவர் கோபமாகவோ கடுமையாகவோ இருப்பதன் வெளிப்பாடாகப் பார்க்கக்கூடாது.  மாறாக, அவர்கள் செல்லும் பாதையிலிருந்து அவர்களைத் திருப்பவும், இந்தப் பெரும் சுமையிலிருந்து விடுபட அவர்களுக்கு உதவவும் அவர் விரும்புகிறார்.  எனவே, சிந்தித்துப் பார்க்க வேண்டிய முக்கியமான கேள்வி இதுதான்: “இயேசு என்னிடம்தான் பேசுகிறாரா?  பிறரைத் தீர்ப்பிடும் மனப்பான்மையோடு நான் போராடுகிறேனா?”

இதற்கான பதில் “ஆம்” என்றால், அஞ்சாதீர்கள்; மனம் தளராதீர்கள்.  இந்த மனப்போக்கை உணர்ந்து ஒப்புக்கொள்வது மிகவும் முக்கியம்; பிறரைத் தீர்ப்பிடுவதற்கு நேரெதிரான நற்பண்பை நோக்கிய முதல் படியும் இதுவே.  அந்த நற்பண்புதான் இரக்கம்.  இன்று நம்மிடம் இருக்கக்கூடிய மிக முக்கியமான நற்பண்புகளுள் இரக்கமும் ஒன்று.

நாம் வாழும் இக்காலத்திற்கு முன்பைவிட அதிகமாக இரக்கம் தேவைப்படுவதுபோல் தோன்றுகிறது.  உலகளாவிய பண்பாடாகவே, பிறரிடம் கடுமையாக நடந்துகொள்வதும் குறைகாண்பதும் அளவுக்கு மீறிப் பெருகியிருப்பது இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.  நமது உலகப் பண்பாட்டில் பிறரை அலசி ஆராய்ந்து குறைகூறும் போக்கு தொடர்ந்து வளர்ந்துவருவதைக் காண, ஒரு செய்தித்தாளைப் படித்தாலோ, சமூக ஊடகங்களைப் பார்வையிட்டாலோ, இரவு செய்தி நிகழ்ச்சிகளைப் பார்த்தாலோ போதும்.  இது உண்மையிலேயே ஒரு பிரச்சினை.

இரக்கத்தைப் பற்றிய நல்ல செய்தி இதுதான்: கடவுள் நம்மை எவ்வாறு நடத்துகிறார் என்பதற்கான அளவுகோலாக, நம்மிடம் அதிகமாக வெளிப்படும் தீர்ப்பிடும் மனப்பான்மையையோ இரக்கத்தையோ பயன்படுத்துகிறார்.  இரக்கம் என்னும் நற்பண்பை நாம் வெளிப்படுத்தும்போது, அவர் மிகுந்த இரக்கத்துடனும் மன்னிப்புடனும் நம்மை நடத்துவார்.  ஆனால், பிறரைத் தீர்ப்பிடும் பாதையை நாம் தேர்ந்தெடுக்கும்போது, அவரும் தமது நீதியையும் தீர்ப்பையும் வெளிப்படுத்துவார்.  தேர்வு நம் கையில்தான் உள்ளது!

இன்று, உங்கள் வாழ்வில் உள்ள இரக்கத்தையும் தீர்ப்பிடும் மனப்பான்மையையும் பற்றிச் சிந்தியுங்கள்.  இவற்றில் எது மேலோங்கி நிற்கிறது?  உங்கள் முதன்மையான மனப்போக்கு என்ன?  பிறரைத் தீர்ப்பிடுவதைவிட இரக்கம் எப்போதும் மிகுந்த நற்பலனையும் நிறைவையும் தருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  அது மகிழ்ச்சியையும் அமைதியையும் விடுதலையையும் தருகிறது.  இரக்கத்தை உங்கள் மனதில் பதியவைத்து, இந்த விலையுயர்ந்த கொடை தரும் ஆசிநிறைந்த பலன்களைக் காண உங்களை அர்ப்பணியுங்கள்.

இரக்கமுள்ள ஆண்டவரே, என் இதயத்தை இரக்கத்தால் நிரப்பியருளும்.  குறைகாணும் எண்ணங்கள் அனைத்தையும் கடுஞ்சொற்களையும் ஒதுக்கிவிட்டு, அவற்றிற்குப் பதிலாக உமது அன்பால் என் உள்ளத்தை நிரப்ப எனக்கு உதவியருளும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

தேசிய நற்கருணை மறுமலர்ச்சி
ஜூன் 19, 2022—கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா அன்று தொடங்குகிறது

திருஇருதய நவநாள்
நவநாள் தேதிகள்: ஜூன் 15-23, 2022
ஜூன் 24, 2022: திருஇருதயப் பெருவிழா

தேசிய நற்கருணை மறுமலர்ச்சி

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: சிஸ்டைன் சிற்றாலயத்தில் மைக்கேலாஞ்சலோ வரைந்த இறுதித் தீர்ப்பு சுவரோவியம், விக்கிமீடியா காமன்ஸ் வழியாக