தமிழ்

கொழுந்துவிட்டு எரியும் நம்பிக்கையின் நெருப்பு

ஆகஸ்ட் 14, 2022
பொதுக்காலத்தின் இருபதாம் ஞாயிறு, ஆண்டு C
இன்றைய வாசகங்கள்

காணொளி

இயேசு தம் சீடர்களிடம் கூறினார்: “மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்போதே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க வேண்டும் என எவ்வளவோ விரும்புகிறேன்!” லூக்கா 12:49

இந்தப் பகுதி நமக்கு இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. முதலில், “மண்ணுலகில் தீ மூட்ட வேண்டும்” என்ற இயேசுவின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இரண்டாவதாக, “அது இப்போதே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்க வேண்டும்” என்று அவர் விரும்புவதை வெளிப்படுத்துகிறது.

உலகில் தீ மூட்ட வந்ததாக இயேசு கூறுவதன் பொருள் என்ன? நெருப்பு என்பது கிறிஸ்தவ வாழ்வைப் பற்றிய ஆழமான புரிதலைத் தரும் வலிமைமிக்க ஓர் உருவகம். முதலில், நெருப்பு எரித்துத் தன்வயமாக்குகிறது. கிறிஸ்துவும் அவ்வாறே செய்கிறார். அவர் நம்மை முழுவதுமாகத் தன்வயமாக்க வந்தார். நமது சிறிய வாழ்வுகளைக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்புகளாக மாற்ற வந்தார். நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் எவ்வளவோ சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை இது வெளிப்படுத்துகிறது. இறையருளின் தீப்பொறி நம் ஆன்மாக்களில் பற்றியெரிய அனுமதித்தால், நாம் முற்றிலும் புதியவர்களாக மாற முடியும்.

நெருப்புக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் உண்டு. அதன் வெப்பம் நமக்குக் கதகதப்பைத் தருகிறது; அதன் ஒளி இருளில் நாம் காண உதவுகிறது; அதன் ஆற்றல் பல்வேறு வழிகளில் சக்தியை உருவாக்கி நம் அன்றாட வாழ்வுக்கு உதவுகிறது. இறையருளும் அவ்வாறே செயல்படுகிறது. கடவுளின் அருள் குளிர்ந்துபோன நம் இதயங்களை மாற்றுகிறது; வாழ்வின் இருளினூடே நம்மை வழிநடத்துகிறது; பயனுள்ள வாழ்க்கை வாழ நமக்குத் தேவையான அனைத்தையும் வழங்குகிறது.

உலகில் தீ மூட்ட வந்ததாக மட்டும் இயேசு கூறவில்லை என்பதைக் கவனிப்பது சுவாரசியமானது; மாறாக, அது இப்போதே கொழுந்துவிட்டு எரிய வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் கூறினார். நம் ஆண்டவரின் இந்த விருப்பம், சாதாரணமான, வெதுவெதுப்பான வாழ்க்கையிலிருந்து வெளியேறி, கிறிஸ்தவ நெறியை முழு அர்ப்பணிப்புடன் வாழ்வதற்கான ஓர் அழைப்பாகும். ஓரளவு மாற்றம் அடையவோ, பெருமளவு மாற்றம் அடைவதற்குக்கூடவோ மட்டுமே நாம் அழைக்கப்படவில்லை. இல்லை, உலகில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும்படி கடவுளால் உருமாற்றப்பட்டு, கொழுந்துவிட்டு எரியும் நம்பிக்கையின் நெருப்புகளாக மாறவே நாம் அழைக்கப்படுகிறோம்!

இன்று, உங்கள் ஆன்மாவிற்குள் உள்ள நெருப்பைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த நெருப்பு எவ்வளவு ஒளியுடன் எரிகிறது? ஒவ்வொரு நாளும் அந்த நெருப்பை நீங்கள் பேணி வளர்க்க வேண்டும்; முழுமையான அர்ப்பணிப்புடன் அதை ஊதி, கொழுந்துவிட்டு எரியச் செய்ய வேண்டும். நீங்கள் எத்தகைய சுடர்விடும் நெருப்பாக இருக்க வேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறாரோ, அத்தகைய நெருப்பாக மாற முயலுங்கள். அப்போது இறையருளால் நீங்கள் எவ்வளவு முழுமையாக உருமாற்றம் அடைய முடியும் என்பதைக் கண்டு வியப்படைவீர்கள்.

ஆண்டவரே, உமது அன்பும் இரக்கமும் தரும் ஒளியால் என் இதயத்தில் தீ மூட்டும். எனது வாழ்வில் நீர் விரும்பும் முழுமையான மாற்றத்தை ஏற்கத் திறந்த மனத்துடன் இருக்க எனக்கு உதவும். அன்பு ஆண்டவரே, எதையும் எனக்கென வைத்துக்கொள்ளாமல் என்னை முழுமையாக உம்மிடம் ஒப்படைக்கிறேன். உமது விருப்பப்படி என்னைப் பயன்படுத்தும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

ஞாயிறு சிந்தனைகள்/மறையுரைகளின் மேலும் பல காணொளிகளைக் காண இங்கே சொடுக்கவும்

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர் – புனித மாக்சிமிலியன் மரிய கோல்பே, அருள்பணியாளர் மற்றும் மறைசாட்சி
இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், திருவழிபாட்டு நினைவுநாளாகக் கொண்டாடப்படுவதில்லை

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

சிறப்புப் படம்: இத்தாலியின் சிசிலியிலுள்ள செஃபாலூ பேராலயத்தின் அரைவட்டக் கவிகைமாடத்தில் அனைத்தையும் ஆளும் கிறிஸ்துவின் திருவுருவம். பைசாந்தியப் பாணியிலான வண்ணக்கல் பதிப்போவியம், Wikimedia Commons வழியாக