செப்டம்பர் 19, 2022
பொதுக்காலம் இருபத்தைந்தாம் வாரத்தின் திங்கள்
இன்றைய வாசகங்கள்
புனித ஜனுவாரியுஸ், ஆயரும் மறைசாட்சியும்—விருப்ப நினைவு

“விளக்கை ஏற்றுகிற எவரும் அதை ஒரு பாத்திரத்தால் மூடுவதுமில்லை, கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை; மாறாக, உள்ளே வருவோர் அதன் ஒளியைக் காணும்படி அதை விளக்குத் தண்டின்மீது வைக்கிறார்.” லூக்கா 8:16
நாம் அனைவரும் “ஒளியைக் காண” வேண்டும். பிறர் நமக்குக் கிறிஸ்துவின் ஒளியைச் சுடர்விடச் செய்பவர்களாக வாழும்போது இது நிகழ்கிறது. அதுபோலவே, நாம் கிறிஸ்துவின் ஒளியை வெளிப்படுத்தும் முன்மாதிரிகளாக வாழும்போது, நம்மைச் சுற்றியிருப்போரும் “ஒளியைக் காண்கிறார்கள்.”
தேவையில் இருக்கும் உலகிற்குக் கிறிஸ்துவின் ஒளியாக விளங்குவது நம் கடமை என்பதை இந்தப் பகுதி வெளிப்படுத்துகிறது. நம் இதயங்களில் கிறிஸ்துவின் சுடரை ஏற்றும்போது, அதன் விளைவாகப் பிறர் காணும்படி கிறிஸ்து நம் வழியாக ஒளிர்கிறார் என்பது இந்தப் பகுதியிலிருந்து தெளிவாகிறது. “விளக்கை ஏற்றுகிற எவரும் அதை மூடுவதுமில்லை…” என்று இயேசு கூறுகிறார். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நீங்கள் கிறிஸ்துவின் ஒளியால் ஒளிரவில்லை என்றால், அதற்குக் காரணம் நீங்கள் அவரை மறைத்து வைத்திருப்பது அல்ல; உங்கள் ஆன்மாவில் அவர் சுடர்விட்டு எரியாததே காரணம். உங்கள் ஆன்மாவில் அவர் சுடர்விட்டு எரியும்போது, அந்த ஒளியை அடக்கி வைக்க முடியாது.
கிறிஸ்துவுடனான நம் உறவைப் பகுத்தறிய இந்த அடிப்படை உண்மை பெரிதும் உதவுகிறது. அடிப்படையில், இயேசு நம் வாழ்வில் உயிரோடு இருக்கிறார் என்றால், நாம் அவருடன் உண்மையான அன்புறவில் வாழ்கிறோம் என்றால், நம்மைச் சுற்றியிருப்போரின் வாழ்வில் அதன் தாக்கத்தை நம்மால் காண முடியும். அந்த ஒளி பிறர்மீது வீசுவதை நம்மால் காண முடியும். நம் வழியாகக் கிறிஸ்து ஒளிர்வதால் ஏற்படும் தாக்கம், நம் சொந்த ஆன்மாவைக் காட்டும் கண்ணாடிபோல் இருக்கும்.
இன்று, உங்களைச் சுற்றியிருப்போரை நினைத்துப் பாருங்கள். கிறிஸ்துவின்மீது நீங்கள் கொண்டுள்ள அன்பு அவர்களுடைய வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற கேள்வியைச் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வழியாகப் பிறர் கிறிஸ்துவை அன்பு செய்ய ஈர்க்கப்படுவதைக் காண்கிறீர்களா? இல்லையெனில், உங்கள் உள்ளத்தை உற்றுநோக்கி, இறையன்பின் நெருப்பை மீண்டும் மூட்ட முயலுங்கள்.
ஆண்டவரே, என்னுள் வந்து சுடர்விட்டு எரியும்; உமது அன்பால் என் இதயத்தைப் பற்றியெரியச் செய்யும். பலரையும் உம்மிடம் ஈர்க்கும் வகையில் என் இதயம் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாக மாற வேண்டுமென விரும்புகிறேன். அன்பு ஆண்டவரே, உமது விருப்பப்படி என்னைப் பயன்படுத்தும். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்
இன்றைய புனிதர்: புனித ஜனுவேரியார், ஆயரும் மறைசாட்சியும்
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்




