நவம்பர் 18, 2022
பொதுக்காலத்தின் முப்பத்துமூன்றாம் வாரத்தின் வெள்ளிக்கிழமை
இன்றைய வாசகங்கள்
திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல் பேராலயங்களின் அர்ப்பணிப்பு—விருப்ப நினைவு
புனித ரோஸ் பிலிப்பீன் துஷேன், கன்னி—அமெரிக்க ஐக்கிய நாடுகளில் விருப்ப நினைவு

இயேசு கோவில் வளாகத்திற்குள் நுழைந்து, அங்கு பொருள்களை விற்றுக்கொண்டிருந்தவர்களை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், “என் இல்லம் இறைவேண்டலின் இல்லமாக இருக்கும் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்.” என்றார். லூக்கா 19:45-46
இந்தப் பகுதி, இயேசு நீண்ட காலத்திற்கு முன்பு செய்த ஒரு செயலை மட்டுமல்ல, இன்று அவர் செய்ய விரும்புவதையும் வெளிப்படுத்துகிறது. மேலும், இதை அவர் இரண்டு வழிகளில் செய்ய விரும்புகிறார்: நமது உலகம் என்னும் கோவிலுக்குள் இருக்கும் தீமை அனைத்தையும் வேரோடு அகற்ற விரும்புகிறார்; நமது இதயங்கள் என்னும் கோவிலுக்குள் இருக்கும் தீமை அனைத்தையும் வேரோடு அகற்றவும் விரும்புகிறார்.
முதலாவது கருத்தைப் பொறுத்தவரை, வரலாறு நெடுகிலும் பலருடைய தீமையும் பேராசையும் நமது திருஅவையிலும் உலகிலும் ஊடுருவியுள்ளன என்பது தெளிவாகிறது. இது புதிதல்ல. திருஅவைக்குள் இருப்பவர்களாலும், சமுதாயத்தினராலும், குடும்பத்தினராலும்கூட ஏதோ ஒரு வகையில் அனைவரும் மனக்காயத்தைச் சந்தித்திருக்க வாய்ப்புள்ளது. நாம் அன்றாடம் சந்திப்பவர்கள் குறையற்றவர்களாக இருப்பார்கள் என்று இயேசு வாக்களிக்கவில்லை. ஆனால் தீமையைத் தீவிரமாக எதிர்கொண்டு அதை வேரோடு அகற்றுவதாக அவர் வாக்களிக்கிறார்.
இரண்டாவதும் மிக முக்கியமானதுமான கருத்தைப் பொறுத்தவரை, இந்தப் பகுதியை நமது சொந்த ஆன்மாவுக்கான ஒரு பாடமாக நாம் காண வேண்டும். ஒவ்வோர் ஆன்மாவும் கடவுளின் மாட்சிக்காகவும் அவரது திருவுளத்தை நிறைவேற்றுவதற்காகவும் மட்டுமே ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய ஒரு கோவில். எனவே, நம் ஆண்டவர் நமக்குள் நுழைந்து, நமது ஆன்மாக்களில் உள்ள தீமையையும் அழுக்கையும் காண நாம் அனுமதித்தால், இந்தப் பகுதி இன்று நிறைவேறுகிறது. இதைச் செய்வது எளிதாக இல்லாமல் இருக்கலாம்; உண்மையான தாழ்ச்சியும் சரணடைதலும் இதற்குத் தேவைப்படும். ஆனால் இறுதியில் நம் ஆண்டவர் நம்மைக் கழுவித் தூய்மைப்படுத்துவார்.
இயேசு பல வழிகளில் தூய்மைப்படுத்த விரும்புகிறார் என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள். திருஅவை முழுவதையும், ஒவ்வொரு சமுதாயத்தையும் சமூகத்தையும், உங்கள் சொந்தக் குடும்பத்தையும், குறிப்பாக உங்கள் சொந்த ஆன்மாவையும் தூய்மைப்படுத்த அவர் விரும்புகிறார். இயேசுவின் புனிதச் சினம் வல்லமையுடன் செயல்பட அனுமதிப்பதற்கு அஞ்சாதீர்கள். எல்லா நிலைகளிலும் தூய்மைப்படுத்துதல் நிகழ இறைவேண்டல் செய்யுங்கள்; இயேசு தமது பணியை நிறைவேற்ற அனுமதியுங்கள்.
ஆண்டவரே, எங்கள் உலகமும், எங்கள் திருஅவையும், எங்கள் குடும்பங்களும், அனைத்திற்கும் மேலாக என் ஆன்மாவும் தூய்மையாக்கப்பட வேண்டுமென்று உம்மிடம் மன்றாடுகிறேன். உம்மை மிகவும் வருத்தமடையச் செய்வது எது என்பதை எனக்கு வெளிப்படுத்த, இன்று என்னிடம் வருமாறு உம்மை அழைக்கிறேன். என் இதயத்தில் உமக்கு உகந்ததல்லாத அனைத்தையும் வேரோடு அகற்றுமாறு உம்மை அழைக்கிறேன். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
கிறிஸ்து அரசருக்கு நவநாள் செபம்
பாரம்பரியமாகக் கிறிஸ்து அரசர் பெருவிழாவிற்கு ஒன்பது நாள்களுக்கு முன்
நவம்பர் 11–19 வரை நாள்தோறும் செபிக்கப்படும் நவநாள் செபம்
எங்கள் திருவருகைக் கால வளங்களைப் பாருங்கள்!
அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்
இன்றைய புனிதர்கள் –
திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல் பேராலயங்களின் அர்ப்பணிப்பு
புனித ரோஸ் பிலிப்பீன் துஷேன், கன்னி
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்




