தமிழ்

கிறிஸ்து அனுப்பும் பணியில்

டிசம்பர் 3, 2022
திருவருகைக் காலத்தின் முதல் வாரம் சனிக்கிழமை
இன்றைய வாசகங்கள்

புனித பிரான்சிஸ் சவேரியார், அருள்பணியாளர்—நினைவு

காணொளி

“அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால், தமது அறுவடைக்கு வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்.” மத்தேயு 9:37–38

கடவுள் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்? உங்கள் பணி என்ன? ஆர்வமிக்க கிறிஸ்தவர்கள் சிலர், புகழ்பெற்ற நற்செய்தி அறிவிப்பாளராக வேண்டும் என்று கனவு காணலாம். எல்லாராலும் பாராட்டப்படும் வீரமிக்க அன்புப் பணிகளைச் செய்ய வேண்டும் என்று சிலர் கனவு காணலாம். இன்னும் சிலர், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நெருக்கமாக இருந்து, மிகவும் அமைதியான, பிறர் கவனத்தை ஈர்க்காத நம்பிக்கை வாழ்வு வாழ விரும்பலாம். ஆனால், குறிப்பாக உங்களிடமிருந்து கடவுள் என்ன எதிர்பார்க்கிறார்?

மேலுள்ள பகுதியில், “தமது அறுவடைக்கு வேலையாள்கள்” வேண்டி மன்றாடுமாறு இயேசு தம் சீடர்களை வலியுறுத்துகிறார். நம் ஆண்டவர் குறிப்பிடும் அந்த “வேலையாள்களில்” நீங்களும் ஒருவர் என்பதை உறுதியாக நம்பலாம். இந்தப் பணி அருள்பணியாளர்கள், துறவறத்தார், முழுநேர நற்செய்திப் பணியாற்றும் பொதுநிலையினர் போன்ற மற்றவர்களுக்கானது என்று நினைப்பது எளிது. தங்களால் அளிக்கக்கூடியது பெரிதாக ஒன்றுமில்லை என்று பலரும் எளிதில் முடிவு செய்துவிடுகிறார்கள். ஆனால், இது உண்மைக்கு முற்றிலும் மாறானது.

தனிச்சிறப்பும் மாட்சியும் நிறைந்த வழிகளில் கடவுள் உங்களைப் பயன்படுத்த விரும்புகிறார். ஆம், “தனிச்சிறப்பும் மாட்சியும் நிறைந்த வழிகளில்!” அடுத்ததாக மிகவும் புகழ்பெறும் YouTube நற்செய்தி அறிவிப்பாளராக நீங்கள் ஆவீர்கள் என்றோ, புனித அன்னை தெரேசாவைப் போல உலகின் கவனத்தை ஈர்ப்பீர்கள் என்றோ இதற்குப் பொருளல்ல. ஆனால், கடவுள் உங்களிடம் எதிர்பார்க்கும் பணி, முற்காலத்தில் வாழ்ந்த அல்லது இன்று வாழ்கின்ற மிகப் பெரிய புனிதர்கள் எவருடைய பணியையும் போலவே உண்மையானதும் முக்கியமானதுமாகும்.

வாழ்வின் புனிதம் இறைவேண்டலில் மட்டுமல்ல, செயலிலும் கண்டறியப்படுகிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் இறைவேண்டல் செய்து, கிறிஸ்துவோடு இன்னும் நெருங்கி வரும்போது, இன்றைய நற்செய்தி தொடர்ந்து கூறுவதுபோல், “நோயாளிகளைக் குணமாக்குங்கள், இறந்தோரை உயிர்ப்பியுங்கள், தொழுநோயாளிகளைத் தூய்மையாக்குங்கள், பேய்களை ஓட்டுங்கள்” (மத்தேயு 10:8) என்று அவர் உங்களை வலியுறுத்துவார். ஆனால், உங்களுக்கே உரிய அழைப்புக்கு ஏற்பத் தனித்துவமான முறையில் இதைச் செய்ய அவர் உங்களை அழைப்பார். உங்கள் அன்றாடக் கடமையைப் புறக்கணிக்கக் கூடாது. அப்படியானால், அன்றாடம் நீங்கள் சந்திப்பவர்களில் நோயாளிகள், இறந்தோர், தொழுநோயாளிகள், பேய்பிடித்தோர் யார்? ஏதோ ஓர் அளவில், இவர்கள் அனைவரும் உங்களைச் சுற்றியே இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, “தொழுநோயாளிகளாக” இருப்பவர்களை எண்ணிப் பாருங்கள். இவர்களே சமூகத்தால் “ஒதுக்கப்பட்டவர்கள்.” நம் உலகம் கடுமையாகவும் கொடூரமாகவும் இருக்கக்கூடும்; சிலர் தாங்கள் வழிதவறித் தனிமையில் இருப்பதாக உணரலாம். உங்களுக்குத் தெரிந்தவர்களில் இந்த நிலையில் இருப்பவர்கள் யார்? சிறிதளவு ஊக்கமும் புரிந்துகொள்ளுதலும் பரிவும் தேவைப்படுபவர்கள் யார்? வேறு யாருக்கும் கொடுக்காத ஓர் அன்றாடக் கடமையைக் கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ளார். அதனால், உங்கள் அன்பு தேவைப்படும் சிலர் இருக்கிறார்கள். அவர்களைத் தேடுங்கள், அவர்களை அணுகுங்கள், கிறிஸ்துவை அவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள், அவர்களுக்குத் துணையாக இருங்கள்.

பிறருக்குக் கிறிஸ்துவாக இருக்கும்படி உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள, தனிச்சிறப்பும் மாட்சியும் நிறைந்த இந்த அழைத்தலைப் பற்றி இன்று சிந்தியுங்கள். இந்த அன்பின் கடமையை ஏற்றுக்கொள்ளுங்கள். கிறிஸ்துவின் வேலையாளாக இருக்க அழைக்கப்பட்டவராக உங்களைக் காணுங்கள். உங்கள் வாழ்வில் இந்தப் பணியை எந்த வகையில் வாழ்ந்து நிறைவேற்ற வேண்டியிருந்தாலும், அதை முழுமையாகவும் மாட்சிமையாகவும் நிறைவேற்ற உங்களை அர்ப்பணியுங்கள்.

என் அன்பு ஆண்டவரே, உமது தெய்வீகப் பணிக்கு என்னை அர்ப்பணிக்கிறேன். என் வாழ்வில் உம்மையும் உமது திருவுளத்தையும் தேர்ந்துகொள்கிறேன். அன்பு ஆண்டவரே, உமது அன்பும் இரக்கமும் மிகவும் தேவைப்படுவோரிடம் என்னை அனுப்பும். என்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்வில் மகிமைமிக்கதும் மீட்பளிப்பதுமான உமது அருளை அனுபவிக்கும் பொருட்டு, அந்த அன்பையும் இரக்கத்தையும் அவர்களிடம் எவ்வாறு கொண்டுசெல்ல முடியும் என்பதை அறிய எனக்கு உதவும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

அமல உற்பவ நவநாள் செபம்
நவம்பர் 29-டிசம்பர் 7

திருவருகைக்காலத்திற்கான எங்கள் அனைத்து வளங்களையும் காண்க

புனித அந்திரேயாவின் கிறிஸ்துமஸ் நவநாள் செபம்
கீழே உள்ள புனித அந்திரேயாவின் கிறிஸ்துமஸ் நவநாள் செபத்தை, புனித அந்திரேயாவின் திருவிழாவான நவம்பர் 30 முதல் கிறிஸ்துமஸ் பெருவிழாவுக்கு முந்தைய நாள் வரை, தினமும் 15 முறை செபிப்பது மரபாக உள்ளது.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

திருவருகைக்காலத்திற்கான இறைவாக்குத் தியானங்கள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர் – புனித பிரான்சிஸ் சவேரியார், அருள்பணியாளர்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: திருத்தூதர்கள் நற்கருணை உட்கொள்ளுதல். ஓவியர்: லூக்கா சின்யோரெல்லி, விக்கிமீடியா காமன்ஸ் வழியாக