தமிழ்

உண்மையான மேன்மை

மார்ச் 7, 2023
தவக்காலத்தின் இரண்டாம் வாரச் செவ்வாய்க்கிழமை
இன்றைய வாசகங்கள்

புனிதர்கள் பெர்பெத்துவா, பெலிசித்தா, மறைசாட்சிகள்—நினைவு

காணொளி

“உங்களுள் பெரியவர் உங்களுக்குப் பணியாளராக இருக்க வேண்டும். தம்மைத்தாமே உயர்த்துகிறவர் தாழ்த்தப்படுவார்; தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார்.” மத்தேயு 23:11–12

நீங்கள் உண்மையிலேயே மேன்மையுடையவராக இருக்க விரும்புகிறீர்களா? உங்கள் வாழ்க்கை பிறருடைய வாழ்வில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? மேன்மைக்கான இந்த ஆவலை நம் ஆண்டவர் நமக்குள் ஆழமாகப் பதித்துள்ளார்; அது ஒருபோதும் மறைந்துபோகாது. நரகத்தில் என்றென்றும் வாழ்பவர்கள்கூட இயல்பாகத் தங்களுக்குள் இருக்கும் இந்த ஆவலைப் பற்றிக்கொண்டிருப்பார்கள். அந்த ஆவல் ஒருபோதும் நிறைவேறாது என்பதால், அதுவே அவர்களுக்கு நித்திய வேதனையின் காரணமாக இருக்கும். அத்தகைய கதிக்கு நாம் ஆளாகாமல் இருப்பதை உறுதிசெய்யும் ஓர் உந்துதலாக, இந்த உண்மையைச் சில வேளைகளில் சிந்தித்துப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

இன்றைய நற்செய்தியில், மேன்மையை அடைவதற்கான திறவுகோல்களில் ஒன்றை இயேசு நமக்குத் தருகிறார். “உங்களுள் பெரியவர் உங்களுக்குப் பணியாளராக இருக்க வேண்டும்.” பணியாளராக இருப்பது என்பது உங்களைவிடப் பிறருக்கு முன்னுரிமை கொடுப்பதாகும். உங்கள் தேவைகளில் அவர்கள் கவனம் செலுத்தும்படி செய்ய முயல்வதற்குப் பதிலாக, அவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகும். இதைச் செய்வது கடினம்.

வாழ்க்கையில் முதலில் நம்மைப் பற்றியே நினைப்பது மிகவும் எளிது. ஆனால் முக்கியமான உண்மை என்னவென்றால், நடைமுறையில் நம்மைவிடப் பிறருக்கு முன்னுரிமை கொடுக்கும்போது, ஒரு வகையில் நம்மையே “முதலிடத்தில்” வைக்கிறோம் என்பதுதான். ஏனெனில், பிறருக்கு முதலிடம் கொடுக்க நாம் செய்யும் தேர்வு அவர்களுக்கு நன்மை தருவது மட்டுமல்ல; நமக்கும் மிகச் சிறந்ததாக இருப்பது அதுவே. நாம் அன்பிற்காகப் படைக்கப்பட்டோம். பிறருக்குப் பணிசெய்யப் படைக்கப்பட்டோம். நமக்கு என்ன செலவாகும் என்று கணக்குப் பார்க்காமல் நம்மையே பிறருக்குக் கொடுப்பதற்காகப் படைக்கப்பட்டோம். ஆனால், இவ்வாறு செய்யும்போது நாம் நம்மையே இழந்துவிடுவதில்லை. மாறாக, நம்மையே பிறருக்குக் கொடுத்து, அவர்களுக்கு முதலிடம் கொடுக்கும்போதுதான் நாம் யார் என்பதை உண்மையில் கண்டறிகிறோம்; நாம் எவ்வாறு இருக்கும்படி படைக்கப்பட்டோமோ அவ்வாறு ஆகிறோம். நாம் அன்பாகவே மாறுகிறோம். அன்பு செய்பவர் மேன்மையுடையவர்… மேன்மையுடையவரைக் கடவுள் உயர்த்துகிறார்.

தாழ்ச்சியின் மாபெரும் மறைபொருளையும் அதற்கான அழைப்பையும் இன்று சிந்தித்துப் பாருங்கள். பிறருக்கு முதலிடம் கொடுப்பதும் அவர்களுக்குப் பணியாளராகச் செயல்படுவதும் உங்களுக்குக் கடினமாக இருந்தாலும், அவ்வாறே செய்யுங்கள். மற்ற அனைவருக்கும் முன்பாக உங்களைத் தாழ்த்திக்கொள்ளத் தீர்மானியுங்கள். அவர்களுடைய அக்கறைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். அவர்களுடைய தேவைகளில் கவனம் செலுத்துங்கள். அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். அவர்கள்மீது பரிவு காட்டுங்கள்; அதை முழுமையாகச் செய்ய ஆயத்தமாகவும் விருப்பமுள்ளவர்களாகவும் இருங்கள். இவ்வாறு செய்தால், உங்கள் இதயத்தின் ஆழத்தில் இருக்கும் மேன்மைக்கான ஆவல் நிறைவேறும்.

தாழ்ச்சியுள்ள என் ஆண்டவரே, உமது தாழ்ச்சியின் சாட்சியத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். எங்கள் பாவங்களின் விளைவான துன்பத்தையும் மரணத்தையும் நீரே அனுபவிக்க உம்மை ஒப்புக்கொடுக்கும் அளவுக்கு, எல்லா மனிதருக்கும் முதலிடம் கொடுக்க நீர் தேர்ந்துகொண்டீர். அன்பு ஆண்டவரே, உமது நிறைவான அன்பைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள நீர் என்னைப் பயன்படுத்தும் பொருட்டு, தாழ்ச்சியுள்ள ஓர் இதயத்தை எனக்குத் தந்தருளும்.  இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

சிலுவையடியில் 40 நாள்கள்:
நம் அருள்மிகு அன்னையின் இதயத்திலிருந்து ஓர் அன்புப் பார்வை
சிந்தனை பதினொன்று – நாடுகடந்து வாழ்தல்
(தவக்காலத்தின் இரண்டாம் வாரம் செவ்வாய்)

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

தவக்காலத்திற்கான வளங்கள்

தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர் – புனித பெர்பெத்துவா, பெலிசித்தா ஆகிய மறைசாட்சியர்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: பேதுருவின் பாதங்களைக் கழுவும் இயேசு. ஓவியர்: ஃபோர்டு மாடக்ஸ் பிரவுன், விக்கிமீடியா காமன்ஸ் வழியாக