ஜனவரி 19, 2024
பொதுக்காலம் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை
இன்றைய வாசகங்கள்

அவர் பன்னிருவரை நியமித்து, அவர்களுக்குத் திருத்தூதர்கள் என்றும் பெயரிட்டார். அவர்கள் தம்மோடு இருக்கவும், அவர்களை மறையுரையாற்ற அனுப்பவும், பேய்களை ஓட்டும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கவும் இவ்வாறு செய்தார். மாற்கு 3:14–15
பன்னிரு திருத்தூதர்களும் முதலில் இயேசுவால் அழைக்கப்பட்டனர்; பின்னர் அதிகாரத்துடன் மறையுரையாற்ற அனுப்பப்பட்டனர். பேய்களை ஓட்டுவதற்காகவே அவர்களுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதை எவ்வாறு செய்தார்கள்? பேய்கள்மீது அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரம், ஓரளவிற்கு, மறையுரையாற்றும் அவர்களது பணியுடன் தொடர்புடையதாக இருந்தது என்பதைக் கவனிப்பது சிறப்பானது. திருத்தூதர்கள் நேரடியாகக் கட்டளையிட்டுப் பேய்களை ஓட்டிய சில நிகழ்வுகள் திருவிவிலியத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கிறிஸ்துவின் அதிகாரத்துடன் நற்செய்தியைப் பறைசாற்றுவதும் பேய்களை ஓட்டும் நேரடி விளைவைக் கொண்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பேய்கள் வீழ்ச்சியுற்ற வானதூதர்கள். ஆனால் வீழ்ச்சியுற்ற நிலையிலும், தாக்கம் செலுத்துதல், எண்ணங்களைத் தூண்டுதல் போன்ற தங்களது இயல்பான ஆற்றல்களை அவை தக்கவைத்துள்ளன. நம்மை ஏமாற்றிக் கிறிஸ்துவிடமிருந்து விலக்குவதற்காக அவை நம்முடன் தொடர்புகொள்ள முயல்கின்றன. நல்ல வானதூதர்களும் இதே இயல்பான ஆற்றலை நமது நன்மைக்காகப் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, நமது காவல் தூதர்கள் கடவுளின் உண்மைகளையும் அவரது அருளையும் நமக்கு எடுத்துரைக்க இடைவிடாது முயல்கிறார்கள். நன்மைக்கும் தீமைக்கும் இடையே வானதூதர்கள் நடத்தும் போர் உண்மையானது; கிறிஸ்தவர்களாகிய நாம் இந்த உண்மையை உணர்ந்திருக்க வேண்டும்.
சாத்தானையும் அவனது பேய்களையும் எதிர்கொள்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, உண்மைக்குச் செவிசாய்த்து, கிறிஸ்துவின் அதிகாரத்துடன் அதைப் பறைசாற்றுவதாகும். மறையுரையாற்றுவதற்குத் திருத்தூதர்களுக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் அவர்களது திருமுழுக்கு மற்றும் உறுதிப்பூசுதலின் வழியாக நற்செய்தியின் செய்தி ஒப்படைக்கப்பட்டுள்ளது; அவர்கள் அதைப் பல்வேறு வழிகளில் பறைசாற்ற வேண்டும். அந்த அதிகாரத்துடன் இறையாட்சியை மலரச் செய்ய நாம் இடைவிடாது முயல வேண்டும். அவ்வாறு செய்வது சாத்தானின் அரசு குறைந்துபோவதில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நற்செய்தியைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் உங்கள் கடமையைப் பற்றி இன்று சிந்தியுங்கள். சில வேளைகளில் இயேசு கிறிஸ்துவின் செய்தியை வெளிப்படையாகப் பகிர்வதன் மூலம் இது நிகழ்கிறது; மற்ற வேளைகளில் நமது செயல்கள் மற்றும் நற்பண்புகள் வழியாக அந்தச் செய்தி இன்னும் அதிகமாகப் பகிரப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது; உண்மையான அதிகாரத்துடன் அப்பணியை நிறைவேற்ற அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவிடமிருந்து வரும் அந்த அதிகாரம் செயல்படுத்தப்படும்போது, இறையாட்சி வளர்கிறது, தீயோனின் செயல்பாடு முறியடிக்கப்படுகிறது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.
எல்லாம் வல்ல என் ஆண்டவரே, அன்றாடம் நான் சந்திப்பவர்களுக்கு உமது மீட்புச் செய்தியின் உண்மையை அறிவிக்க நீர் எனக்கு அளித்துள்ள அருளுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். சொல்லாலும் செயலாலும் போதிக்கும் என் பணியை நிறைவேற்றவும், நீர் எனக்கு அளித்துள்ள மென்மையான, அதே வேளையில் வல்லமைமிக்க அதிகாரத்துடன் அதைச் செய்யவும் எனக்கு உதவியருளும். அன்பு ஆண்டவரே, உமது பணிக்காக என்னையே ஒப்புக்கொடுக்கிறேன். உமது திருவுளத்தின்படி என்னை நடத்தும். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
வாழ்வுக்கான 9 நாள் நவநாள் செபம்
ஜனவரி 19–27
முதல் நாள்: ஜனவரி 19
2024 தவக்காலத்திற்கான புதுவரவு!
பாலைநிலத்தில் 40 நாள்கள்:
நம் ஆண்டவருடன் ஒரு தவக்காலப் பயணம்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்




