ஜூலை 21, 2020
பொதுக்காலம் பதினாறாம் வாரம் செவ்வாய்க்கிழமை
இன்றைய வாசகங்கள்
பிரிந்திசி நகர்ப் புனித லாரன்ஸ், அருள்பணியாளரும் மறைவல்லுநரும்—விருப்ப நினைவு

“என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?” பின்னர் தம் சீடர்களை நோக்கிக் கையை நீட்டி, “இதோ, என் தாயும் என் சகோதரர்களும்! ஏனெனில் விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகிற எவரும் என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்றார். மத்தேயு 12:48-50
அருள்மிகு கன்னி மரியாவைப் பற்றிப் பேச இந்தப் பகுதி ஓர் அருமையான வாய்ப்பை அளிக்கிறது. இந்தப் பகுதியை வாசிக்கும் சிலர், இயேசு ஏதோ ஒரு விதத்தில் தம் அன்னையிடமிருந்து தம்மை விலக்கிக்கொண்டார் என்ற தவறான எண்ணத்தில் விழுந்துவிடுகிறார்கள். அவருடைய வாழ்வில் மரியாவுக்கு இருந்த தனிச்சிறப்பான பங்கை அவருடைய கூற்று புறக்கணிப்பதாக அவர்கள் முடிவுசெய்வதுபோல் தோன்றுகிறது. இது உண்மைக்கு முற்றிலும் மாறானது.
உண்மையில், அவருடைய கூற்று வேறு எதையும்விட மரியாவின் தாய்மையையே உறுதிப்படுத்துகிறது. ஏன்? ஏனெனில், ஒருவர் எவ்வாறு தம் குடும்பத்தின் உண்மையான உறுப்பினராகிறார் என்பதைப் பற்றியே அவர் பேசுகிறார். ஒருவர் “விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும்போது” அது நிகழ்கிறது.
அந்த வரியைச் சிந்தித்துப் பாருங்கள். விண்ணகத் தந்தையின் திருவுளத்தை மரியாவைவிடச் சிறப்பாக நிறைவேற்றியவர் யார்? அருள்மிகு கன்னி மரியாவைவிட அனைத்திலும் கீழ்ப்படிந்தவர் யார்? வேறு யாருமில்லை. தம் வாழ்நாள் முழுவதும் அவர் முழுமையான கீழ்ப்படிதலுடன் செயல்பட்டார். எனவே, இயேசுவின் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருப்பதற்கான நிபந்தனையை அவர் நிறைவாகப் பூர்த்திசெய்கிறார்.
இந்தப் பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று இதுவே: இயேசுவுடன் நம் அருள்மிகு அன்னை கொண்டிருந்த உறவு இரண்டு நிலைகளில் வாழப்பட்டது. முதலாவதாக, அவருக்கு அருளப்பட்ட உடல்சார்ந்த தாய்மை இருந்தது. இது வியத்தகு ஓர் அருள்; இதன் பொருட்டு அவர் மிகுந்த வணக்கத்திற்குரியவர். ஆனால், அவர் பேறுபெற்றவராக இருப்பதற்கு அவருடைய உடல்சார்ந்த தாய்மை முதன்மைக் காரணமாக இருக்கவில்லை. முதன்மைக் காரணம் அவருடைய ஆன்மிகத் தாய்மையின் விளைவாக அமைந்தது. இந்த ஆன்மிகத் தாய்மையையே மேலுள்ள பகுதியில் காண்கிறோம். அனைத்திலும் கடவுளுக்கு அவர் அளித்த முழுமையான “ஆம்” என்பதன் விளைவே இது. எல்லாத் தலைமுறைகளிலும் அவர் வணக்கத்திற்குரியவராகவும் “பேறுபெற்றவர்” என்று அழைக்கப்பட வேண்டியவராகவும் இருப்பதற்கு இதுவே முதன்மைக் காரணம்.
உங்கள் வாழ்வில் நம் அருள்மிகு அன்னை வகிக்கும் பங்கை இன்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் அவரை வணங்கவும், அவரது முன்மாதிரியைப் பின்பற்றவும், அவரை உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக்கொள்ளவும் கடவுள் விரும்புகிறார். நீங்கள் இயேசுவின் குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதால், அவரை உங்கள் ஆன்மிக அன்னையாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். உங்கள் வாழ்வில் தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிய நீங்கள் முயன்றால், இயேசுவின் வாழ்வின் ஆசிகளிலும் பங்குபெறுவீர்கள். அவருடைய அன்னையை உங்களுக்கும் அன்னையாகப் பெறுவது அந்த மாபெரும் ஆசிகளில் ஒன்றாகும்.
ஆண்டவரே, அனைத்திலும் உமக்கும் உமது திருவுளத்திற்கும் கீழ்ப்படிய நான் உண்மையாகவே விரும்புகிறேன். என் வாழ்வுக்கெனத் தந்தை வகுத்துள்ள நிறைவான திட்டத்தை ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். அந்தத் திருவுளத்தின்படி வாழ்ந்து, உமது இறைவாழ்வில் பங்குபெறவும், உமது குடும்பத்தின் முழுமையான உறுப்பினராகவும் எனக்கு உதவியருளும். அந்தக் குடும்பத்தில், உமது அன்னையை என் சொந்த அன்னையாக ஏற்றுக்கொள்ள எனக்கு உதவியருளும். அன்பு அன்னையே, எனக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்
இன்றைய புனிதர் – பிரிந்திசி நகர்ப் புனித லாரன்ஸ், அருள்பணியாளரும் மறைவல்லுநரும்
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்




