ஜூலை 27, 2020
பொதுக்காலத்தின் பதினேழாம் வாரம் திங்கள்
இன்றைய வாசகங்கள்

“விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாகும். ஒருவர் அதை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அது எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனால் முழுமையாக வளர்ந்ததும் செடிகளிலேயே மிகப் பெரியதாகிறது. அது பெரிய புதர்ச்செடியாக வளர்கிறது; வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்குகின்றன.” மத்தேயு 13:31b-32
மற்றவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிடும்போது நம் வாழ்க்கை அவ்வளவு முக்கியமானதல்ல என்று நாம் அடிக்கடி உணர்கிறோம். நம்மைவிட அதிக “அதிகாரமும்” “செல்வாக்கும்” உள்ளவர்களை நாம் அடிக்கடி பார்க்கிறோம். அவர்களைப்போல் ஆக வேண்டும் என்று கனவு காண்கிறோம். அவர்களிடம் இருக்கும் பணம் என்னிடம் இருந்தால் எப்படி இருக்கும்? அல்லது அவர்களுடைய சமூக அந்தஸ்து எனக்கு இருந்தால்? அல்லது அவர்களுடைய வேலை எனக்கு இருந்தால்? அல்லது அவர்களைப்போல் நானும் பிரபலமாக இருந்தால்? இப்படி, “இவ்வாறு இருந்தால் எப்படி இருக்கும்?” என்ற எண்ணங்களின் வலையில் நாம் அடிக்கடி விழுந்துவிடுகிறோம்.
உங்கள் வாழ்க்கையின் வழியாகப் பெரிய காரியங்களைச் செய்ய இறைவன் விரும்புகிறார் என்ற உறுதியான உண்மையை மேலுள்ள பகுதி வெளிப்படுத்துகிறது! மிகச் சிறிய விதை மிகப் பெரிய புதர்ச்செடியாக வளர்கிறது. இது ஒரு கேள்வியை எழுப்புகிறது: “சில வேளைகளில் நீங்கள் மிகச் சிறிய விதையைப்போல் உணர்கிறீர்களா?”
சில வேளைகளில் நம்மை முக்கியமற்றவர்களாக உணர்வதும், நாம் “இன்னும் மேலானவர்களாக” இருந்திருக்கலாமே என்று விரும்புவதும் இயல்புதான். ஆனால் இது உலகப்போக்கான, தவறான ஒரு பகற்கனவே தவிர வேறொன்றுமில்லை. உண்மையில், நம் ஒவ்வொருவராலும் நமது உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இல்லை, நம்மைப் பற்றிய செய்தி இரவு செய்திகளில் இடம்பெறாமல் போகலாம்; நமது சிறப்புக்காகத் தேசிய விருதுகளும் கிடைக்காமல் போகலாம். ஆனால் இறைவனின் பார்வையில், நமது பகற்கனவுகளில் நினைத்துப் பார்க்கக்கூடியவற்றையும் கடந்த ஆற்றல் நம்மிடம் இருக்கிறது.
இதைச் சரியான கண்ணோட்டத்தில் பாருங்கள். மேன்மை என்பது என்ன? கடுகு விதையைப்போல் இறைவனால் “செடிகளிலேயே மிகப் பெரியதாக” மாற்றப்படுவது என்றால் என்ன? நம் வாழ்க்கைக்கென இறைவன் வைத்திருக்கும் துல்லியமான, நிறைவான, மாட்சிமைமிக்க திட்டத்தை நிறைவேற்றும் வியத்தகு பேறு நமக்கு அளிக்கப்படுகிறது என்பதே அதன் பொருள். இந்தத் திட்டமே மிகச் சிறந்த, மிக நிறைவான நிலைவாழ்வுக்குரிய கனிகளைத் தரும். நிச்சயமாக, இவ்வுலகில் நமது பெயர் பிரபலமாகாமல் போகலாம். அதனால் என்ன?! அது உண்மையிலேயே முக்கியமா? நீங்கள் விண்ணகத்தில் இருக்கும்போது, உலகம் உங்களையும் உங்கள் பங்கையும் அங்கீகரிக்கவில்லையே என்று மனம் வருந்துவீர்களா? நிச்சயமாக இல்லை. நீங்கள் எவ்வளவு புனிதமானவராக ஆனீர்கள், உங்கள் வாழ்க்கைக்கான இறைத்திட்டத்தை எவ்வளவு முழுமையாக நிறைவேற்றினீர்கள் என்பவை மட்டுமே விண்ணகத்தில் முக்கியமானவையாக இருக்கும்.
புனித அன்னை தெரேசா அடிக்கடி கூறுவார்: “நாம் வெற்றி பெறுவதற்கு அல்ல, உண்மையுள்ளவர்களாக இருப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம்.” இறைவனின் திருவுளத்திற்கு இவ்வாறு உண்மையுள்ளவர்களாக இருப்பதே முக்கியம்.
இன்று இரண்டு காரியங்களைச் சிந்தித்துப் பாருங்கள். முதலாவதாக, இறைவனின் மறைபொருளுக்கு முன் உங்கள் “சிறுமையைப்” பற்றிச் சிந்தியுங்கள். உங்களால் மட்டும் நீங்கள் ஒன்றுமில்லை. ஆனால் அந்தத் தாழ்ச்சியோடு, நீங்கள் கிறிஸ்துவிலும் அவருடைய திருவுளத்திலும் வாழும்போது அளவிட முடியாத மேன்மை உடையவர்களாக இருக்கிறீர்கள் என்ற உண்மையையும் சிந்தித்துப் பாருங்கள். அந்த மேன்மையை அடைய முயலுங்கள்; நீங்கள் என்றென்றும் ஆசிபெற்றவர்களாக இருப்பீர்கள்!
ஆண்டவரே, உம்மின்றி நான் ஒன்றுமில்லை என்பதை அறிவேன். உம்மின்றி என் வாழ்க்கைக்கு அர்த்தமில்லை. என் வாழ்க்கைக்காக நீர் வைத்திருக்கும் நிறைவான, மாட்சிமைமிக்க திட்டத்தை ஏற்றுக்கொள்ளவும், அந்தத் திட்டத்தில் நீர் என்னை அழைக்கும் மேன்மையை அடையவும் எனக்கு உதவியருளும். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்
படம்: ஹரோல்ட் காப்பிங் வரைந்த “விதைப்பவர் உவமை”



