தமிழ்

பிறருடன் ஒப்புரவாதல்

செப்டம்பர் 6, 2020
பொதுக்காலம் இருபத்துமூன்றாம் ஞாயிறு, ஆண்டு அ
இன்றைய வாசகங்கள்

“உன் சகோதரர் உனக்கு எதிராகப் பாவம் செய்தால், நீ போய், நீயும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்கூறு. அவர் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரரை நீ மீண்டும் பெற்றுக்கொண்டாய்.”  மத்தேயு 18:15

உங்களுக்கு எதிராகப் பாவம் செய்த ஒருவருடன் ஒப்புரவாவதற்கு இயேசு தரும் மூன்று படிகளில் முதலாவதை மேலுள்ள பகுதி எடுத்துரைக்கிறது.  இயேசு தரும் படிகள் இவை: 1) அந்த நபருடன் தனியாகப் பேசுங்கள். 2) அந்தச் சூழ்நிலையில் உதவுவதற்காக வேறு இருவரையோ மூவரையோ அழைத்துச் செல்லுங்கள். 3) அதைத் திருஅவையிடம் எடுத்துச் செல்லுங்கள்.  இந்த மூன்று படிகளையும் முயன்ற பின்னும் உங்களால் ஒப்புரவாக முடியாவிட்டால், “…அவரைப் பிற இனத்தவரைப் போலவோ வரிதண்டுபவரைப் போலவோ நடத்துங்கள்” என்று இயேசு கூறுகிறார்.

ஒப்புரவாகும் இந்த வழிமுறையில் முதன்மையாகவும் மிக முக்கியமாகவும் குறிப்பிட வேண்டியது இதுதான்: ஒப்புரவாக நாம் உண்மையாக முயற்சி செய்யும்வரை, பிறர் செய்த பாவத்தை வெளியில் சொல்லாமல், அதை அவர்களுக்கும் நமக்கும் இடையில் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.  இதைச் செய்வது கடினம்!  பல வேளைகளில், ஒருவர் நமக்கு எதிராகப் பாவம் செய்யும்போது, அதைப் பிறரிடம் போய்ச் சொல்ல வேண்டும் என்பதே நமக்கு முதலில் வரும் சோதனை.  மனக்காயம், கோபம், பழிவாங்கும் ஆசை அல்லது இதுபோன்ற வேறு ஏதாவது காரணத்தால் நாம் இப்படிச் செய்யலாம்.  எனவே, நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முதல் பாடம் இதுதான்: பிறர் நமக்கு எதிராகச் செய்யும் பாவங்கள், பிறரிடம் சொல்வதற்கு நமக்கு உரிமையுள்ள விவரங்கள் அல்ல; குறைந்தபட்சம் தொடக்கத்திலாவது அவ்வாறு சொல்ல நமக்கு உரிமையில்லை.

இயேசு தரும் அடுத்த முக்கியமான படிகளில் பிறரும் திருஅவையும் பங்கேற்கிறார்கள்.  ஆனால், நமது கோபத்தை வெளிப்படுத்துவதற்கோ, புறங்கூறுவதற்கோ, விமர்சிப்பதற்கோ, அவர்களைப் பொதுவில் அவமானப்படுத்துவதற்கோ அல்ல.  மாறாக, தவறு செய்தவர் தமது பாவத்தின் தீவிரத்தை உணர்ந்து மனந்திரும்ப உதவுவதற்காகவே பிறரை இதில் ஈடுபடுத்துகிறோம்.  இதற்கு நம்மிடம் தாழ்ச்சி தேவை.  அவர்கள் தங்கள் தவறை உணர்வதற்கு மட்டுமல்லாமல், மாறுவதற்கும் உதவும் தாழ்மையான முயற்சி இதற்குத் தேவைப்படுகிறது.

அவர்கள் மாறாவிட்டால், இறுதிப் படியாக அவர்களைப் பிற இனத்தவரைப் போலவோ வரிதண்டுபவரைப் போலவோ நடத்த வேண்டும்.  ஆனால், இதையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.  பிற இனத்தவரையோ வரிதண்டுபவரையோ நாம் எப்படி நடத்துகிறோம்?  அவர்கள் தொடர்ந்து மனந்திரும்ப வேண்டும் என்ற விருப்பத்துடன் அவர்களை நடத்துகிறோம்.  அவர்களைத் தொடர்ந்து மரியாதையுடன் நடத்துகிறோம்; அதே வேளையில், நாமும் அவர்களும் “ஒரே கருத்தில் இல்லை” என்பதையும் ஏற்றுக்கொள்கிறோம்.

குணமடைதலும் ஒப்புரவும் தேவைப்படும் உங்கள் உறவு எதையேனும் குறித்து இன்று சிந்தியுங்கள்.  நம் ஆண்டவர் வழங்கிய இந்தத் தாழ்மையான வழிமுறையைப் பின்பற்ற முயலுங்கள்; கடவுளின் அருள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து நிலைத்திருங்கள்.

ஆண்டவரே, எனக்கு எதிராகப் பாவம் செய்தவர்களுடன் நான் ஒப்புரவாகும்படி, தாழ்மையும் இரக்கமும் நிறைந்த இதயத்தை எனக்குத் தாரும்.  அன்பு ஆண்டவரே, நீர் என்னை மன்னித்ததுபோல நானும் அவர்களை மன்னிக்கிறேன்.  உமது நிறைவான திருவுளத்திற்கு ஏற்ப ஒப்புரவை நாடும் அருளை எனக்குத் தாரும்.  இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

படம்: ஜேம்ஸ் திசோ வரைந்த ‘திருத்தூதர்களுக்கு அறிவுரை’