தமிழ்

மூவொரு கடவுள் நம்முள் குடிகொள்ளுதல்

மே 16, 2022
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரத் திங்கள்
இன்றைய வாசகங்கள்

காணொளி

“என்னை அன்புசெய்பவர் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பார்; என் தந்தையும் அவரை அன்புசெய்வார்; நாங்கள் அவரிடம் வந்து அவரோடு குடிகொள்வோம்.”  யோவான் 14:23

குழந்தைகள் இதைப் புரிந்துகொள்வதுபோல் தெரிகிறது.  கடவுள் தங்கள் இதயங்களில் குடிகொண்டிருக்கிறார் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதுபோல் தெரிகிறது.  இதை அவர்கள் எப்படி அறிந்திருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால், அவர்கள் குழப்பத்துடன் உங்களைப் பார்த்து, எப்படிப் பதிலளிப்பது என்று தெரியாமல் இருக்கலாம்.  இருந்தாலும், கடவுள் தங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார் என்பதை எப்படியோ அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

“கடவுள் உங்களுக்குள் வந்து குடிகொள்கிறார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று யாராவது உங்களைக் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?  நமது நம்பிக்கையின் வியப்புக்குரிய இந்த மறையுண்மையை விவரிக்க உங்களுக்கும் வார்த்தைகள் கிடைக்காமல் போகலாம்.  இது உண்மை என்று நீங்கள் நம்புகிறீர்களா?  உங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் தமது உறைவிடமாக்கிக்கொள்ளக் கடவுள் விரும்புகிறார் என்று நம்புகிறீர்களா?  அப்படியானால், இது எப்படி நிகழ்கிறது?

கடவுள் நம்முள் குடிகொள்ள விரும்புகிறார் என்பதை, நம்பிக்கை என்னும் கொடையால், சிறு குழந்தைகளைப்போல் நாமும் இயல்பாகவே அறிகிறோம்.  நம் ஆன்மாக்களைத் தமக்குரியவையாக்கிக்கொள்ளவும், நம்மோடு பேசவும், நம்மை வலுப்படுத்தவும், நம்மை நடத்தி வழிகாட்டவும் அவர் விரும்புகிறார் என்பதை நாம் அறிவோம்.  கடவுள் உண்மையாகவே இருக்கிறார் என்பதையும், நம்மோடு மிகவும் ஆழமான, நெருக்கமான உறவை அவர் விரும்புகிறார் என்பதையும் நம்பிக்கை என்னும் கொடையால் நாம் அறிவோம்.  இதை நாம் இயல்பாகவே அறிவோம்.

நம்பிக்கை நம்மைப் புரிதலுக்கு இட்டுச் செல்கிறது என்பதே நற்செய்தி.  அதாவது, நமக்குள் பேசி, நம்மை நடத்தி வழிகாட்டும் கடவுளின் குரலுக்கு நாம் எந்த அளவுக்குக் கவனம் செலுத்துகிறோமோ, அந்த அளவுக்கு அவர் நம்முள் குடிகொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்குகிறோம்.  புனித அகுஸ்தினார் கூறியதுபோல, “நீ காணாததை நம்புவதே நம்பிக்கை. நீ நம்புவதைக் காண்பதே நம்பிக்கையின் கைம்மாறு.”  கடவுள் நம்முள் குடிகொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை, மேலே உள்ள கேள்விக்கான பதிலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.  கடவுள், கடவுள் மட்டுமே நமக்குத் தரக்கூடிய பதில் அது.  நமது நம்பிக்கையைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளலாம்; நம் வாழ்வில் அவரது உடனிருப்புக்குச் சான்று பகரலாம்; நம்பிக்கையின் வழியாக நம்மைச் சுற்றியிருப்போருக்கு அந்தக் கேள்விக்கான பதிலை அளிக்கலாம்.  கடவுள் எனக்குள் குடிகொண்டிருக்கிறார் என்பது எனக்கு எப்படித் தெரியும்?  இதுவே பதில்: ஏனெனில், அங்கே நான் அவரைக் காண்கிறேன்; அங்கே அவரோடு பேசுகிறேன்; அவரும் என்னோடு பேசுகிறார்.

உங்களுக்குள் வாழும் ஆண்டவரைப் பற்றி இன்று சிந்தியுங்கள்.  அவர் உங்களோடு பேச இடமளியுங்கள். மேலும் மேலும் ஆழமடையும் அந்த உரையாடலில், உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் அவரது உடனிருப்பு வளரவும், பிறருக்கு வெளிப்படவும் இடமளியுங்கள்.  கடவுள் உங்களுக்குள் குடிகொள்ள மட்டுமல்ல, உங்கள் வழியாக ஒளிரவும் விரும்புகிறார்.

அதிபுனித மூவொரு இறைவா, என் இதயத்தில் வந்து வாழ்ந்தருளும்.  என் இதயத்தை உமது உறைவிடமாக ஆக்கியருளும்.  அங்கே உம்மைக் காணவும், உம்மைச் சந்திக்கவும், உம்மோடு உரையாடவும், என் ஆன்மாவில் உம்மை அன்பு செய்யவும் எனக்கு உதவியருளும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

பாஸ்கா செபங்கள்

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: குவெர்ச்சினோ வரைந்த ‘தந்தையாகிய கடவுளும் வானதூதரும்’, Wikimedia Commons வழியாக


  Subscribe to our YouTube channel  
  to be notified about new content.