தமிழ்

துன்புறுத்தல்

மே 21, 2022
பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரம் சனிக்கிழமை
இன்றைய வாசகங்கள்

புனித கிறிஸ்டோபர் மகல்லானெஸ், அருள்பணியாளரும் மறைசாட்சியும், மற்றும் அவருடைய தோழர்களான மறைசாட்சிகள்—விருப்ப நினைவு

காணொளி

“‘எந்த அடிமையும் தன் தலைவரைவிடப் பெரியவன் அல்ல’ என்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால், உங்களையும் துன்புறுத்துவார்கள்.”  யோவான் 15:20

நீங்கள் இயேசுவைப் போல இருக்க விரும்புகிறீர்களா?  அப்படியானால், அதற்கு என்ன பொருள் என்பதை நன்கு உணர்ந்துகொள்ளுங்கள்.  நாம் கிறிஸ்துவுக்கு நெருக்கமாக வளர வளர, உலகம் நம்மை இன்னும் அதிகமாக நேசிக்கும், புரிந்துகொள்ளும் என்று நினைப்பது எளிது.  எல்லாரும் நமது புனிதத்தைக் கண்டு வியந்து பாராட்டுவார்கள் என்றும், வாழ்க்கையில் எல்லாம் நன்றாகவும் எளிதாகவும் இருக்கும் என்றும் நாம் நினைக்கலாம்.

ஆனால், உண்மை அப்படியல்ல என்பதை அறிய நாம் கிறிஸ்துவின் வாழ்க்கையைப் பார்த்தாலே போதும்.  அவர் எல்லா வகையிலும் நிறைவுள்ளவராக இருந்தார் என்பது தெளிவு.  அதன் விளைவாக, அவர் மிகுந்த பகைமையுடன் நடத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்.  அவர்கள் உண்மையிலேயே அவரைக் கொன்றார்கள் என்ற இருண்ட உண்மையைப் புரிந்துகொள்வது கடினம்.  இரவின் இருளில் அவர் கைது செய்யப்பட்டார்; கண்துடைப்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்; குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.  பின்னர் உடனடியாக அவரது தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இறைமகனுக்கு அவர்கள் ஏன் இப்படிச் செய்தார்கள்?  எல்லா வகையிலும் இவ்வளவு நிறைவுள்ளவராகவும் இரக்கமுள்ளவராகவும் இருந்த ஒருவர் ஏன் இவ்வளவு கொடூரமாக நடத்தப்பட வேண்டும்?

அவருடைய முதல் சீடர்களாக நாம் அங்கு இருந்திருந்தால், பெரும்பாலும் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்து, இடறலுற்றுக் குழம்பிப் போயிருப்போம்.  இயேசு ஏதோ தவறு செய்துவிட்டார் என்று நினைத்து, அவர்மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்திருப்போம்.  ஆனால் அவருடைய திட்டம் எல்லா வகையிலும் நிறைவானதாக இருந்தது; பொய்க் குற்றச்சாட்டுகளையும் பகைமையோடு இழைக்கப்பட்ட துன்புறுத்தல்களையும் அவர் தாங்கிக்கொள்வது அந்தத் திட்டத்தின் மையமாகவே இருந்தது.  இந்தக் கொடுமையைத் தாமாகவே விரும்பி ஏற்றுக்கொண்டதன் வழியாக அவர் உலகை மீட்டார்.

ஆகவே, “நீங்கள் இயேசுவைப் போல இருக்க விரும்புகிறீர்களா?” என்ற தொடக்கக் கேள்விக்குத் திரும்புவோம்.  அவருக்கு நேர்ந்தவற்றின் ஒளியில் பார்க்கும்போது, இது ஒரு கடினமான கேள்வி.  “எந்த அடிமையும் தன் தலைவரைவிடப் பெரியவன் அல்ல.”  “அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால், உங்களையும் துன்புறுத்துவார்கள்.”  இவை ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளிப்பதற்குக் கடினமான வார்த்தைகள்.

துன்புறுத்தலைக் கண்டு நாம் ஓடி ஒளியக்கூடாது.  அது நேர்ந்தால் நாம் நம்பிக்கை இழக்கவோ தலைகுனியவோ கூடாது.  ஏன்?  ஏனெனில், துன்புறுத்தல் என்பது நாம் நம் தலைவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறோம் என்பதற்கான தெளிவான அடையாளம்.  துன்புறுத்தலின் வழியாக, நாம் உணர்ந்துகொள்ள முடிவதைவிடவும் ஆழமாகக் கிறிஸ்துவோடு ஒன்றிக்கிறோம்.

நாம் இறைவனை அனுமதித்தால், நமக்கு இழைக்கப்படும் எல்லாக் கொடுமைகளையும் நன்மைக்காகப் பயன்படுத்த அவர் விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்வதே முக்கியம்.  அவற்றை அவரிடம் ஒப்படைத்து, மனக்கசப்புடன் அல்லாமல் மனமுவந்து ஏற்றுக்கொள்ளும்போது, அவற்றை நன்மைக்காகப் பயன்படுத்த அவரை அனுமதிக்கிறோம்.  நம் தெய்வீக ஆண்டவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தகுதியுள்ளவர்களாக நாம் கருதப்பட்டுள்ளோம் என்பதற்காக, “மகிழ்ந்து அக்களிப்பதே” நமது பதிலாக இருக்க வேண்டும்.

உங்கள் விசுவாசத்திற்காகவும் நற்செய்தியை ஏற்று வாழ்வதற்காகவும் நீங்கள் அனுபவிக்கும் எந்தவகையான துன்புறுத்தலையோ அநீதியையோ குறித்து இன்று சிந்தியுங்கள்.  நீங்கள் அனுமதித்தால், ஆண்டவர் அதைப் பயன்படுத்த விரும்புகிறார்.

துன்புறுத்தப்பட்ட என் ஆண்டவரே, என்னை அழுத்தும் சுமைகள் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்.  உம்மைப் பின்பற்றுவதால் எனக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தையும் உமக்கு அளிக்கிறேன்.  நீர் துன்புற்றதில் மட்டுமல்லாமல், அத்துன்பத்தை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டதிலும் நான் உம்மைப் பின்பற்றுவேனாக.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

பாஸ்கா செபங்கள்

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர் – புனித கிறிஸ்டோபர் மகல்லானெஸ், அருள்பணியாளரும் மறைசாட்சியும், மற்றும் அவருடைய தோழர்களான மறைசாட்சிகள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: நிக்கோலா கிராஸி வரைந்த கிறிஸ்து சாட்டையால் அடிக்கப்படுதல், Wikimedia Commons வழியாக


  Subscribe to our YouTube channel  
  to be notified about new content.