தமிழ்

கிறிஸ்துவின் கிண்ணம்

ஜூலை 25, 2022
திருத்தூதர் புனித யாக்கோபுவின் விழா

இன்றைய வாசகங்கள்

காணொளி

“நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?” அவர்கள் அவரிடம், “எங்களால் முடியும்” என்றார்கள். அவர் மறுமொழியாக, “என் கிண்ணத்தில் நீங்கள் நிச்சயமாகக் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அமரும் இடங்களை அளிப்பது என் பொறுப்பல்ல; என் தந்தை யாருக்கென அவற்றை ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை உரியவை” என்றார்.  மத்தேயு 20:22b-23

இது இயேசு மிக மென்மையாகக் கூறிய கண்டனம்.  யாக்கோபு, யோவான் ஆகியோரின் தாய் இயேசுவிடம் ஓர் உதவி கேட்டார்.  அவருடைய அரசில் தம் மகன்கள் அவருடைய வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அமர வேண்டும் என்று அவர் விரும்பினார்.  இயேசு மென்மையாக, “நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறிவிட்டு, மேலே உள்ள பகுதியில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளைத் தொடர்ந்து கூறினார்.

“நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை.”  இயேசு ஏன் இவ்வாறு கூறினார்?  இதற்கு ஒரு காரணம், மாட்சிக்குச் செல்லும் பாதை, அதாவது அரசில் அவருடைய வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அமர்வதற்கான பாதை, சிலுவையின் பாதையாக இருப்பதுதான்.  அது இயேசுவோடு இணைந்து சிலுவையின் துன்பங்களை மனமுவந்து ஏற்றுக்கொள்ளும் பாதை.  முதலில் அவருடைய மரணத்தின் வழியாக அவரோடு நடந்துசெல்லாமல் அவருடைய மாட்சியில் நுழைவது இயலாது.

எனவே அவர் இந்தத் திருத்தூதர்களிடம், “நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?” என்று கேட்கிறார்.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், என் சிலுவையை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?  என் துன்பத்தை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?  என் உன்னத பலியில் என்னோடு நடந்துவந்து, உங்கள் உயிரையும் ஒப்புக்கொடுப்பதன் வழியாக அந்தப் பலியில் பங்கேற்க முடியுமா?

தங்களால் முடியும் என்று திருத்தூதர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். உண்மையிலேயே, பின்னாளில் அவர்கள் தங்களைப் பிறருக்காக முழுமையாகக் கையளிப்பதன் வழியாக இயேசுவை அவரது பலியில் பின்பற்றுகிறார்கள்.

அந்தக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?  உங்கள் வாழ்வில் சிலுவையை மனமுவந்து ஏற்றுக்கொள்ள முடியுமா?  இயேசுவைப் பின்பற்றுபவராக இருப்பதற்காகத் துன்பங்களையும் தியாகங்களையும், ஒருவேளை துன்புறுத்தல்களையும்கூட உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா?  அவருடைய துன்பத்தின் வழியாக அவரோடு உங்களால் நடந்துசெல்ல முடியுமா?  உங்கள் பதில் “ஆம்” என்றால், நீங்கள் அவருடைய மாட்சியில் பங்குபெறுவீர்கள்.  ஒருவேளை அந்த மாட்சி அவருடைய வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அமர்வதாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அது உங்கள் கற்பனையின் எல்லைகளையெல்லாம் கடந்த மாட்சியாக இருக்கும்.  அதற்காக இவற்றை ஏற்றுக்கொள்வது தகும்; இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதற்காக நீங்கள் ஒருபோதும் வருந்தமாட்டீர்கள்.

ஆண்டவரே, நீர் பருகிய கிண்ணத்தில் நானும் பருக உண்மையாகவே விரும்புகிறேன்.  உமது விலைமதிப்பற்ற திருவுடலையும் திருஇரத்தத்தையும் பெற்றுக்கொள்ளவும், அவற்றைப் பெற்றுக்கொள்வதன் வழியாக, உமது துன்பங்களில் உம்மைப் பின்பற்ற எனக்குத் தேவையான வலிமையையும் அருளையும் பெறவும் விரும்புகிறேன்.  உமது துன்பங்களில் உம்மைப் பின்பற்றும்போது, உமது மாட்சியிலும் பங்குபெற எனக்கு உதவியருளும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர்: திருத்தூதர் புனித யாக்கோபு

திருப்பலி வாசகத் தேர்வுகள்

சிறப்புப் படம்: பீட்டர் பால் ரூபன்ஸ், பொதுவுடைமை, Wikimedia Commons வழியாக