செவ்வாய்க்கிழமை, மே 14, 2024
திருத்தூதரான புனித மத்தியாவின் விழா

“நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை; நானே உங்களைத் தேர்ந்தெடுத்தேன். நீங்கள் சென்று நிலைத்திருக்கும் கனியைத் தரும்படி உங்களை நியமித்தேன். இவ்வாறு, நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குத் தருவார்.” யோவான் 15:16
யூதாசு நம் ஆண்டவரைக் காட்டிக்கொடுத்த பிறகு, அவருடைய இடத்தை ஏற்க ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் திருத்தூதர்கள் ஒன்றுகூடினர். தொடக்கத்திலிருந்தே தங்களோடு இருந்த ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். வழிநடத்துதலுக்காக இறைவேண்டல் செய்து, சீட்டுப் போட்டனர். “சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது; அவர் பதினொரு திருத்தூதர்களோடு சேர்த்துக்கொள்ளப்பட்டார்” (திருத்தூதர் பணிகள் 1:26).
புனித மத்தியாவின் திருப்பணியைப் பற்றிய தகவல்கள் மிகக் குறைவாகவே உள்ளன. பன்னிருவருள் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர் தொடக்ககாலத் திருஅவையின் ஓர் ஆயராக விளங்குகிறார். இன்றைய எத்தியோப்பியா, துருக்கி அல்லது ஜார்ஜியா ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் மறைபோதனை செய்ததாகப் பல்வேறு மரபுகள் கூறுகின்றன; ஒருவேளை இந்த எல்லாப் பகுதிகளிலும் அவர் போதித்திருக்கலாம். தம் விசுவாசத்திற்காகக் கல்லால் எறியப்பட்டோ, தலை துண்டிக்கப்பட்டோ, அல்லது இரண்டும் நிகழ்ந்தோ அவர் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால்தான் இன்று அவர் ஒரு மறைசாட்சியாகப் போற்றப்படுகிறார்.
புனித மத்தியாவைப் போற்றும்போது, திருத்தூதராகி, தமது வாழ்வால் நற்செய்தியை அறிவித்த ஒரு மனிதரை மட்டுமல்ல நாம் போற்றுவது; தமது இறையாட்சியை வளர்க்க வலுவற்ற, தாழ்மையான கருவிகளைப் பயன்படுத்தக் கடவுள் தேர்ந்துகொண்ட இறைத்திட்டத்தையும் நாம் போற்றுகிறோம். மேலே உள்ள நற்செய்திப் பகுதி புனித மத்தியாவுக்கு மட்டுமல்ல, ஏதோ ஒரு வகையில் நம் அனைவருக்குமே பொருந்துகிறது. புறப்பட்டுச் சென்று “நிலைத்திருக்கும் கனியைத் தருவதற்காக” புனித மத்தியாவையும் நம் ஒவ்வொருவரையும் “தேர்ந்துகொண்டவர்” கடவுளே. ஆனால், முடிவில்லா வாழ்வில் தாக்கம் ஏற்படுத்தும் இத்தகைய நல்ல கனியை, தந்தையிடம் அவருடைய மகன் இயேசுவின் பெயரால் நாம் கேட்டால் மட்டுமே விளைவிக்க முடியும்.
நம் வழியாக நல்ல கனியை விளைவிக்குமாறு தந்தையிடம் அவருடைய மகன் இயேசுவின் பெயரால் வேண்டுவது, தந்தையிடம் எதைக் கேட்பது என்பதை நாமே தேர்ந்துகொள்ளலாம் என்று பொருள்படாது. மாறாக, “இயேசுவின் பெயரால்” கேட்பது என்பது, மகன் கேட்டதை மட்டுமே நாமும் தந்தையிடம் கேட்பதாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தந்தையின் திருவுளம் நிறைவேற வேண்டும் என்ற மகனின் ஒரே நித்திய இறைவேண்டலில் பங்குகொள்ள நாம் தேர்ந்துகொள்கிறோம். இவ்வாறு இறைவேண்டல் செய்யும்போது, அவருடைய திருவுளத்தோடு ஒன்றித்திருக்க நம்மையே அர்ப்பணிக்கிறோம்.
சில வேளைகளில், நாம் அனைவருமே கடவுளிடம் இந்த உதவியையோ அந்த உதவியையோ கேட்டுக்கொண்டிருப்போம். நமது விருப்பத்தையும் நமது சித்தத்தையும் அவர் முன் வைப்போம். ஆனால், ஏராளமான நல்ல கனிகளைத் தரும் வகையில் கடவுள் நம்மைப் பயன்படுத்தவும், அவரது அருளின் கருவியாக நாம் மாறவும் விரும்பினால், நமது சொந்தச் சித்தத்தைத் தாழ்மையுடன் ஒதுக்கிவைக்க வேண்டும். நமது பணியைத் தேர்ந்தெடுத்து, தமது புனிதப் பணிக்கு நம்மை நியமிப்பவராகக் கடவுளே இருக்க அனுமதிக்க வேண்டும். நமது சொந்தச் சித்தத்தின்மீதுள்ள பற்றை விடுத்து, கடவுளின் திருவுளத்திற்குத் தாழ்மையுடன் பணிவதே இறையாட்சியை மலரச் செய்வதற்கான ஒரே வழி.
தமது இறைப்பணியில் பங்குகொள்ள உங்களை அழைக்கக் கடவுள் தேர்ந்துகொண்டிருப்பதைப் பற்றி இன்று சிந்தியுங்கள். அவர் எவ்வாறு அழைக்கிறார் என்பது கடவுளைப் பொறுத்தது. ஆனால், அவர் உங்களை அழைக்கிறார் என்பதிலும், தமது பணியில் பங்குகொள்ள உங்களுக்கு அழைப்பு விடுக்கிறார் என்பதிலும் நீங்கள் உறுதியாக இருக்கலாம். நல்ல கனிதருவதற்காகக் கடவுள் உங்களை எந்த வழியில் நியமித்தாலும் அதை ஏற்கத் திறந்த மனத்துடன் இருங்கள். இயேசுவின் திருப்பெயரால் இறைவேண்டல் செய்யும்போது, உங்கள் சித்தத்தைத் தந்தையின் திட்டத்திற்கேற்ப அமைத்துக்கொள்ளத் தாழ்மையுடன் முயலுங்கள்.
ஆண்டவராகிய இயேசுவே, நீர் அனைத்திலும் தந்தையின் திருவுளத்தை நிறைவாக நிறைவேற்றியுள்ளீர். உமது இறைப்பணியில் பங்குபெற என்னைத் தேர்ந்தெடுத்து நியமித்துள்ளீர். நீர் என்னைச் செய்ய அழைக்கும் அனைத்திற்கும் என் மனத்தையும் விருப்பத்தையும் திறந்துவைக்க எனக்கு உதவியருளும். இவ்வாறு, நானும் விண்ணகத்திலுள்ள உமது தந்தையின் அரசுக்கான ஒரு கருவியாக விளங்குவேனாக. உமது அதிபுனித பெயரால் இம்மன்றாட்டைச் செய்கிறேன். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
தூய ஆவியாருக்கான நவநாள் செபம்
தூய ஆவியார் பெருவிழாவுக்கான தயாரிப்பாகச் செபிக்கப்படுவது
வெள்ளிக்கிழமை, மே 10 – சனிக்கிழமை, மே 18
அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்
இன்றைய புனிதர் – திருத்தூதரான புனித மத்தியா
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்




