ஆகஸ்ட் 13, 2024
பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் வாரம் செவ்வாய்க்கிழமை
இன்றைய வாசகங்கள்
மறைசாட்சிகளான புனிதர்கள் திருத்தந்தை பொந்தியான், அருள்பணியாளர் இப்போலித்து—விருப்ப நினைவு

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் நூறு ஆடுகள் இருந்து, அவற்றுள் ஒன்று வழிதவறிச் சென்றால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுவிட்டு, வழிதவறிய ஆட்டைத் தேடிச் செல்ல மாட்டாரா? அதைக் கண்டுபிடித்தால், வழிதவறாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குறித்து மகிழ்வதைவிட, அந்த ஓர் ஆட்டைக் குறித்தே அவர் மிகுதியாக மகிழ்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அவ்வாறே, இந்தச் சிறியோருள் ஒருவர்கூட அழிந்துபோவது உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம் அல்ல.” மத்தேயு 18:12–14
வழிதவறிச் செல்வது மிகவும் எளிது. வழிதெரியாமல், குழப்பத்தில் அலைந்து திரியும் பல ஆன்மாக்களுக்கு மேய்ப்பர் தேவைப்படுகிறார். இவ்வாறு வழிதவறிச் செல்வதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உடலின்பங்களில் திளைப்பதன் கவர்ச்சி, பணத்தின் கவர்ச்சி, ஆணவம், கோபம், தன்னலம் ஆகியவற்றை நோக்கி இழுக்கும் சோதனைகள், குழப்பம் என இன்னும் பல காரணங்கள் இருக்கலாம். இன்றைய நற்செய்திப் பகுதி, மக்கள் வழிதவறிச் செல்கிறார்கள் என்ற உண்மையை வலியுறுத்துவதைவிட, அவர்களை மீண்டும் தம்மிடம் கொண்டுவரக் கடவுள் கொண்டுள்ள ஆவலையே வலியுறுத்துகிறது.
ஒருவர் கடவுளைவிட்டு வழிதவறிச் செல்லும்போது, அவரது உள்ளத்தில் வெறுமையே எஞ்சுகிறது. இதுவே நமது மனித நிலையின் உண்மை. வாழ்வில் நிறைவடைவதற்கான ஒரே வழி, அன்பினால் உங்களையே கடவுளுக்கு அர்ப்பணிப்பதுதான். கடவுள், கடவுள் மட்டுமே நமக்கு நிறைவளிக்கிறார். கடவுள், கடவுள் மட்டுமே நமக்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் அளிக்க முடியும். ஆகவே, ஒருவர் வழிதவறிச் சென்று, உள்ளத்தில் வெறுமையோடு இருக்கும்போது, அவர் ஒரு முடிவு எடுக்க வேண்டும். தமது பாவங்களுக்காக மனம் வருந்திக் கடவுளிடம் திரும்புவாரா? அல்லது வேறிடங்களில் நிறைவைத் தொடர்ந்து தேடுவாரா?
நமது பாவங்களுக்காக மனம் வருந்திக் கடவுளிடம் திரும்புவதற்குப் பெரும் தடையாக இருப்பவற்றுள் ஒன்று நமது ஆணவம். பாவத்தை ஒப்புக்கொள்வது கடினம். நாம் வழிதவறிச் சென்றதை ஒப்புக்கொள்வது கடினம். நாம் செய்தவற்றுக்குப் பொறுப்பேற்று, கடவுளின் இரக்கத்தையும் பரிவையும் நாடி அவரிடம் திரும்புவது கடினம்.
இன்றைய நற்செய்தி குறிப்பாக வழிதவறிச் சென்ற பாவிக்கானது. நம்மை மிகவும் அன்புடன் வரவேற்கும் கடவுளின் உருவத்தை அது நமக்குக் காட்டுகிறது. வழிதவறிய ஆட்டைத் தேடிப் புறப்படும் கடவுளின் உருவம் அது. ஆனால் இன்றைய நற்செய்தியில் மிக முக்கியமான காட்சி, மேய்ப்பரின் பெருமகிழ்ச்சியே. கடவுள் நம்மைத் தேடிவந்து, நமது உள்ளத்தைத் தொடும்போது, இனி நாம் வெட்கப்பட வேண்டியதில்லை என்பதை உணர வேண்டும். மனம் வருந்துபவரைக் கடவுள் கண்டனம் செய்வதில்லை. மாறாக, அவர் மகிழ்ந்து, அந்த ஆன்மாவை மீண்டும் இல்லத்திற்குச் சுமந்து செல்கிறார். வாழ்வில் நாம் வழிதவறத் தொடங்கி, பாவ வாழ்வுக்கு இடமளிக்கும்போதெல்லாம், கடவுளின் இந்த உருவத்தை நாம் புரிந்துகொண்டு, இது நமக்கும் பொருந்துகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
பாவம் நமக்குத் தலைக்குனிவை ஏற்படுத்துகிறது என்பதே உண்மை. தலைக்குனிவை எதிர்கொள்வது கடினம். ஆனால் அது நம்மைத் தூய்மைப்படுத்தவும் செய்கிறது. உங்கள் பாவத்தை அறிக்கையிடுவதால் ஏற்படும் தலைக்குனிவை ஏற்றுக்கொள்ள நீங்கள் முன்வந்தால், அளவற்ற விடுதலை உங்களுக்காகக் காத்திருக்கிறது. குறிப்பாக, கடவுள் மகிழ்ந்து உங்களை இல்லத்திற்குச் சுமந்து செல்வதன் வழியாக அந்த விடுதலை கிடைக்கிறது.
உங்களை அக்கறையோடு தேடும் நல்லாயனின் புனித உருவத்தை இன்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் உள்ளத்தைத் தொடவும், உங்களோடு மீண்டும் ஒன்றிக்கவும், உங்களை மன்னிக்கவும், உங்களை அன்போடு இல்லத்திற்குச் சுமந்து செல்லவும் அவர் கொண்டுள்ள அன்பான ஆவலைக் காணுங்கள். தீர்ப்பைக் குறித்த அச்சம் விலக அனுமதியுங்கள். உங்களைத் தாழ்த்தி, உங்கள் பாவத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சொந்த ஆற்றலால் அதை வெல்ல இயலாது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால், நல்லாயன் உங்களைத் தூக்கி, விடுதலையை நோக்கிச் சுமந்து செல்லும்போது அவரது இதயம் மகிழும்.
என் நல்லாயனாகிய இயேசுவே, உமது அன்பும் பரிவும் வியப்புக்குரியவை. நீர் அளவற்ற இரக்கமுள்ள கடவுள். நீர் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதைக் காண என் கண்களைத் திறந்தருளும்; என் இதயத்திலிருந்து அச்சம் அனைத்தையும் அகற்றியருளும். என் பாவத்தை மன்னித்து, என்னைத் தூக்கி, மீண்டும் உமது மந்தைக்குச் சுமந்து சென்றருளும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
தேர்தலுக்காகவும் நாட்டுக்காகவும் செபங்கள்
அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்
இன்றைய புனிதர் – மறைசாட்சிகளான திருத்தந்தை புனித போந்தியான், அருள்பணியாளர் புனித இப்போலித்து
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்
சிறப்புப் படம்: புனித பேதுருவைக் கண்டித்தல் அல்லது அழைத்தல், Wikimedia Commons வழியாக



