தமிழ்

அளவுகடந்த நிறைவின் அற்புதம்!

டிசம்பர் 4, 2024
திருவருகைக் காலத்தின் முதல் வாரம் புதன்கிழமை
இன்றைய வாசகங்கள்

தமாஸ்கு நகர் புனித யோவான், அருள்பணியாளர், துறவி, மறைவல்லுநர்—விருப்ப நினைவு

யாக்கோப்போ திந்தொரெத்தோ, CC0, Wikimedia Commons வழியாக

காணொளி

பின்னர் அவர் அந்த ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்து, நன்றி செலுத்தி, அப்பங்களைப் பிட்டு, சீடர்களிடம் கொடுத்தார்; அவர்களும் மக்கள் கூட்டத்திற்குக் கொடுத்தார்கள். அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளை ஏழு கூடைகள் நிறையச் சேர்த்தார்கள்.   மத்தேயு 15:36–37

மத்தேயு விவரிக்கும் அப்பங்களையும் மீன்களையும் பெருக்கிய இரண்டாவது புதுமையை இந்த வரிகள் நிறைவுசெய்கின்றன. இந்தப் புதுமையில், பெண்களையும் குழந்தைகளையும் தவிர்த்து, 4,000 ஆண்களுக்கு உணவளிப்பதற்காக ஏழு அப்பங்களும் சில மீன்களும் பெருக்கப்பட்டன. அனைவரும் வயிறார உண்டபின், ஏழு கூடைகள் நிறைய எஞ்சியிருந்தன.

அங்கு உண்மையில் இருந்தவர்களிடம் இந்த அற்புதம் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடுவது கடினம். உணவு எங்கிருந்து வந்தது என்றுகூட பலருக்குத் தெரிந்திருக்காது. கூடைகள் கைமாறி வருவதை மட்டுமே அவர்கள் பார்த்தார்கள்; தங்களுக்குப் போதுமானதை எடுத்துக்கொண்டு, மீதியை மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள். இந்த அற்புதத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான பாடங்கள் பல இருந்தாலும், அவற்றில் ஒன்றைச் சிந்திப்போம்.

மக்கள் கூட்டத்தினர் மூன்று நாள்களாக உணவின்றி இயேசுவோடு இருந்ததை நினைவுகூருங்கள். அவர்கள் முன்னிலையில் அவர் போதித்ததையும் நோயுற்றோரைத் தொடர்ந்து குணமாக்கியதையும் கண்டு அவரைப்பற்றி வியந்தார்கள். உண்மையில், அவர்கள் அனுபவித்திருக்கக்கூடிய கடும் பசியையும் மீறி, அவரை விட்டுப் பிரிவதற்கான எந்த அறிகுறியையும் காட்டாத அளவுக்கு வியப்பில் ஆழ்ந்திருந்தார்கள். நமது அக வாழ்வில் நாம் நாட வேண்டியது என்ன என்பதை எடுத்துக்காட்டும் ஓர் அழகிய காட்சி இது.

வாழ்வில் உங்களை “வியப்பில் ஆழ்த்துவது” எது? கவனம் சிதறாமல் மணிக்கணக்காக உங்களால் செய்யக்கூடியது எது? இந்த முதல் சீடர்களைப் பொறுத்தவரை, இயேசுவையே அவர்கள் கண்டுகொண்டதுதான் அவர்களிடம் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது. உங்கள் நிலை என்ன? செபத்திலோ, விவிலிய வாசிப்பிலோ, மற்றொருவரின் சாட்சியத்தின் வழியாகவோ இயேசுவைக் கண்டுகொண்ட அனுபவம், அவரது திருமுன்னிலையில் உங்களை முழுமையாக ஆழ்த்தும் அளவுக்கு உங்களை ஈர்த்ததுண்டா? வேறு எதைப்பற்றியும் அதிகம் நினைக்காத அளவுக்கு நீங்கள் நம் ஆண்டவரில் ஆழ்ந்திருந்ததுண்டா?

விண்ணகத்தில், கடவுளின் மாட்சியை இடையறாது ஆராதிப்பதிலும் அதைக் கண்டு “வியப்பதிலும்” நமது நித்திய வாழ்வு கழியும். அவரைப்பற்றிய பிரமிப்போடு அவருடன் இருப்பதில் நாம் ஒருபோதும் சோர்வடைய மாட்டோம். ஆனால் மண்ணுலகில், நமது வாழ்விலும் நம்மைச் சுற்றியிருப்போரின் வாழ்விலும் கடவுள் ஆற்றும் அற்புதச் செயல்களை நாம் அடிக்கடி கவனிக்கத் தவறிவிடுகிறோம். அதற்குப் பதிலாக, பாவம், பாவத்தின் விளைவுகள், மனக்காயம், இடறல், பிளவு, வெறுப்பு, நம்பிக்கையிழப்பிற்கு இட்டுச் செல்லும் காரியங்கள் ஆகியவற்றில் அடிக்கடி மூழ்கிவிடுகிறோம்.

இன்று இயேசுவின் இந்த முதல் சீடர்களைப்பற்றிச் சிந்தியுங்கள். குறிப்பாக, மூன்று நாள்கள் உணவின்றி அவரோடு தங்கியிருந்தபோது அவர்களுக்கிருந்த வியப்பையும் பிரமிப்பையும் ஆழ்ந்து சிந்தியுங்கள். நம் ஆண்டவரின் இந்த ஈர்ப்பு உங்களை ஆட்கொண்டு, இயேசுவே உங்கள் வாழ்வின் ஒரே மையமாக விளங்கும் அளவுக்கு உங்களை முழுமையாக நிறைக்க வேண்டும். அவர் அவ்வாறு விளங்கும்போது, மற்ற அனைத்தும் உரிய இடத்தைப் பெறுகின்றன; உங்கள் பிற தேவைகள் பலவற்றையும் நம் ஆண்டவர் நிறைவேற்றுகிறார்.

என் தெய்வீக ஆண்டவரே, நான் உம்மை அன்புசெய்கிறேன்; உம்மை இன்னும் அதிகமாக அன்புசெய்ய விரும்புகிறேன். உம்மைக் குறித்த வியப்பாலும் பயபக்தியாலும் என்னை நிரப்பும். எல்லாவற்றையும்விட மேலாகவும், எல்லாவற்றிலும் உம்மையே நாட எனக்கு உதவும். உம்மீது நான் கொண்டுள்ள அன்பு, நான் எப்போதும் உம்மை நம்பும் அளவுக்கு ஆழமடையட்டும். அன்பு ஆண்டவரே, என் வாழ்வு முழுவதற்கும் உம்மை மையமாகக் கொள்ள எனக்கு உதவும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

அமல உற்பவ நவநாள் செபம்
நவம்பர் 29-டிசம்பர் 7

ஈகைச் செவ்வாயை முன்னிட்டு நன்கொடை அளிப்பது குறித்து எண்ணிப் பார்ப்பீர்களா?

எங்கள் திருவருகைக் கால வளங்களைப் பாருங்கள்!

புனித அந்திரேயா கிறிஸ்து பிறப்பு நவநாள் செபம்
மரபுப்படி, நவம்பர் 30 முதல் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு முந்தைய நாள் வரை தினமும் 15 முறை செபிக்கப்படுகிறது.

விவிலியத் தியானங்கள்

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசகத் தேர்வுகள்


  Subscribe to our YouTube channel  
  to be notified about new content.