தமிழ்

வியப்பும் பிரமிப்பும்

டிசம்பர் 22, 2024
திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு (ஆண்டு C)
இன்றைய வாசகங்கள்

மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் படைப்பாளர்: Lawrence OP, உரிமம் CC BY-NC-ND 2.0.

காணொளி

“பெண்களுக்குள் நீர் ஆசிபெற்றவர்; உமது வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசிபெற்றதே. என் ஆண்டவரின் தாய் என்னிடம் வருவதற்கு எனக்கு இந்தப் பேறு கிடைத்தது எப்படி?” லூக்கா 1:42–43

இந்த வார்த்தைகளில் எலிசபெத்து அழகிய தாழ்ச்சியை வெளிப்படுத்தினார். கருவுற்றிருந்த எலிசபெத்தின் இறுதி மாதங்களில் அவருடன் இருப்பதற்காக, புனித கன்னி மரியா நீண்ட பயணம் மேற்கொண்டு அப்போதுதான் வந்திருந்தார். நம் புனித அன்னை எலிசபெத்தை வாழ்த்தியவுடன், எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தையான புனித திருமுழுக்கு யோவான் மகிழ்ச்சியால் துள்ளினார். எலிசபெத்து இதை உணர்ந்து ஏற்றுக்கொண்டார். பின்னர், தம் ஆண்டவரின் தாயான மரியா தம்மைச் சந்திக்க வந்திருப்பதால் தாம் தனிப்பட்ட விதத்தில் ஆசிபெற்றிருப்பதைத் தாழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.

நம் புனித அன்னையின் இந்தச் சந்திப்பில் சிந்திப்பதற்குரிய பல அம்சங்கள் உள்ளன. ஆனால், எலிசபெத்து வெளிப்படுத்திய தாழ்ச்சியோடு கூடிய வியப்பிலும் இறையச்சத்திலும் கவனம் செலுத்த முயலுங்கள். “என் ஆண்டவரின் தாய் என்னிடம் வருவதற்கு எனக்கு இந்தப் பேறு கிடைத்தது எப்படி?” மரியாவின் வருகைக்காக எலிசபெத்து நன்றியுள்ளவராக இருந்தார் என்பது தெளிவாகிறது. ஆனால், அவரது மறுமொழி நன்றியுணர்வையும் கடந்ததாகத் தோன்றுகிறது. வியப்பும் இறையச்சமும் என்னும் கொடை அவருக்கு வழங்கப்பட்டது. கடவுளின் தாயும் தம் ஆண்டவருமே இப்போது தம் இல்லத்தில் தம் முன் இருப்பதால் தாம் அளவிட முடியாத விதத்தில் ஆசிபெற்றிருப்பதை அவர் தெளிவாக அறிந்திருந்தார்.

எலிசபெத்து அனுபவித்த இந்த வியப்பும் இறையச்சமும் என்னும் கொடை, தூய ஆவியாரின் ஏழு கொடைகளில் ஒன்றாகும். தாழ்ச்சியுள்ள இதயத்தில் நுழையும் இக்கொடை, தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அருளுக்குத் தான் தகுதியற்றது என்பதை முதலில் காணச் செய்கிறது. பின்னர், தாழ்ச்சியுள்ள இந்த ஆன்மா அச்சிறப்பு அருளைப் பெற்றுக்கொண்டு, அளவுகடந்த வியப்புடன் மறுமொழி அளிக்கிறது. இவ்வாறு, நன்றியுணர்வு மட்டுமல்லாமல், கடவுளைப் புகழ்ந்தேத்துவதற்கு வழிவகுக்கும் இந்தப் புனித வியப்பும் அங்கே நிலவுகிறது.

நமது வாழ்விலும் கடவுளிடமிருந்து எத்தனையோ வியத்தகு அருள்கொடைகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், அவை உண்மையில் எத்தகையவை என்பதை நாம் அடிக்கடி உணரத் தவறுகிறோம். கடவுள் நமக்கு அளித்துள்ள வியத்தகு அருள்கொடைகளைக் காணத் தவறுகிறோம்; அதனால், கடவுளின் கொடைகள் நம்மில் எழுப்ப வேண்டிய வியப்பை அனுபவிக்கவும் தவறுகிறோம்.

உங்கள் வாழ்வை நோக்கும்போது, கடவுள் உங்களுக்கு என்னென்ன அருள்கொடைகளை வழங்கியிருக்கிறார்? அவற்றை நீங்கள் காண்கிறீர்களா? அவற்றுக்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அப்படியானால், நன்றியுணர்வையும் கடந்து, உங்கள் வாழ்வில் வெளிப்படும் கடவுளின் நன்மைத்தனத்தையும் ஆசிகளையும் குறித்துப் புனித வியப்பையும் இறையச்சத்தையும் அனுபவிக்க உங்களால் முடிகிறதா? இத்தகைய ஆழ்ந்த வியப்பை அடைவது கடினமாக இருக்கலாம். இருந்தாலும், இது நாம் அனைவரும் நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் பெற்றுக்கொள்ளவும் அனுபவிக்கவும் முயல வேண்டிய உண்மையான கொடையாகும்.

எலிசபெத்து அனுபவித்த தூய ஆவியாரின் இந்தப் புனிதக் கொடையைப் பற்றி இன்று சிந்தியுங்கள். அந்த நிகழ்வில் நீங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். அவரது இதயத்தில் நிகழ்ந்த அனுபவத்தைக் காண முயலுங்கள். அவர் உணர்ந்ததை நீங்களும் உணர முயலுங்கள். அதிலிருந்து எழுந்த புகழ்ச்சியை உணர முயலுங்கள். தூய ஆவியாரின் இதே கொடையை உங்கள் வாழ்வில் பெற்றுக்கொள்ள உங்களை இன்னும் முழுமையாகத் திறந்துகொடுக்க முயலுங்கள். ஆண்டவர் அருளின் வழியாக இடைவிடாமல் உங்களிடம் வருகிறார்; குறிப்பாக, நீங்கள் திருவிருந்தில் அவரைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு முறையும் அவர் உங்களிடம் வருகிறார். ஆகவே, நாம் அனைவரும் நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் புனித வியப்புடனும் இறையச்சத்துடனும் வாழ முயல வேண்டும்.

மிகவும் மாட்சிமைமிக்க என் ஆண்டவரே, என் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு நீர் எனக்கு அருள் வழங்குகிறீர். அதனால் என்னுள் எழ வேண்டிய நன்றியுணர்வையும் வியப்பையும் இறையச்சத்தையும் அனுபவிக்க நான் அடிக்கடி தவறுகிறேன். என் வாழ்வில் உமது அருளாலும் உடனிருப்பாலும் கிடைக்கும் எண்ணற்ற ஆசிகளை முதலில் காண எனக்கு உதவியருளும். அவற்றை நான் காணும்போது, நானும் உமக்குரிய புகழை இடைவிடாமல் பாடும்படி தூய ஆவியாரால் என்னை நிரப்பியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

திருவருகைக் காலத்தின் ‘ஓ’ எதிர்ப்பாடல்கள்
டிசம்பர் 17–23

புனித அந்திரேயாவின் கிறிஸ்து பிறப்பு நவநாள் செபம்
மரபுப்படி, நவம்பர் 30 முதல் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவுக்கு முந்தைய நாள் வரை தினமும் 15 முறை செபிக்கப்படுகிறது.

திருவருகைக்காலம் மற்றும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்கான எங்கள் வளங்களைப் பாருங்கள்!

விவிலியத் தியானங்கள்

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசகத் தேர்வுகள்


  Subscribe to our YouTube channel  
  to be notified about new content.