ஜனவரி 8, 2025
ஆண்டவரின் திருக்காட்சிக்குப் பின்வரும் புதன்கிழமை
இன்றைய வாசகங்கள்
இயேசு தண்ணீரின்மேல் நடக்கிறார், பொதுச் சொத்து publicdomainpictures.net வழியாக
“துணிவுகொள்ளுங்கள், நான்தான், அஞ்சாதீர்கள்!” மாற்கு 6:50
வாழ்வில் நம்மை மிகவும் முடக்கிப்போடும், வேதனைக்குள்ளாக்கும் அனுபவங்களில் அச்சமும் ஒன்று. நாம் அஞ்சக்கூடியவை பல உள்ளன. ஆனால், பெரும்பாலும் நமது அச்சத்திற்குக் காரணம், கிறிஸ்து இயேசுவில் நாம் கொண்டுள்ள விசுவாசத்திலிருந்தும் எதிர்நோக்கிலிருந்தும் நம்மை விலக்க முயலும் தீயோனே.
இரவின் நான்காம் காவல் வேளையில், திருத்தூதர்கள் எதிர்க்காற்றை எதிர்த்துத் துடுப்புவலித்துக்கொண்டும் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டும் இருந்தபோது, இயேசு தண்ணீர்மேல் நடந்து அவர்களை நோக்கி வந்த நிகழ்விலிருந்து மேலுள்ள வரி எடுக்கப்பட்டுள்ளது. இயேசு தண்ணீர்மேல் நடப்பதைக் கண்டபோது அவர்கள் திகிலடைந்தனர். ஆனால் இயேசு அவர்களிடம் பேசி, படகில் ஏறியதும் காற்று உடனே அடங்கியது; திருத்தூதர்கள் அங்கே “முற்றிலும் வியப்பில் ஆழ்ந்திருந்தனர்.”
புயல் வீசும் கடலில் உள்ள படகு, இந்த வாழ்வில் நாம் மேற்கொள்ளும் பயணத்தைக் குறிப்பதாக மரபுவழியாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. தீயோனும் ஊனியல்பும் உலகமும் எண்ணற்ற வழிகளில் நமக்கு எதிராகப் போராடுகின்றன. இந்த நிகழ்வில், இயேசு கரையிலிருந்து அவர்களது துன்பத்தைக் கண்டு, அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களை நோக்கி நடந்து வருகிறார். அவரது இரக்கமுள்ள திருஇதயமே அவர் அவர்களை நோக்கி நடந்து வருவதற்குக் காரணம்.
வாழ்வில் அச்சம் ஏற்படும் நேரங்களில், நாம் அடிக்கடி இயேசுவை நம் பார்வையிலிருந்து இழந்துவிடுகிறோம். நமக்குள்ளேயே ஒடுங்கி, நமது அச்சத்திற்கான காரணத்திலேயே கவனம் செலுத்துகிறோம். ஆனால், வாழ்வில் நமக்கு அச்சமூட்டும் காரணத்திலிருந்து திரும்பி, எப்போதும் இரக்கமுள்ளவராயிருந்து, நமது அச்சத்திற்கும் போராட்டத்திற்கும் நடுவே எப்போதும் நம்மை நோக்கி நடந்து வரும் இயேசுவைத் தேடுவதே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
வாழ்வில் உங்களுக்கு மிகுந்த அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்துவது எதுவாக இருந்தாலும், அதைப் பற்றி இன்று சிந்தியுங்கள். உங்கள் உள்ளத்தில் குழப்பத்தையும் போராட்டத்தையும் ஏற்படுத்துவது எது? அதன் மூலத்தை அறிந்துகொண்டதும், அதிலிருந்து உங்கள் பார்வையை நம் ஆண்டவரிடம் திருப்புங்கள். நீங்கள் எத்தகைய போராட்டத்தில் இருந்தாலும், அதன் நடுவே அவர் உங்களை நோக்கி நடந்து வந்து, “துணிவுகொள்ளுங்கள், நான்தான், அஞ்சாதீர்கள்!” என்று உங்களிடம் சொல்வதைக் காணுங்கள்.
ஆண்டவரே, மீண்டும் ஒருமுறை உமது மிகுந்த இரக்கமுள்ள திருஇதயத்தை நோக்கித் திரும்புகிறேன். என் கண்களை உம்மை நோக்கி உயர்த்தவும், என் வாழ்வில் கவலையையும் அச்சத்தையும் உண்டாக்குபவற்றிலிருந்து விலகவும் எனக்கு உதவியருளும். உம்மீது கொள்ளும் விசுவாசத்தாலும் நம்பிக்கையாலும் என்னை நிரப்பி, என் நம்பிக்கை முழுவதையும் உம்மில் வைப்பதற்குத் தேவையான துணிவை எனக்குத் தந்தருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்





