தமிழ்

அன்பின் உறுதியும் வலிமையும்

ஆகஸ்ட் 27, 2025

புனித மோனிக்கா நினைவு

இன்றைய வாசகங்கள்
பொதுக்காலத்தின் இருபத்தொன்றாம் வாரம் புதன்கிழமைக்கான வாசகங்கள்

படம்: Adobe Stock வழியாக

காணொளி

இயேசு கூறினார்: “வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாய் இருக்கிறீர்கள். அவை வெளியே அழகாகத் தோன்றுகின்றன; ஆனால் உள்ளே இறந்தவர்களின் எலும்புகளும் எல்லாவித அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன. அவ்வாறே, நீங்களும் வெளியே நேர்மையாளர்களாகத் தோன்றுகிறீர்கள்; ஆனால் உள்ளே வெளிவேடமும் தீச்செயல்களும் நிறைந்திருக்கிறீர்கள்.”  மத்தேயு 23:27–28

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இதைக் கேட்பது எளிதாக இருந்திருக்காது. இது நம் ஆண்டவர் உரைத்த கடினமான உண்மை. அவர்களை உலுக்கி, அவர்களுடைய பாவத்திலிருந்து விடுவிப்பதும் அவர் இவ்வாறு பேசியதன் நோக்கங்களில் ஒன்று. இந்தத் தெளிவான கண்டனத்தைக் கேட்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்காது. இருந்தாலும், இது உலக மீட்பரிடமிருந்து வந்ததால், இவை ஆழ்ந்த அன்பின் சொற்கள் என்பதையும், இவர்கள் மனந்திரும்பித் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சொல்லப்பட்டவை என்பதையும் நாம் உறுதியாக அறியலாம்.

சில வேளைகளில் நம் ஒவ்வொருவருக்கும் மற்றவரைக் குறைகூற வேண்டும் என்று தோன்றலாம். பெரும்பாலும், இப்படி நாம் உணர்வதற்கு நம்மிடமுள்ள கோபம் என்னும் பாவமே காரணமாக இருக்கிறது. ஒருவேளை மற்றவர் நம்மைக் காயப்படுத்தியிருக்கலாம்; அந்த மனக்காயம், கோபத்திலிருந்து எழும் ஒருவிதப் பழிவாங்கும் ஆசையை உண்டாக்கலாம். ஆனால் இயேசுவிடம் அப்படி இருக்கவில்லை.

முதலில், இயேசு இவ்வார்த்தைகளை மறைநூல் அறிஞர்களிடமும் பரிசேயர்களிடமும் மட்டுமல்லாமல், தம் சீடர்களிடமும் மக்கள் கூட்டத்தினரிடமும் கூறினார். ஆகவே, இந்தச் சமயத் தலைவர்களின் தவறான வழிகாட்டுதலின் கீழ் துன்புற்றவர்களின் நலனுக்காகவே இயேசு பல வகைகளில் இவ்வாறு பேசினார். ஆனால், இந்தத் தலைவர்களும் தம் வார்த்தைகளைக் கேட்பார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார்; எனவே, அவர்களையும் நோக்கி அவ்வார்த்தைகளைப் பேசினார். ஆனால் நம்மைப் போலன்றி, அவர்களுடைய ஆன்மாக்களின் மீது அக்கறை கொண்டு, நிறைவான நற்பண்புடன் அவர் அவ்வாறு செய்தார்.

சில வேளைகளில், இயேசு நம்மை அன்போடு கடிந்துகொள்வதை நம் ஒவ்வொருவரும் கேட்க வேண்டியிருக்கிறது. அப்போது மறைநூல் அறிஞரிலும் பரிசேயரிலும் யாரேனும் திறந்த மனத்துடன் இருந்திருந்தால், இயேசுவின் சொற்கள் முதலில் அவர்களுடைய இதயத்தைத் தைத்திருக்கும்; பின்னர், அவர்கள் மாற வேண்டும் என்ற வலிமையான சவாலை அவர்களுக்குள் எழுப்பியிருக்கும். இது அவர்களுக்குத் தேவைப்பட்டது; நமக்கும் தேவைப்படுகிறது. நாம் பாவங்களில் சிக்கிக்கொள்ளும்போது, குறிப்பாகப் பிடிவாதம் வேரூன்றிவிட்டால், இயேசு நம்மை உறுதியுடன் எதிர்கொண்டு சவால் விடுக்க நாம் அனுமதிக்க வேண்டும். இத்தகைய சவால் நம்மை உலுக்கலாம்; ஆனால் அத்தகைய உலுக்குதல் சில நேரங்களில் தேவைப்படுகிறது. உணர்ச்சியும் உணர்ச்சித் தீவிரமும் பாவத்திற்கு இட்டுச் செல்லலாம்; ஆனால் மனவருத்தத்திற்கும் மனமாற்றத்திற்கும் இட்டுச் செல்லவும் முடியும். இயேசு பேசிய உணர்ச்சித் தீவிரம் ஒரு கருவியானது; அதன் வழியாக அவர்களுடைய சொந்த உணர்ச்சிகளே அவர்களை விழித்தெழுந்து கவனிக்கச் செய்தன. இதன் விளைவாக, அவர்கள் தங்கள் பாவத்தில் இன்னும் ஆழ்ந்தார்கள் அல்லது மனந்திரும்பினார்கள். பெரும்பாலானோர் பாவத்தில் இன்னும் ஆழ்ந்ததால், இறுதியில் அவர்கள் இயேசுவைத் துன்புறுத்திக் கொன்றார்கள். இருந்தாலும், நிக்கதேம் போன்ற சிலராவது மனந்திரும்பியிருப்பார்கள் என்று நாம் நம்பிக்கைகொள்ளலாம்.

இந்தச் சமயத் தலைவர்களிடம் இயேசு கூறிய சொற்களின் வலிமையை இன்று சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் “இறைப்பற்றுள்ளவர்களாகவும்” “தலைவர்களாகவும்” இருந்திருக்க வேண்டியவர்கள்; ஆனால் இரண்டிலுமே அவர்கள் அப்படியிருக்கவில்லை. இயேசுவின் வலிமையும் துணிவும் உறுதியும் அவர்களுக்குத் தேவைப்பட்டன. அவர் அவர்களை நேரடியாக எதிர்கொண்டு, அவர்களுடைய பாவத்தைப் பற்றிய கடினமான, தெளிவான உண்மையை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டியிருந்தது. உங்கள் வாழ்வில் இயேசு உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வாழ்வில் எந்தப் பகுதியிலாவது நம் ஆண்டவர் தீவிரத்துடனும் வலிமையுடனும் தெளிவுடனும் உறுதியுடனும் உங்களிடம் பேச வேண்டியிருக்கிறதா? பெரும்பாலும் அப்படி ஒரு பகுதி இருக்கக்கூடும். இந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இருந்தது போன்ற கடுமையான பாவநிலையில் ஒருவேளை நாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாம் திறந்த மனத்துடன் இருந்தால், நம்முள் இருக்கும் ஒவ்வொரு பாவத்தையும் வலிமையுடன் எதிர்கொண்டு அகற்ற இயேசு விரும்புகிறார். அவரிடம் உங்கள் உள்ளத்தைத் திறந்து, நீங்கள் அதிகமாகப் போராடும் பாவங்களிலிருந்து விடுபட அவர் உங்களுக்கு உதவ அனுமதியுங்கள். அவர் அவ்வாறு செய்யும்போது, இந்த அருளுக்காக நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.

தீவிர அன்புகொண்ட என் ஆண்டவரே, நீர் பாவத்தை வெறுக்கிறீர்; ஆனால் பாவியை அன்பு செய்கிறீர். எல்லாப் பாவங்களிலிருந்தும் பாவத்தின் மீதான எல்லாப் பற்றுகளிலிருந்தும் என்னை விடுவிக்க நீர் முழுமனத்துடன் விரும்புகிறீர். மனந்திரும்புவதற்கான உமது அழைப்புக்கு நான் முழு இதயத்தோடு பதிலளிக்கும்படி, உமது அன்பான கடிந்துரைகளைக் கேட்க என் மனத்தையும் இதயத்தையும் திறந்தருளும். அன்பு ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன். உம்மை இன்னும் அதிகமாக அன்பு செய்யும்படி என்னைப் பாவத்திலிருந்து விடுவித்தருளும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

இன்றைய புனிதர் – புனித மோனிக்கா—நினைவு நாள்

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்


  Subscribe to our YouTube channel  
  to be notified about new content.