தமிழ்

ஆண்டவரின் நாள் உங்களுக்காகவே!

ஜனவரி 21, 2020
பொதுக்காலம் இரண்டாம் வாரத்தின் செவ்வாய்க்கிழமை
இன்றைய வாசகங்கள்

புனித ஆக்னஸ், கன்னியும் மறைசாட்சியும்—நினைவு

“ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை.”  மாற்கு 2:27

ஓய்வுநாளன்று இயேசுவின் சீடர்கள் வயல்வழியே நடந்து சென்றபோது தானியக் கதிர்களைக் கொய்ததற்காகச் சில பரிசேயர்கள் அவர்களைக் குறைகூறினர். அவர்களுக்குப் பதிலாகவே இயேசு இவ்வாறு கூறினார். சீடர்கள் பசியோடு இருந்ததால், இயல்பாகச் செய்யக்கூடியதையே செய்தனர். ஆனால், பரிசேயர்கள் இதைப் பகுத்தறிவின்றிக் குறைகூறுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். தானியக் கதிர்களைக் கொய்ததன் மூலம் சீடர்கள் ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

முதலில், அடிப்படைப் பொது அறிவின் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது அறிவுக்குப் பொருந்தாதது. சீடர்கள் வயல்வழியே நடந்துசென்றபோது உண்பதற்காகத் தானியக் கதிர்களைக் கொய்ததால், அன்பும் இரக்கமும் நிறைந்த நம் கடவுள் உண்மையிலேயே மனம் வருந்துவாரா? பாவம் குறித்த அளவுகடந்த அச்சமுள்ள மனம் ஒருவேளை அப்படி நினைக்கலாம். ஆனால், இத்தகைய செயலால் கடவுள் மனம் வருந்துவதில்லை என்பதை நமது இயல்பான பொது அறிவு தெளிவாக உணர்த்த வேண்டும்.

இதைப் பற்றி இயேசு இறுதியாகக் கூறிய வார்த்தைகள் உண்மையைத் தெளிவுபடுத்துகின்றன. “ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை.” வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஓய்வுநாளின் நோக்கம் பாவம் குறித்த அளவுகடந்த அச்சத்தைத் தரும் சுமையை நம்மீது சுமத்துவது அல்ல; மாறாக, நாம் ஓய்வெடுத்து இறைவனை வழிபடுவதற்கான விடுதலையை அளிப்பதே. ஓய்வுநாள் கடவுள் நமக்கு அளித்த கொடை.

இன்று நாம் ஓய்வுநாளை எவ்வாறு கடைப்பிடிக்கிறோம் என்று பார்க்கும்போது, இது நம் நடைமுறை வாழ்வுக்கும் பொருந்துகிறது. ஞாயிற்றுக்கிழமை புதிய ஓய்வுநாள்; அது ஓய்வெடுப்பதற்கும் இறைவனை வழிபடுவதற்குமான நாள். சில வேளைகளில் இந்தக் கடமைகளை நாம் சுமைகளாகக் கருதலாம். பாவம் குறித்த அளவுகடந்த அச்சத்துடனும், சட்டத்தின் எழுத்தை மட்டுமே பற்றிக்கொண்டும் கட்டளைகளைப் பின்பற்றுவதற்கான அழைப்பாக இவை நமக்குக் கொடுக்கப்படவில்லை. அருள் வாழ்வுக்கான அழைப்பாகவே இவை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

அப்படியானால், ஞாயிற்றுக்கிழமைகளில் நாம் எப்போதும் திருப்பலியில் பங்கேற்று ஓய்வெடுக்க வேண்டியதில்லை என்று பொருளா? நிச்சயமாக இல்லை. திருஅவையின் இந்தக் கட்டளைகள் கடவுளின் திருவுளம் என்பது தெளிவானது. இந்தக் கட்டளைகளை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதே உண்மையான கேள்வி. அவற்றை வெறும் சட்டக் கடமைகளாகக் கருதும் கண்ணியில் விழாமல், நமது நலனுக்காக நமக்கு அளிக்கப்பட்ட அருளுக்கான அழைப்புகளாக அவற்றை ஏற்று வாழ முயல வேண்டும். இந்தக் கட்டளைகள் நமக்காகவே உள்ளன. ஓய்வுநாள் நமக்குத் தேவை என்பதாலேயே அவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஞாயிறு திருப்பலி நமக்குத் தேவை; ஒவ்வொரு வாரமும் ஓய்வெடுக்க ஒரு நாளும் நமக்குத் தேவை.

ஆண்டவரின் நாளை நீங்கள் எவ்வாறு கொண்டாடுகிறீர்கள் என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள். வழிபடவும் ஓய்வெடுக்கவும் விடுக்கப்படும் அழைப்பை, கடவுளின் அருளால் புதுப்பிக்கப்பட்டுப் புத்துணர்வு பெறுவதற்காக அவர் உங்களுக்கு விடுக்கும் அழைப்பாகப் பார்க்கிறீர்களா? அல்லது நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையாக மட்டுமே பார்க்கிறீர்களா? இன்று சரியான மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள முயலுங்கள்; அப்போது ஆண்டவரின் நாள் உங்களுக்கு முற்றிலும் புதிய பொருளைப் பெறும்.

ஆண்டவரே, ஓய்வெடுத்து உம்மை வழிபடும் நாளாகப் புதிய ஓய்வுநாளை ஏற்படுத்தியதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையையும் கடன் திருநாளையும் நீர் விரும்பும் விதத்தில் வாழ எனக்கு உதவியருளும். உம்மை வழிபடவும் புதுப்பிக்கப்படவும் நீர் அளித்த கொடையாக இந்த நாள்களைக் காண எனக்கு உதவியருளும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்