ஜனவரி 31, 2020
பொதுக்காலம் மூன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை
இன்றைய வாசகங்கள்
புனித யோவான் போஸ்கோ, அருள்பணியாளர்—நினைவு
![]()
“இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை விளக்கலாம்? அது ஒரு கடுகு விதைக்கு ஒப்பானது. அதை நிலத்தில் விதைக்கும்போது, அது பூமியிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனால் விதைத்தபின், அது முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாக வளர்கிறது…” மாற்கு 4:30-32
இதை நினைத்துப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. இந்தச் சின்னஞ்சிறு விதைக்குள் எத்தனையோ சாத்தியங்கள் உள்ளன. எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாக வளரவும், உணவின் ஆதாரமாகவும், வானத்துப் பறவைகளின் உறைவிடமாகவும் விளங்குவதற்கான ஆற்றல் அந்தச் சிறிய விதைக்குள் உள்ளது.
எல்லாச் செடிகளும் ஒரு விதையிலிருந்துதான் வளரத் தொடங்குகின்றன என்பதை நாம் அறிந்திருப்பதால், இயேசு பயன்படுத்தும் இந்த ஒப்புமை நம்மில் ஏற்படுத்த வேண்டிய அளவுக்கு வியப்பை ஏற்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் இயற்கை உலகின் இந்த அற்புதத்தைச் சிந்தித்துப் பாருங்கள். அந்தச் சிறிய விதைக்குள் இத்தனை ஆற்றல் எவ்வாறு பொதிந்துள்ளது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
தமது ஆட்சியைக் கட்டியெழுப்ப இயேசு நம் ஒவ்வொருவரையும் பயன்படுத்த விரும்புகிறார் என்பதை இந்த உண்மை வெளிப்படுத்துகிறது. நம்மால் அதிகம் செய்ய முடியாது என்றும், மற்றவர்களைப்போல் நமக்குத் திறமைகள் இல்லை என்றும், நம்மால் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்த முடியாது என்றும் நாம் நினைக்கலாம். ஆனால் அது உண்மையல்ல. உண்மை என்னவென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் நம்ப முடியாத அளவுக்கு ஆற்றல் பொதிந்துள்ளது; அதை முழுமையாகப் பலனளிக்கச் செய்யக் கடவுள் விரும்புகிறார். நம் வாழ்வின் வழியாக உலகிற்கு மகிமைமிக்க ஆசிகளை வழங்க அவர் விரும்புகிறார். அவர் செயலாற்ற அனுமதிப்பது மட்டுமே நாம் செய்ய வேண்டியது.
விசுவாசத்தின் வழியாகவும் அவரது திருவுளத்திற்கு நம்மைக் கையளிப்பதன் வழியாகவும், ஒரு விதையைப்போல் அவரது இரக்கம் என்னும் வளமான நிலத்தில் நாம் நடப்படுவதற்கு இடமளிக்க வேண்டும். அன்றாட இறைவேண்டல் என்னும் நீர் நமக்குப் பாய்ச்சப்பட வேண்டும்; இறைமகனின் ஒளிக்கதிர்கள் நம்மீது வீசுவதற்கு நாம் இடமளிக்க வேண்டும். அப்போது, உலகம் தோன்றியதிலிருந்தே அவர் விரும்பித் திட்டமிட்டுள்ள அனைத்தையும் நம்மிலிருந்து விளையச் செய்வார்.
கடவுள் உங்கள் ஆன்மாவிற்குள் வைத்துள்ள வியத்தகு ஆற்றலை இன்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வழியாகத் தமது ஆட்சி மலரச் செய்யவும், அதை நிறைவாகச் செய்யவும் வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் உங்களைப் படைத்தார். இதை எளிய மனத்துடன் நம்புவதும், உங்கள் வாழ்வில் கடவுள் செய்ய விரும்புவதைச் செய்ய அவருக்கு இடமளிப்பதுமே உங்கள் பொறுப்பு.
ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன். என் வாழ்வில் நீர் செய்துள்ள அனைத்திற்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். என்னிடமிருந்து நீர் இன்னும் விரும்பும் அனைத்திற்காகவும் இப்போதே உமக்கு நன்றி கூறுகிறேன். நீர் வந்து உமது அருளால் என்னைப் பேணி வளர்த்து, என் வாழ்விலிருந்து ஏராளமான நல்ல கனிகளை விளையச் செய்யும்படி, ஒவ்வொரு நாளும் என்னை உம்மிடம் கையளிக்க இறைஞ்சுகிறேன். இயேசுவே, உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்


