தமிழ்

முழுமையான மாற்றம்

பிப்ரவரி 3, 2020
பொதுக்காலத்தின் நான்காம் வாரம் திங்கள்
இன்றைய வாசகங்கள்

புனித பிளாசியார், ஆயரும் மறைசாட்சியும்—விருப்ப நினைவு

புனித அன்ஸ்கர், ஆயர்—விருப்ப நினைவு

அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, இலேகியோன் பிடித்திருந்த மனிதர் ஆடை அணிந்து, தெளிந்த அறிவுடன் அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.  அவர்கள் அச்சத்தால் ஆட்கொள்ளப்பட்டார்கள்.  மாற்கு 5:15

மிகவும் பரபரப்பான ஒரு நிகழ்வைத் தொடர்ந்து இந்தச் சிறிய பகுதி வருகிறது.  கல்லறைகளிடையே வாழும் ஓர் இளைஞரைப் பல பேய்கள் முழுமையாகப் பிடித்திருக்கின்றன.  தாங்கள் பலர் என்று கூறி, அந்தப் பேய்கள் தங்களை “இலேகியோன்” என்று அடையாளப்படுத்துகின்றன.  இந்த மனிதர் கட்டுக்கடங்காதவராகவும், அறிவு தெளிவற்றவராகவும், இந்தப் பேய்களின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருப்பவராகவும் உள்ளார் என்பது இந்நிகழ்விலிருந்து தெளிவாகிறது.

நிகழ்வு தொடர்கையில், இயேசு பேய்களிடம் பேசி, அவற்றைக் கடிந்துகொண்டு, அம்மனிதரிடமிருந்து வெளியேற்றி, ஒரு பன்றிக் கூட்டத்திற்குள் அனுப்புகிறார்.  பன்றிகள் சரிவில் ஓடிச்சென்று ஏரியில் மூழ்குகின்றன.  அதன்பின், அந்த மனிதர் முற்றிலும் மாற்றம் அடைந்தவராக அங்கே அமர்ந்து மற்றவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார்.

இந்த நிகழ்வில் கவனிக்க வேண்டிய ஓர் ஆர்வமூட்டும் அம்சம் என்னவென்றால், ஊர் மக்கள் வெளியே வந்து, அந்த மனிதர் “தெளிந்த அறிவுடன்” அங்கே அமர்ந்திருப்பதைக் கண்டபோது, அவர்கள் திகைத்துப்போய் “அச்சத்தால் ஆட்கொள்ளப்படுகிறார்கள்.”  இந்தச் சூழ்நிலையைப் பற்றி என்ன நினைப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.  அது ஏன்?

இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.  அவற்றில் ஒன்றைப் பார்ப்போம்.  ஒரு படையளவு பேய்கள் பிடித்திருந்ததால், இந்த இளைஞர் இயல்பாக வாழ முடியாத நிலையில் இருந்தார்; அவருக்கு இனி வழியே இல்லை என்று ஊர் மக்கள் முடிவுசெய்திருந்தார்கள்.  அவரைப் பற்றிய நம்பிக்கையை அவர்கள் கைவிட்டிருந்தார்கள்; பெரும்பாலும் அவருடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பியிருக்க மாட்டார்கள்.  அவர்கள் அவரைக் கண்டு அஞ்சினார்கள்.  ஆனால், அதே மனிதர் முற்றிலும் மாற்றம் அடைந்து, இயல்பாகவும் தெளிந்த அறிவுடனும் அங்கே அமர்ந்திருப்பதைக் காணும்போது, என்ன நினைப்பது என்று மக்களுக்குத் தெரியவில்லை.  அவர்கள் திகைத்துப்போகிறார்கள்.  தங்களுக்குப் புரியாததைக் கண்டு அவர்கள் அஞ்சுவதால், அவர்களது திகைப்பு அச்சமாக மாறுகிறது.

இது நமக்கு ஓர் ஆர்வமூட்டும் உண்மையை வெளிப்படுத்துகிறது.  கடவுளின் வல்லமையை நாம் புரிந்துகொள்ளத் தவறினால், அந்த வல்லமையை நேரில் எதிர்கொள்ளும்போது உண்மையிலேயே அதைக் கண்டு அஞ்சுவோம் என்பதை இது வெளிப்படுத்துகிறது.  இந்த மனிதரின் முழுமையான மாற்றத்தைக் கண்டு ஊர் மக்கள் பெருமகிழ்ச்சியாலும் பரவசத்தாலும் நிறைந்திருக்க வேண்டும்.  ஆனால், பெருமகிழ்ச்சிக்கும் பரவசத்திற்கும் பதிலாக, அவர்கள் அஞ்சினார்கள்.  கடவுளின் எல்லாம் வல்ல ஆற்றலை அவர்கள் புரிந்துகொள்ளாததால் அஞ்சினார்கள்.

இன்று கடவுளின் வல்லமையையும் மாட்சியையும் பற்றிச் சிந்தியுங்கள்.  அவர் பெரிய செயல்களைச் செய்யவும், உங்கள் வாழ்வில் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவரவும் விரும்புகிறார்.  நம் உலகில் பதுங்கியிருக்கும் தீயவனை வெளியேற்றி, அதற்குப் பதிலாகத் தமது இரக்கத்தையும் அமைதியையும் கொண்டுவர அவர் விரும்புகிறார்.  கடவுளின் வல்லமையைப் பற்றிச் சிந்திக்கும்போது, அவரை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள உங்களைத் திறந்துகொடுங்கள்.  நீங்கள் அவரைப் புரிந்துகொண்டால், அவருடைய நற்செயல்களில் மகிழ இன்னும் முழுமையாக ஆயத்தமாவீர்கள்.

ஆண்டவரே, உமது எல்லாம் வல்ல ஆற்றலில் நான் மகிழ்கிறேன்.  உமது மேன்மையிலும் மாட்சியிலும் நான் மகிழ்கிறேன்.  எங்கள் உலகிலும் என்னைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்விலும் நீர் செயலாற்றும் பல்வேறு வழிகளைக் காண எனக்கு உதவியருளும்.  மாற்றம் தரும் உமது வல்லமை செயலாற்றுவதை நான் காணும்போது, நீர் செய்யும் அனைத்திற்காகவும் என் இதயத்தை நன்றியால் நிரப்பியருளும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்