ஏப்ரல் 11, 2023
பாஸ்கா எண்கிழமையின் செவ்வாய்க்கிழமை
இன்றைய வாசகங்கள்

இயேசு அவரிடம், “என்னைப் பற்றிக்கொண்டிருப்பதை நிறுத்து; ஏனெனில் நான் இன்னும் தந்தையிடம் விண்ணேறிச் செல்லவில்லை. மாறாக, என் சகோதரர்களிடம் சென்று, ‘நான் என் தந்தையும் உங்கள் தந்தையுமானவரிடம், என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்கிறேன்’ என்று சொல்” என்றார். யோவான் 20:17
இயேசு முதலில் காட்சியளித்தவர்களில் மகதலா மரியாவும் ஒருவர். அவர் இயேசுவின்மீது ஆழ்ந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தார். குறிப்பாக, வெளிப்படையாகத் தெரிந்த அவரது பாவங்களை மன்னித்து, அவரிடமிருந்து ஏழு பேய்களை விரட்டியபோது இயேசு காட்டிய பேரிரக்கமே இதற்குக் காரணம். இயேசு இவ்வாறு செய்தபின், மரியா அவரை மிகுந்த பக்தியுடன் பின்பற்றுபவரானார். இயேசு சிலுவையில் தொங்கியபோதும் அவருக்கு உண்மையாயிருந்த ஒருசிலரில் மரியாவும் ஒருவர்.
வாரத்தின் முதல் நாளான, இயேசு சிலுவையில் அறையப்பட்டதைத் தொடர்ந்து வந்த ஞாயிற்றுக்கிழமையன்று, யூத வழக்கப்படி இயேசுவின் உடலுக்கு நறுமணத் தைலம் பூச மரியா கல்லறைக்கு வந்தார். ஆனால் அவர் அங்கு வந்தபோது இயேசுவின் உடலைக் காணவில்லை. அவர் அழுதுகொண்டிருந்தபோது இயேசு அவருக்குத் தோன்றினார். ஆனால் இயேசு புதிய, மாட்சிமைப்படுத்தப்பட்ட உடலுடன் இருந்ததால், மரியா உடனடியாக அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. இயேசு “மரியா” என்று அவரது பெயரைச் சொன்னபோது, அவர் இயேசுவை அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் அவரைத் தழுவிக்கொள்வதற்குப் பதிலாக, “என்னைப் பற்றிக்கொண்டிருப்பதை நிறுத்து…” என்று இயேசு கூறினார். இயேசு ஏன் இவ்வாறு கூறினார்?
இயேசுவின்மீது மரியா கொண்டிருந்த பற்றும் பக்தியும் அழகானவையாகவும் புனிதமானவையாகவும் இருந்தாலும், அவை இன்னும் முழுமை பெறவில்லை. தாம் அறிந்து பின்பற்றிய ஆண்டவரையே அவர் விரும்பினார். இயேசுவுடன் முன்பு தமக்கிருந்த உறவு மீண்டும் கிடைக்க வேண்டுமென விரும்பினார். ஆனால் இதன் காரணமாகவே, “என்னைப் பற்றிக்கொண்டிருப்பதை நிறுத்து…” என்று இயேசு கூறினார். இயேசுவோ இதைவிட மிக மேலான ஒன்றை விரும்பினார். தம்முடன் மரியா கொண்டிருந்த உறவு விரைவில் இன்னும் சிறந்ததாக மாறப்போகிறது என்று அவருக்குச் சொன்னார். இனி இயேசு அவரது இவ்வுலகத் துணையாக மட்டுமே இருக்கமாட்டார்; மாறாக, விரைவில் அவருக்குள் வாழ்வார், அவரது இதயத்திலேயே குடிகொள்வார், அவருடன் ஒன்றித்திருப்பார், என்றென்றும் அவரது மணமகனாக இருப்பார். ஆனால் இயேசு தமது தெய்வீக மீட்புப் பணியை நிறைவுசெய்ய விண்ணகத்திலுள்ள தந்தையிடம் விண்ணேறிச் சென்ற பின்னரே இது நிகழ முடியும்.
சில வேளைகளில் நாமும் நம் ஆண்டவரிடம் இவ்வுலக வாழ்வுக்குரிய நன்மைகளை மட்டுமே நாடுகிறோம். “நம் அன்றாட உணவுக்காக”, அதாவது வாழ்வின் அடிப்படைத் தேவைகள் அனைத்திற்காகவும் நாம் அவரை நம்பியிருக்க வேண்டியது உண்மைதான். இருந்தாலும், கடவுள் நமக்கு அளிக்க விரும்பும் கொடைகள் இவ்வுலகிலுள்ள எதையும்விட மிக மேலானவை என்பதை நாம் உணர வேண்டும். இயற்கைக்கு அப்பாற்பட்ட அருள் என்னும் கொடை, அதிபுனித மூவொரு இறைவன் நமக்குள் குடிகொள்ளும் கொடை, நம் ஆண்டவருடன் ஒன்றித்திருக்கும் கொடை ஆகியவற்றுக்காகவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். இதுவே நம் ஆண்டவரின் இறுதி இலக்கும் விருப்பமுமாகும்.
“என்னைப் பற்றிக்கொண்டிருப்பதை நிறுத்து; ஏனெனில் நான் இன்னும் தந்தையிடம் விண்ணேறிச் செல்லவில்லை” என்று இயேசு மரியாவிடம் கூறிய வார்த்தைகளை இன்று சிந்தித்துப் பாருங்கள். ஆனால் இப்போது இயேசு உண்மையாகவே தந்தையிடம் விண்ணேறிச் சென்றுவிட்டார் என்பதை அறிந்தவர்களாகச் சிந்தியுங்கள். ஆகவே, விண்ணகத்தில் ஆட்சி செய்யும் தம்மைப் பற்றிக்கொள்ளும்படி இப்போது அவர் நம் அனைவரையும் அழைக்கிறார். நீங்கள் உங்கள் முழுமையோடு அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று நம் ஆண்டவரின் இதயம் கொண்டுள்ள ஆழ்ந்த ஏக்கத்தைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் உங்களுக்குள் குடிகொள்ளவும், உங்களுடன் ஒன்றித்திருக்கவும், எல்லா வகையிலும் உங்களை உருமாற்றவும் விரும்புகிறார். புனித மகதலா மரியா இப்போது என்றென்றைக்கும் இந்தப் புனித ஒன்றிப்பில் மகிழ்ந்திருக்கிறார். இதே கொடை உங்களுக்கும் வழங்கப்படுகிறது. அவரைப் பற்றிக்கொள்ளுங்கள்; ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். ஏனெனில் இதுவே உங்கள் நித்திய மகிழ்ச்சியாக இருக்கும்.
உயிர்த்தெழுந்து விண்ணேறிச் சென்ற என் ஆண்டவரே, நீர் இப்போது விண்ணகத்தில் முழுமையான மாட்சியுடனும் மகிமையுடனும் ஆட்சி செய்கிறீர். உமது மாட்சிமிக்க வாழ்வுக்குள் என்னை ஈர்த்துக்கொள்ளும்; என் முழு இதயத்தோடும் உம்மைப் பற்றிக்கொள்ள என்னை அழைத்தருளும். அன்பு ஆண்டவரே, நான் என்றென்றும் உம்மைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நீர் வந்து என்னுள் குடிகொள்ள உம்மை அழைக்கிறேன். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
உயிர்ப்புப் பெருவிழாவிற்கான மேலும் சில பதிவுகள்
ஐந்தாம் நாள்: இறை இரக்க ஞாயிறுக்கான தயாரிப்பு நவநாள்
உயிர்ப்புப் பெருவிழாவிற்கான செபத் தியானம்
பாஸ்கா காலத்திற்கான மறைநூல் தியானங்கள்
செபமாலை – மகிமை நிறை மறையுண்மைகள் (திருவிவிலியப் பகுதிகளுடன்)
புனித பவுஸ்தினாவின் இறை இரக்க மன்றாட்டுமாலை
அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்
இன்றைய புனிதர் – புனித ஸ்தனிஸ்லாஸ், ஆயரும் மறைசாட்சியும்
(இவரது நினைவுநாள் பாஸ்கா எண்கிழமையில் வருவதால், இந்த ஆண்டு திருவழிபாட்டு நினைவுநாளாகக் கொண்டாடப்படுவதில்லை)
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்






