பிப்ரவரி 7, 2024
பொதுக்காலம் ஐந்தாம் வாரம் புதன்கிழமை
இன்றைய வாசகங்கள்

இயேசு மீண்டும் மக்கள் கூட்டத்தைத் தம்மிடம் அழைத்து அவர்களிடம், “நீங்கள் அனைவரும் எனக்குச் செவிசாய்த்துப் புரிந்துகொள்ளுங்கள். வெளியிலிருந்து ஒருவருக்குள் செல்லும் எதுவும் அவரைத் தீட்டுப்படுத்த முடியாது; மாறாக, உள்ளிருந்து வெளியே வருபவையே அவரைத் தீட்டுப்படுத்துகின்றன” என்றார். மாற்கு 7:14–15
உங்களுக்குள் என்ன இருக்கிறது? உங்கள் இதயத்தில் என்ன இருக்கிறது? வருத்தத்திற்குரிய வகையில், உள்ளிருந்து வெளிவரும் தீய பண்புகளின் பட்டியலுடன் இன்றைய நற்செய்தி முடிவடைகிறது: “தீய எண்ணங்கள், கற்பின்மை, திருட்டு, கொலை, விபசாரம், பேராசை, தீய மனம், வஞ்சகம், காமவெறி, பொறாமை, கடவுள் பழிப்பு, செருக்கு, அறிவின்மை.” உள்ளதை உள்ளபடியே பார்த்தால், இந்தத் தீய பண்புகளில் எதுவுமே விரும்பத்தக்கதல்ல என்பது தெளிவு. இவை அனைத்தும் மிகவும் அருவருப்பானவை. இருந்தும், மக்கள் ஏதோ ஓர் அளவில் அடிக்கடி எதிர்கொள்ளும் பாவங்களாக இவை இருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, பேராசையை எடுத்துக்கொள்ளுங்கள். அது என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும்போது, பேராசைக்காரர் என்று அறியப்பட யாரும் விரும்புவதில்லை. அது வெட்கத்திற்குரிய ஒரு பண்பு. ஆனால், பேராசையைப் பேராசையாகப் பார்க்காதபோது, அதன்படி வாழும் வலையில் எளிதாக விழுந்துவிடலாம். பேராசை கொண்டவர் இதையோ அதையோ அளவுக்கு அதிகமாக விரும்புகிறார். அதிகப் பணம், இன்னும் நல்ல வீடு, இன்னும் அழகான கார், இன்னும் ஆடம்பரமான விடுமுறைப் பயணங்கள் என விரும்புகிறார். இவ்வாறு ஒருவர் பேராசையுடன் நடந்துகொள்ளும்போது, பேராசை விரும்பத்தகாததாக அவருக்குத் தெரிவதில்லை. பேராசையைச் சார்பின்றிப் பார்க்கும்போதுதான், அது உண்மையில் என்ன என்பது புரிகிறது.
இந்த நற்செய்தியில், தீய பண்புகளின் இந்த நீண்ட பட்டியலைக் குறிப்பிடுவதன் மூலம் இயேசு நமக்கு வியத்தகு இரக்கச் செயல் ஒன்றைச் செய்கிறார். அவர் நம்மை உலுக்கி, சற்றுப் பின்வாங்கி நின்று, பாவத்தை அதன் உண்மை நிலையில் பார்க்க அழைக்கிறார். இந்தத் தீய பண்புகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றின்படி நீங்கள் வாழும்போது, நீங்கள் தீட்டுப்படுகிறீர்கள் என்பதையும் இயேசு தெளிவுபடுத்துகிறார். நீங்கள் பேராசைக்காரராக, பொய்யராக, கொடூரமானவராக, புறங்கூறுபவராக, வெறுப்பு நிறைந்தவராக, செருக்குள்ளவராக மாறுகிறீர்கள். உள்ளதை உள்ளபடியே பார்த்தால், இப்படி இருக்க யாரும் விரும்புவதில்லை.
அந்தத் தீய பண்புகளின் பட்டியலில் எதை எதிர்த்து நீங்கள் மிக அதிகமாகப் போராடுகிறீர்கள்? உங்கள் சொந்த இதயத்திற்குள் நீங்கள் என்ன காண்கிறீர்கள்? கடவுளின் முன்னிலையில் உங்களிடமே நேர்மையாக இருங்கள். இவற்றிலிருந்தும் எல்லா அசுத்தங்களிலிருந்தும் விடுபட்டு, உங்கள் இதயம் தூய்மையாகவும் புனிதமாகவும் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். ஆனால் உங்கள் சொந்த இதயத்தை நேர்மையுடன் பார்க்க முடியாவிட்டால், நீங்கள் போராடிக்கொண்டிருக்கும் பாவத்தை விலக்குவது கடினமாக இருக்கும்.
நம் ஆண்டவர் சுட்டிக்காட்டிய பாவங்களின் இந்தப் பட்டியலை இன்று சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, ஒவ்வொரு பாவத்தையும் அதன் உண்மையான நிலையில் பார்க்க உங்களைத் திறந்துகொடுங்கள். புனிதமான சினத்தோடு இந்தப் பாவங்களை வெறுத்தொதுக்குங்கள்; பின்னர், நீங்கள் மிக அதிகமாகப் போராடிக்கொண்டிருக்கும் பாவத்தின் மீது உங்கள் பார்வையைத் திருப்புங்கள். அந்தப் பாவத்தை நீங்கள் உணர்வுபூர்வமாகக் கண்டு விலக்கும்போது, நம் ஆண்டவர் உங்களை வலுப்படுத்தவும் உங்கள் இதயத்தைத் தூய்மைப்படுத்தவும் தொடங்குவார் என்பதை அறிந்துகொள்ளுங்கள். இவ்வாறு நீங்கள் அந்தத் தீட்டிலிருந்து விடுபட்டு, அதற்குப் பதிலாக, நீங்கள் எவ்வாறு இருக்கும்படி படைக்கப்பட்டீர்களோ அவ்வாறே கடவுளின் அழகிய பிள்ளையாக மாறுவீர்கள்.
இரக்கமுள்ள என் ஆண்டவரே, பாவத்தின் உண்மைத் தன்மையைக் காண எனக்கு உதவியருளும். குறிப்பாக, உமது அன்புப் பிள்ளையாகிய என்னைத் தீட்டுப்படுத்தும் என் இதயத்திலுள்ள பாவத்தை, என் சொந்தப் பாவத்தைக் காண எனக்கு உதவியருளும். என் பாவத்தை நான் காணும்போது, அதை விலக்கிவிட்டு முழு இதயத்துடன் உம்மிடம் திரும்புவதற்குத் தேவையான அருளை எனக்குத் தந்தருளும். இவ்வாறு உமது அருளிலும் இரக்கத்திலும் நான் புதிய படைப்பாக மாறுவேனாக. இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்!
இரண்டு அன்றாடத் தவக்காலத் தியான நூல்கள்:
பாலைநிலத்தில் 40 நாள்கள்
&
சிலுவையடியில் 40 நாள்கள்
பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்




