தமிழ்

அன்னை மரியாவுடன் புனித சனி

ஏப்ரல் 19, 2025

புனித சனி

பாஸ்கா முப்பெருநாட்களுக்கான மேலும் சில வளங்கள்

குவெர்ச்சினோ, பொதுச் சொத்து, Wikimedia Commons வழியாக

காணொளி

உலகின் மீட்பர் சிலுவையில் கொடூரமான மரணத்தைத் தழுவினார். நொறுங்கிய அவரது உடல் கல்லறையில் வைக்கப்பட்டது. அவரது சீடர்கள் சிதறிச் சென்றனர்; அடுத்து தங்களுக்கும் இதே கதி நேருமோ என்று அஞ்சினர். ஆனால் நம் அருள்மிகு அன்னையோ, தம் மகன் விரைவில் உயிர்த்தெழுவார் என்ற நிறைவான எதிர்நோக்குடன் விழித்திருந்தார்.

மரபின்படி, திருவழிபாட்டு ஆண்டின் சனிக்கிழமைகள் அருள்மிகு கன்னி மரியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் அச்சத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்திருந்தபோது, அன்னை மரியா புனித சனியன்று இயேசுவின் உயிர்ப்பைச் செபத்துடன் எதிர்பார்த்து விழித்திருந்தார் என்ற நம்பிக்கையும் இந்தப் பழமையான மரபு உருவானதற்கான காரணங்களில் ஒன்றாகும். தம் மகன் உயிர்த்தெழுவார் என்பதை அவர் அறிந்திருந்தார். எல்லா எதிர்பார்ப்புகளையும் கடந்த எதிர்நோக்கு அவரிடம் இருந்தது. அவரது விசுவாசம் உறுதியாக இருந்தது. தம் மகனின் வருகைக்காகக் காத்திருந்த அவரை, அவரது அன்பு விழிப்புடன் இருக்கச் செய்தது.

இயேசு உயிர்த்தெழுந்த பின் முதலில் காட்சியளித்தது அவரது சொந்த அன்னைக்கே என்ற கருத்து பல நூற்றாண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் இதை நம்பினார். லொயோலா புனித இஞ்ஞாசியாரும் இதை நம்பினார். நூற்றாண்டுகளாக இன்னும் பலரும் இந்த நம்பிக்கையைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்தக் காரணங்களால், சிந்தித்துத் தியானிக்கும் நம் அருள்மிகு அன்னையின் இதயத்தைப் பற்றித் தியானிப்பதற்குப் புனித சனி மிக ஏற்ற நாளாகும். அன்னை மரியா தம் மகனின் வாழ்வின் மறைபொருள்களைத் தம் இதயத்தில் இருத்திச் சிந்தித்தார் என்று திருவிவிலியத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அவர் வேதனையுற்று இறந்தபோது அவரருகில் நின்ற ஒருசிலரில் அன்னையும் ஒருவர். அவர் சிலுவையின் முன் நின்று, தம் மகனின் நிறைவான பலியைச் செபத்துடன் தியானித்தார். அருள்மிகு அன்னை அவரது உயிரற்ற உடலைத் தம் கரங்களில் ஏந்தி, அவரது ஆவி எங்கு சென்றிருக்கும் என்று சிந்தித்தார். இன்று, அவர் விரைவில் தம்மிடம் திரும்பி வரப்போவதைத் தியானித்தவாறு விழித்திருக்கிறார்.

சிந்தித்துத் தியானிக்கும் அவரது இதயத்தைப் பற்றித் தியானியுங்கள். உங்கள் இதயத்தை அவரது இதயத்துடன் ஒன்றிணைக்க முயலுங்கள். அவர் என்ன சிந்தித்தார், எதை எதிர்நோக்கினார் என்பதைப் புரிந்துகொள்ள முயலுங்கள். துயர்மிகுந்த இந்த நாளில் அவர் உணர்ந்ததை நீங்களும் உணர முயலுங்கள். அவரது விசுவாசத்தையும், நம்பிக்கையையும், மகிழ்வான எதிர்பார்ப்பையும் அனுபவிக்க முயலுங்கள்.

இந்த உலகில் எத்தனையோ பேர் விரக்தியிலும் குழப்பத்திலும் வாழ்கின்றனர். தங்களுக்காகக் காத்திருக்கும் புதிய வாழ்வைப் பற்றிய எதிர்நோக்கை எத்தனையோ பேர் இழந்துவிட்டனர். கடவுள் தங்களைத் தமது உயிர்ப்புக்குள் ஈர்த்துக்கொள்ள அனுமதிக்காமல், எத்தனையோ பேர் தங்களுக்கே உரிய ஒருவகை அக மரணத்தில் வாழ்கின்றனர். அந்த முதல் புனித சனியன்று நம் அருள்மிகு அன்னையின் இதயத்தில் உயிர்த்துடிப்புடன் விளங்கிய எதிர்நோக்கு, இன்று எத்தனையோ பேருக்குத் தேவைப்படுகிறது.

இன்று அமைதியில் புனித சனியின் உண்மைப் பொருளைத் தியானியுங்கள். நம் அருள்மிகு அன்னையின் மகிமைமிக்க இதயம் உங்களுக்கு ஊக்கமளித்து, விசுவாசம், எதிர்நோக்கு, அன்பு நிறைந்த அவரது வாழ்வுக்குள் உங்களை இன்னும் ஆழமாக ஈர்த்துக்கொள்ள அனுமதியுங்கள்.

பேரன்பிற்குரிய அன்னை மரியே, அந்த முதல் புனித சனியன்று நீர் உம் மகனுக்காக விழித்திருந்தீர். எதிர்நோக்கு என்னும் இறைக்கொடை உமக்குள் வளர இடமளித்தீர்; சிலுவையின் கொடூரத்திற்கு நடுவில் அந்த எதிர்நோக்கே உமது வலிமையாக இருக்கவும் இடமளித்தீர். இம்மண்ணுலக வாழ்வின் சவால்களை நான் தாங்கிக்கொள்ளும்போது, நானும் எதிர்நோக்கால் நிரப்பப்படும்படி, இன்று உமது அழகிய இதயத்தைத் தியானிக்க எனக்காக வேண்டிக்கொள்ளும். நம் ஆண்டவர் எனக்கு அளிக்க மிகவும் விரும்பும் புதிய வாழ்வின் அருளுக்காக நான் காத்திருக்கையில், மகிழ்வான எதிர்பார்ப்பு நிறைந்த இதயத்தை எனக்குத் தாரும். அன்னை மரியே, எனக்காக வேண்டிக்கொள்ளும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

நாற்பதாம் நாள் தியானங்கள்:
பாலைவனத்தில் 40 நாள்கள் & சிலுவையடியில் 40 நாள்கள்

இரண்டாம் நாள்: இறை இரக்க ஞாயிறுக்கான தயாரிப்பு நவநாள் செபம்

புனித வாரத்திற்கான மேலும் பல பதிவுகள்

புனித சனிக்கான செபத் தியானம்

செபமாலை – துயர்மிகு மறையுண்மைகள் (திருவிவிலியப் பகுதிகளுடன்)

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்


  Subscribe to our YouTube channel  
  to be notified about new content.