தமிழ்

இயேசு எப்போதும் உடனிருக்கிறார்

திங்கட்கிழமை, ஆகஸ்ட் 5, 2019

பொதுக்காலம் பதினெட்டாம் வாரம் திங்கட்கிழமை

இன்றைய வாசகங்கள்

புனித மரியா பெருங்கோவில் அர்ப்பணிப்பு – விருப்ப நினைவு

திருமுழுக்கு யோவானின் இறப்பைப் பற்றிக் கேள்விப்பட்ட இயேசு, படகில் ஏறித் தனியாக ஒரு தனிமையான இடத்திற்குச் சென்றார். இதைக் கேள்விப்பட்ட மக்கள் கூட்டம், தங்கள் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தது. அவர் படகிலிருந்து இறங்கிப் பெருந்திரளான மக்களைக் கண்டபோது, அவர்கள்மீது மனமிரங்கி, அவர்களுள் நோயுற்றோரைக் குணமாக்கினார்.  மத்தேயு 14:13-14

மனித நிலையில் பார்க்கும்போது, திருமுழுக்கு யோவானின் இறப்பு இயேசுவின் இதயத்தைத் துயரத்தில் ஆழ்த்தியது.  அவர் யோவானை அன்பு செய்தார்; யோவான் தலைவெட்டப்பட்டதால் ஆழ்ந்த வருத்தமடைந்தார்.  எனவே, அவர் தனிமையில் இருக்கப் படகில் ஏறி மக்கள் நடமாட்டமில்லாத ஓர் இடத்திற்குச் சென்றார்.  ஆனால் மக்கள் கூட்டமோ அவரிடமிருந்து இன்னும் அதிகமாகப் பெற ஏங்கியது!  அவர்கள் இயேசுவைக் காணவும் அவருக்குச் செவிசாய்க்கவும் விரும்பினார்கள்.  நோயுற்ற பலரை அவர்கள் அறிந்திருந்தார்கள்; இயேசு அவர்களைக் குணமாக்க வேண்டுமென விரும்பினார்கள்.  எனவே, அவர் தனிமையில் இருப்பதற்காகக் கூட்டத்திலிருந்து விலகிச் சென்றிருந்தபோதிலும், அவர்கள் அவரைத் தேடிச் சென்றார்கள்.

இயேசு எவ்வாறு செயல்பட்டார்? அவர் அவர்களைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டு, “இவர்கள் ஏன் என்னைத் தனியாக விடுவதில்லை? நான் துயரத்தில் இருக்கிறேன் என்பது இவர்களுக்குத் தெரியாதா?” என்று தமக்குள் சொல்லிக்கொண்டாரா? இல்லை. மாறாக, இயேசு அவர்கள்மீது இரக்கமும் பரிவும் கொண்டு, அவர்களிடையே நோயுற்றிருந்த பலரைக் குணமாக்க அவர்களிடம் சென்றார்.

இது நம் ஆண்டவரின் இதயத்தையும் பரிவையும் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.  பல வேளைகளில், கடவுளிடம் செல்ல நாம் அஞ்சுகிறோம்.  நம் பாவத்தின் காரணமாக அவரிடம் திரும்ப அஞ்சுகிறோம்.  அவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பாரோ, நம்மிடம் என்ன சொல்வாரோ என்று அஞ்சுகிறோம்.  குற்ற உணர்வும் வெட்கமும் நம்மை ஆட்கொள்வதால், நாம் அவரைத் தேடிச் செல்லத் தவறுகிறோம்.

ஆனால், இந்த நிகழ்வில் தம்மைத் தேடி வந்தவர்கள்மீது இயேசு பரிவு கொண்டதுபோல, நாமும் அவரைத் தேடிச் செல்லும் ஒவ்வொரு முறையும் அவர் எப்போதும் நம்மீது மிக ஆழ்ந்த பரிவு கொள்வார்.  நம் வாழ்வு பாவத்தில் மூழ்கியிருப்பதை உணர்ந்தாலும், நாம் அவரிடம் ஓடிச் சென்றால், அவர் நம்மைப் பரிவோடும் இரக்கத்தோடும் நோக்குவார்.  அவரது குணமளிக்கும் ஆற்றலையும் இரக்கத்தையும் நாடி நாம் மீண்டும் அவரிடம் திரும்பி வருவதால் அவர் ஒருபோதும் சலிப்படைவதில்லை.  நாம் எப்போதும் அவரில் நம்பிக்கை கொண்டு, மிகுந்த உறுதியுடன் அவரிடம் திரும்ப வேண்டும்.

நீங்கள் இருக்கும் நிலையிலேயே இயேசுவிடம் திரும்பிச் செல்வதில் எவ்வளவு தயக்கமின்றி இருக்கிறீர்கள் என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள்.  அவர் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று அஞ்சுகிறீர்களா அல்லது கவலைப்படுகிறீர்களா?  உங்கள் பாவத்தையோ பலவீனத்தையோ நினைத்து வெட்கப்படுகிறீர்களா?  அவர் உங்களைத் தீர்ப்பிட்டு, உங்கள்மீது அக்கறை கொள்ளாமல் இருப்பார் என்று கவலைப்படுகிறீர்களா?  அவரது அளவற்ற இரக்கத்தில் நம்பிக்கை வைத்து, அச்சமின்றி அவரிடம் ஓடிச் செல்லுங்கள்.

ஆண்டவரே, உமது அன்பிலும் பரிவிலும் நம்பிக்கை வைக்க எனக்கு உதவியருளும். நான் உம்மிடம் வர வேண்டுமென்று நீர் எப்போதும் ஏங்குகிறீர் என்பதை அறிந்துகொள்ள எனக்கு உதவியருளும். நான் உம்மிடம் வருவதைக் குறித்து நீர் ஒருபோதும் சலிப்படையாதது போல, நானும் உம்மிடம் வருவதில் ஒருபோதும் சலிப்படையாதிருப்பேனாக. இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய நினைவு – புனித மரியன்னை பெருங்கோவில் நேர்ந்தளிப்பு