தமிழ்

ஆண்டவரின் வார்த்தையின் வல்லமை

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 17, 2019

பொதுக்காலத்தின் இருபத்து நான்காம் வாரம் செவ்வாய்க்கிழமை

இன்றைய வாசகங்கள்

புனித இராபர்ட் பெல்லார்மின், ஆயரும் மறைவல்லுநரும் – விருப்ப நினைவு

“இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு!”  இறந்தவர் எழுந்து அமர்ந்து பேசத் தொடங்கினார்; இயேசு அவரை அவருடைய தாயிடம் ஒப்படைத்தார்.  லூக்கா 7:14b-15

சில நாட்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் சவப்பெட்டி அருகே நம் ஆண்டவர் இந்த வார்த்தைகளைச் சொன்னார்.  அவருடைய தாய் துயரத்தில் ஆழ்ந்திருந்தார்.  அவர் அந்தத் தாயின் ஒரே மகன்; அந்தத் தாயோ ஒரு கைம்பெண்.  இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்வதைக் கேட்டு, இறந்த தம் மகன் மீண்டும் உயிர் பெறுவதைக் கண்டபோது அந்தத் தாய்க்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை நினைத்துப் பாருங்கள்.  அது அவர் ஒருபோதும் மறக்க முடியாத, என்றென்றும் நன்றியோடு நினைவுகூரும் ஒரு தருணமாக இருந்திருக்கும்.

இந்த வார்த்தைகள் ஆழ்ந்த பொருள் நிறைந்தவை.  முதன்மையாக, இவை ஓர் அற்புத நிகழ்வை நிகழச் செய்த வார்த்தைகள்.  இயேசு பேசினார்; அவர் சொன்னது நிகழ்ந்தது.  அவரது கட்டளையால் இறந்தவர் மீண்டும் உயிர் பெற்றார்.

ஆனால் இந்த வார்த்தைகள் ஆழமான ஓர் ஆன்மிக உண்மையையும் வெளிப்படுத்துகின்றன.  இயேசு நம் அன்புக்குரியவர்களை மீண்டும் உடலளவில் உயிர்பெறச் செய்யாமல் இருக்கலாம்; எனினும், வேறு பல வழிகளில் வல்லமைமிக்க வார்த்தைகளை நம்மிடம் பேசுகிறார்.  நம் விசுவாசம் உறுதியாக இருந்து, எதிர்நோக்குடனும் நம்பிக்கையுடனும் சரணடைதலுடனும் நாம் அவரை நாடும்போது, நமது துயரத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் நம்மை எழுப்பும் வார்த்தைகளை அவர் நம்மிடம் பேசுவார்.

நீங்கள் நம் ஆண்டவரிடம் கொண்டுவர வேண்டியது என்ன?  உங்கள் வாழ்வில் உயிரற்றவராகவும் தனிமையில் இருப்பவராகவும் உங்களை உணரச் செய்வது எது?  எந்தத் துன்பத்தை, பாவத்தை, மனக்காயத்தை அல்லது விரக்தியை நீங்கள் நம் ஆண்டவரிடம் கொண்டுவர வேண்டும்?

இன்று, நம் ஆண்டவரின் வார்த்தைகளுக்குள்ள வல்லமையைச் சிந்தித்துப் பாருங்கள்.  குறிப்பாக, உங்கள் வாழ்வில் என்ன நிகழ வேண்டுமென நம் ஆண்டவர் கட்டளையிடக்கூடும் என்பதைச் சிந்தியுங்கள்.  இன்றைய நாளில் உங்கள் பாவங்களையும் உங்களை அழுத்தும் அனைத்தையும் அவரிடம் ஒப்படைத்து, அவர் உங்களிடம் பேசுவதைக் கேட்கச் செவிசாய்த்திருங்கள்.  “நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு!” என்று அவர் உங்களிடம் சொல்ல இடமளியுங்கள்.  உங்கள் பாவம், மனக்காயம், கோபம், வேதனை ஆகியவற்றிலிருந்து எழுந்திடுங்கள்.  அவரது வார்த்தைகள் உங்கள் உள்ளத்தில் ஆழப் பதிந்து, உயிரற்றதாகத் தோன்றுவதை மீண்டும் உயிர்பெறச் செய்து, உங்கள் வாழ்வை மாற்றியமைக்க இடமளியுங்கள்.

ஆண்டவரே, என்னையே முழுமையாகவும், வாழ்வில் என்னை அழுத்தும் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்.  என் பாவம், மனக்காயம், கோபம் ஆகியவற்றையும், நீர் என்னை அழைக்கும் புதுவாழ்வுக்குத் தடையாகத் தோன்றும் அனைத்தையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன்.  அன்பு ஆண்டவரே, அனைத்தையும் உம்மிடம் ஒப்படைத்து, என் விரக்தியிலிருந்து புதுவாழ்வுக்கு நீர் என்னை அழைப்பதைக் கேட்க எனக்கு அருளும்.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர் – புனித இராபர்ட் பெல்லார்மின்