தமிழ்

நம்மைப் பற்றிய பொய்யான பிம்பங்கள்

நவம்பர் 7, 2020
பொதுக்காலத்தின் முப்பத்தொன்றாம் வாரத்தின் சனிக்கிழமை
இன்றைய வாசகங்கள்

பணத்தின்மீது ஆசைகொண்ட பரிசேயர்கள் இவற்றையெல்லாம் கேட்டு, அவரை ஏளனம் செய்தார்கள். இயேசு அவர்களிடம், “நீங்கள் பிறர் முன்னிலையில் உங்களை நீதிமான்களாகக் காட்டிக்கொள்கிறீர்கள்; ஆனால் கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார். மனிதர்களால் உயர்வாக மதிக்கப்படுவது கடவுளின் பார்வையில் அருவருப்பானது” என்றார்.  லூக்கா 16:14-15

“கடவுள் உள்ளத்தை அறிவார்!”  நாம் ஆழமாக உணர்ந்திருக்க வேண்டிய எத்துணை பெரிய உண்மை இது!  வாழ்வில் பல நேரங்களில், பிறரைப் பற்றி நாம் தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கிறோம்; நம்மைப் பற்றிப் பிறரும் தவறான எண்ணங்களைக் கொண்டிருக்கிறார்கள்.  பிறர் பார்க்கும்படி தங்களைப் பற்றிய ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்கிக்கொண்டு, கடவுள் மட்டுமே அறிந்திருக்கும் உள்ளார்ந்த உண்மையைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்ளாத பரிசேயர்களின் இந்த மனப்போக்கின் மையத்தை இப்பகுதி தொடுகிறது.

அப்படியானால், உங்களுக்கு எது அதிக முக்கியமானது?  நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?  பிறருடைய கருத்துகளைப் பற்றி அதிக அக்கறை கொள்கிறீர்களா, அல்லது கடவுளின் பார்வையில் உங்கள் வாழ்வின் உண்மை நிலை என்ன என்பதைப் பற்றி அதிக அக்கறை கொள்கிறீர்களா?

இந்தப் போராட்டம் இரண்டு விதங்களில் அமையலாம்.  ஒருபுறம், பரிசேயர்களைப் போல நாமும் பிறர்முன் நம்மைப் பற்றிய ஒரு பொய்யான தோற்றத்தை வெளிப்படுத்த முயலலாம். அதே நேரத்தில், கடவுள் உண்மையை முழுமையாக அறிவார்; நாம் காட்ட முயலும் பொய்யான பிம்பத்தையும் அறிவார்.  மறுபுறம், நாம் யார் என்பதைப் பற்றிப் பிறர் தவறான பிம்பத்தைக் கொண்டிருப்பதை நாம் காணலாம்; இது நம்மை மிகவும் வேதனைப்படுத்தலாம்.  இவ்வாறு நிகழும்போது, பிறர்மீது கோபம் கொள்ளவும், நிதானமின்றி அளவுக்கு மீறி நம்மை நியாயப்படுத்திக்கொள்ளவும் நாம் முனையலாம்.

ஆனால் எது முக்கியம்?  எதைப் பற்றி நாம் அக்கறை கொள்ள வேண்டும்?  உண்மையே முக்கியம்; கடவுள் அக்கறை கொள்ளாதவற்றைப் பற்றி நாம் பெரிதாக அக்கறை கொள்ளக்கூடாது.  கடவுளின் திருவுளத்தில் இருப்பதைப் பற்றியும், நம்மையும் நம் வாழ்வையும் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றியும் மட்டுமே நாம் அக்கறை கொள்ள வேண்டும்.

பிறர் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படும் உங்கள் மனப்போக்கைப் பற்றி இன்று சிந்தியுங்கள்.  உங்களை உண்மையாக வெளிப்படுத்தும் நேர்மையான வாழ்வை நீங்கள் வாழ வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  தங்களைப் பற்றிப் பிறர் கொண்டிருந்த புகழ்ச்சியான, பொய்யான பிம்பங்களிலேயே மூழ்கியிருந்த பரிசேயர்களைப் போல இருக்காதீர்கள்.  உண்மையில் வாழ்வதைப் பற்றியும் கடவுளின் உள்ளத்தில் இருப்பதைப் பற்றியும் மட்டுமே அக்கறை கொண்டு, மற்றவற்றை அவரிடம் விட்டுவிடுங்கள்.  இறுதியில், அது மட்டுமே முக்கியம்.

ஆண்டவரே, உமது உள்ளத்தில் இருப்பதைக் காண எனக்கு உதவியருளும்; நீர் என்னை எவ்வாறு காண்கிறீர் என்பதைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ள எனக்கு உதவியருளும்.  நீர் என்னை அன்பு செய்கிறீர் என்பதை நான் அறிவேன்; நான் முழுமையாக உண்மையில் வாழ வேண்டுமென்று நீர் விரும்புகிறீர் என்பதையும் அறிவேன்.  உமது அன்பு எல்லாவற்றிலும் என் வாழ்வை வழிநடத்துவதாக.  இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்:  ஜேக்கப் ஜோர்டான்ஸ் வரைந்த ‘பரிசேயர்கள் நடுவில் கிறிஸ்து’


  Subscribe to our YouTube channel  
  to be notified about new content.