தமிழ்

ஆண்டவரைச் சந்திக்க ஆயத்தமாய்

நவம்பர் 8, 2020
பொதுக்காலத்தின் முப்பத்திரண்டாம் ஞாயிறு, ஆண்டு A
இன்றைய வாசகங்கள்

“எனவே, விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்களுக்கு நாளும் தெரியாது, நேரமும் தெரியாது.”  மத்தேயு 25:13

இந்த வாழ்விலிருந்து நீங்கள் பிரியும் நாளும் நேரமும் உங்களுக்குத் தெரிந்திருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.  நோய் அல்லது முதுமை காரணமாக மரணம் நெருங்கி வருவதைச் சிலர் அறிந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான்.  ஆனால், உங்கள் சொந்த வாழ்வில் இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்.  அந்த நாள் நாளைதான் என்று இயேசு உங்களிடம் சொன்னால் எப்படி இருக்கும்?  நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா?

நீங்கள் செய்து முடிக்க விரும்பும் பல நடைமுறை ஏற்பாடுகள் உங்கள் நினைவுக்கு வரக்கூடும்.  பலரும் தங்கள் அன்புக்குரியவர்கள் அனைவரையும் பற்றியும், தங்கள் மரணம் அவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றியும் சிந்திப்பார்கள்.  இப்போதைக்கு அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, ஒரே ஒரு கண்ணோட்டத்தில் மட்டும் இந்தக் கேள்வியைச் சிந்தித்துப் பாருங்கள்.  இயேசுவைச் சந்திக்க நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா?

இந்த வாழ்விலிருந்து நீங்கள் பிரிந்த பின், ஒரே ஒரு விஷயம்தான் முக்கியமானதாக இருக்கும்.  இயேசு உங்களிடம் என்ன சொல்வார்?  மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள இறைவார்த்தைக்குச் சற்று முன்பாக, இயேசு பத்துக் கன்னியர் உவமையைச் சொல்கிறார்.  அவர்களில் சிலர் அறிவுடையவர்களாக இருந்தார்கள்; தங்கள் விளக்குகளுக்குத் தேவையான எண்ணெயை வைத்திருந்தார்கள்.  இரவில் தாமதமாக மணமகன் வந்தபோது, அவர்கள் எரியும் விளக்குகளுடன் அவரைச் சந்திக்க ஆயத்தமாக இருந்தார்கள்; அவரும் அவர்களை வரவேற்றார்.  அறிவிலிகளோ ஆயத்தமாக இருக்கவில்லை; தங்கள் விளக்குகளுக்குத் தேவையான எண்ணெயும் அவர்களிடம் இல்லை.  மணமகன் வந்தபோது, அவரைச் சந்திக்கும் வாய்ப்பை அவர்கள் தவறவிட்டார்கள்; “ஆமென், நான் உங்களுக்குச் சொல்கிறேன், எனக்கு உங்களைத் தெரியாது” என்ற வார்த்தைகளைக் கேட்டார்கள் (மத்தேயு 25:12).

அவர்களுடைய விளக்குகளில் எண்ணெய் இருந்ததும் இல்லாததும் பிறரன்பைக் குறிக்கின்றன.  எந்த நாளிலும், எந்த நேரத்திலும் ஆண்டவரைச் சந்திக்க நாம் ஆயத்தமாக இருக்க வேண்டுமென்றால், நம் வாழ்வில் பிறரன்பு இருக்க வேண்டும்.  பிறரன்பு என்பது அன்பின் தீவிர உணர்வையோ உணர்ச்சியையோ விட மேலானது.  கிறிஸ்துவின் இதயத்தோடு பிறரை அன்பு செய்வதற்கான ஆழமான அர்ப்பணிப்பே பிறரன்பு.  பிறருக்கு முதலிடம் கொடுக்கத் தீர்மானித்து, இயேசு நம்மிடம் கொடுக்கச் சொல்வதையெல்லாம் அவர்களுக்கு வழங்குவதன் வழியாக நாம் வளர்த்துக்கொள்ளும் அன்றாடப் பழக்கம் அது.  அது ஒரு சிறிய தியாகமாகவோ, வீரமிக்க மன்னிப்புச் செயலாகவோ இருக்கலாம்.  எதுவாக இருந்தாலும், நம் ஆண்டவரைச் சந்திக்க ஆயத்தமாக இருக்க நமக்குப் பிறரன்பு தேவை.

உங்கள் வாழ்வில் நீங்கள் யாரை அன்பு செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்புகிறாரோ, அவர்களைப் பற்றி இன்று சிந்தியுங்கள்.  இதை நீங்கள் எவ்வளவு நன்றாகச் செய்கிறீர்கள்?  உங்கள் அர்ப்பணிப்பு எவ்வளவு முழுமையானதாக இருக்கிறது?  இதற்காக எந்த அளவுக்குச் செல்ல நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்?  இந்தக் கொடை உங்களிடம் குறைவாக இருப்பது குறித்து உங்கள் நினைவுக்கு வருவது எதுவாயினும், அதில் கவனம் செலுத்துங்கள். நீங்களும் அறிவுடையவராக, எந்த நேரத்திலும் ஆண்டவரைச் சந்திக்க ஆயத்தமாக இருக்கும்படி, அவரது அருளை மன்றாடிக் கேளுங்கள்.

ஆண்டவரே, என் வாழ்வில் பிறரன்பு என்னும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கொடையை வேண்டுகிறேன்.  பிறர்மீதான அன்பால் என்னை நிரப்பி, இந்த அன்பில் மிகுந்த தாராள மனதுடன் இருக்க எனக்கு உதவியருளும்.  எதையும் எனக்கென வைத்துக்கொள்ளாமல் அனைத்தையும் நான் கொடுப்பேனாக; இவ்வாறு, நீர் என்னை உமது இல்லத்திற்கு அழைக்கும் எந்த நேரத்திலும் உம்மைச் சந்திக்க முழுமையாக ஆயத்தமாய் இருப்பேனாக.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: ஃபீபி அன்னா டிராக்வேர் வரைந்த பத்துக் கன்னியர் உவமை (ஒரு பகுதி)


  Subscribe to our YouTube channel  
  to be notified about new content.