ஜனவரி 18, 2021
பொதுக்காலம் இரண்டாம் வாரத்தின் திங்கள்
இன்றைய வாசகங்கள்

“மணமகன் தங்களோடு இருக்கும்போது திருமண விருந்தினர்கள் நோன்பு நோற்க முடியுமா? மணமகன் தங்களோடு இருக்கும்வரை அவர்கள் நோன்பு நோற்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களிடமிருந்து அகற்றப்படும் நாள்கள் வரும்; அப்போது, அந்த நாளில் அவர்கள் நோன்பு நோற்பார்கள். மாற்கு 2:19–20
நோன்பு குறித்து இயேசுவிடம் கேள்வி எழுப்பிய திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்கும் பரிசேயர் சிலருக்கும் அவர் அளித்த பதிலை மேலே உள்ள பகுதி வெளிப்படுத்துகிறது. யோவானின் சீடர்களும் பரிசேயர்களும் நோன்பு குறித்த யூதச் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறார்கள், ஆனால் இயேசுவின் சீடர்கள் அவ்வாறு செய்வதில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இயேசுவின் பதில், நோன்பு குறித்த புதிய சட்டத்தின் மையக்கருத்தைத் தொடுகிறது.
நோன்பு நோற்பது ஓர் அருமையான ஆன்மிகப் பயிற்சி. நெறிபிறழ்ந்த உடல் சார்ந்த சோதனைகளை எதிர்த்து நிற்க மனவுறுதியை வலுப்படுத்தவும், ஒருவருடைய ஆன்மா தூய்மை பெறவும் அது உதவுகிறது. ஆனால் நோன்பு என்பது என்றென்றும் நிலைத்திருக்கும் ஒன்று அல்ல என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். ஒருநாள், விண்ணகத்தில் நாம் கடவுளை நேருக்கு நேர் காணும்போது, நோன்பு நோற்கவோ எந்த விதமான தவமுயற்சியை மேற்கொள்ளவோ இனி தேவையிருக்காது. ஆனால் மண்ணுலகில் வாழும்போது நாம் போராடுவோம், வீழ்வோம், வழிதவறுவோம். நாம் கிறிஸ்துவிடம் திரும்பிவர உதவும் சிறந்த ஆன்மிகப் பயிற்சிகளில் ஒன்று, இணைந்து மேற்கொள்ளப்படும் இறைவேண்டலும் நோன்பும் ஆகும்.
“மணமகன் அகற்றப்படும்போது” நோன்பு அவசியமாகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாம் பாவம் செய்து, கிறிஸ்துவோடு நமக்குள்ள ஒன்றிப்பு மங்கத் தொடங்கும்போது நோன்பு அவசியமாகிறது. அப்போதுதான் நோன்பின் வழியாக நாம் தனிப்பட்ட முறையில் செய்யும் தியாகம், நம் ஆண்டவருக்கு நம் இதயங்களை மீண்டும் திறக்க உதவுகிறது. பாவப் பழக்கங்கள் உருவாகி ஆழமாக வேரூன்றும்போது இது குறிப்பாக உண்மையாகிறது. நோன்பு நம் இறைவேண்டலுக்கு மிகுந்த வலிமை சேர்க்கிறது. கடவுளின் அருள் என்னும் “புதிய திராட்சை இரசம்” நமக்கு மிக அதிகமாகத் தேவைப்படும் இடங்களில் அதை ஏற்றுக்கொள்ளும் வகையில், நம் ஆன்மாக்களை விரிவடையச் செய்கிறது.
நோன்பையும் பிற தவமுயற்சிகளையும் நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள் என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் நோன்பு நோற்கிறீர்களா? உங்கள் மனவுறுதியை வலுப்படுத்தவும், இன்னும் முழுமையாகக் கிறிஸ்துவை நோக்கித் திரும்பவும் உதவும்படி தொடர்ந்து தியாகங்களைச் செய்கிறீர்களா? அல்லது நலமளிக்கும் இந்த ஆன்மிகப் பயிற்சி உங்கள் வாழ்வில் ஓரளவு புறக்கணிக்கப்பட்டுள்ளதா? இந்தப் புனித முயற்சியில் உங்களுக்குள்ள உறுதிப்பாட்டை இன்று புதுப்பித்துக்கொள்ளுங்கள்; கடவுள் உங்கள் வாழ்வில் வல்லமையோடு செயலாற்றுவார்.
ஆண்டவரே, நீர் என்மீது பொழிய விரும்பும் அருள் என்னும் புதிய திராட்சை இரசத்திற்கு என் இதயத்தைத் திறக்கிறேன். இந்த அருளை ஏற்கத் தகுந்த மனநிலையுடன் இருக்கவும், உமக்கு என் இதயத்தை இன்னும் திறக்கத் தேவையான எல்லா வழிகளையும் பயன்படுத்தவும் எனக்கு உதவியருளும். குறிப்பாக, நோன்பு என்னும் அருமையான ஆன்மிகப் பயிற்சியில் என்னை அர்ப்பணித்துக்கொள்ள எனக்கு உதவியருளும். என் வாழ்வில் மேற்கொள்ளும் இந்த ஒறுத்தல் செயல் உமது அரசுக்காக மிகுந்த கனிதருவதாக. இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்




