ஜூன் 25, 2023
பொதுக்காலம் பன்னிரண்டாம் ஞாயிறு (ஆண்டு A)
இன்றைய வாசகங்கள்

இயேசு பன்னிருவரிடம் கூறினார்: “எவருக்கும் அஞ்சாதீர்கள். வெளிப்படாமல் மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமல் இரகசியமாயிருப்பதும் ஒன்றுமில்லை.” மத்தேயு 10:26
வரவிருக்கும் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளப் பன்னிருவரையும் தயார்படுத்தும் சூழலில் நம் ஆண்டவர் இவ்வார்த்தைகளைக் கூறுகிறார். இப்பகுதிக்கு முன்பு இயேசு, “மனிதர்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். அவர்கள் உங்களை நீதிமன்றங்களில் ஒப்படைப்பார்கள்; தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்கள் முன்னும் அரசர்கள் முன்னும் நீங்கள் கொண்டுசெல்லப்படுவீர்கள்; அவர்களுக்கும் பிற இனத்தாருக்கும் சாட்சியாக இருப்பீர்கள்” என்று கூறினார். வரவிருக்கும் துன்புறுத்தல்களைப் பற்றி இன்னும் பலவற்றைக் கூறியபின், மேலுள்ள பகுதியில் இயேசு அவர்களுக்கு உறுதியான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கிறார்.
முதலில், ஏதாவது ஒருவகைத் துன்புறுத்தலை எதிர்கொள்ளும்போது பலர் அனுபவிக்கும் விளைவுகளில் ஒன்றான அச்சத்தை இயேசு நேரடியாக எடுத்துரைக்கிறார். “எவருக்கும் அஞ்சாதீர்கள்” என்று அவர் கூறுகிறார். கடவுள் தம்மைப் பராமரிக்கிறார் என்பதில் நம்பிக்கை இல்லாமல், பதற்றமும் கவலையும் தம்மை ஆட்கொள்ள ஒருவர் இடமளிக்கும்போது, அச்சம் அவரை முற்றிலும் ஆட்கொள்ளக்கூடும். கிறிஸ்துவின்மீது நம் பார்வையை உறுதியாக நிலைநிறுத்தி, வாழ்வில் நம்மீது வரும் தாக்குதல்களை நாம் எதிர்த்து அகற்ற முடிந்தால், கடவுளின் உண்மையில் நம்பிக்கையுடன் நிலைத்திருப்போம்; பொய்களால் பின்வாங்க மாட்டோம்.
அச்சம் ஒருவரை முற்றிலும் ஆட்கொள்ளக்கூடும் என்பதையும் இயேசு நன்கு அறிந்திருக்கிறார். குறிப்பாக, கடுமையான துன்புறுத்தலையோ சோதனையையோ நாம் தாங்க வேண்டியிருக்கும்போது இவ்வாறு நிகழ்கிறது. ஆகவே, பன்னிருவரும் நம்பிக்கையுடன் இருக்க உதவும் வகையில் அவர் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுகிறார். “வெளிப்படாமல் மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமல் இரகசியமாயிருப்பதும் ஒன்றுமில்லை.” இறுதித் தீர்ப்புக்காக இயேசு மீண்டும் மண்ணுலகிற்கு வரும் காலத்தின் முடிவை இது குறிக்கிறது. அப்போது, மக்கள் தாங்கிக்கொண்ட வஞ்சகமான தாக்குதல்கள் ஒவ்வொன்றும் அனைவரும் காணும்படி முழுமையாக வெளிச்சத்திற்கு வரும். மறைந்திருக்கும் நற்பண்புகள் உட்பட ஒவ்வொரு நற்பண்பும் வெளிச்சத்திற்கு வரும். இறுதியில், உண்மையே ஆட்சி செய்யும்; அனைவரும் கடவுளின் உண்மையின்படி தீர்ப்பிடப்படுவார்கள். வாழ்வில் அநீதியை அனுபவித்தவர்களுக்கு இது மிகுந்த ஆறுதலாக இருக்க வேண்டும்.
துன்புறுத்தல் பல வடிவங்களில் வருகிறது. உங்கள் விசுவாசத்தின் காரணமாக உங்களுக்கு எதிராக நிகழும் துன்புறுத்தலே மிக மோசமான வகைத் துன்புறுத்தல் என்பது உண்மை. ஆனால் பெரும்பாலும் துன்புறுத்தல் வேறு வடிவங்களிலேயே வருகிறது. மற்றொருவர்மீது கொள்ளும் பொறாமை, அவரைப் பற்றிப் புறங்கூறுவதற்கு வழிவகுக்கலாம். மற்றொருவருடைய பாவங்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்துவது, அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் பாவமும் ஒருவகைத் துன்புறுத்தலும் ஆகும். மறைமுகமாகப் பகைமை காட்டுவது, அவதூறு பேசுவது, தண்டிக்கும் நோக்கில் ஒருவரிடம் பேசாமல் இருப்பது போன்ற இன்னும் பலவும் துன்புறுத்தலின் வடிவங்களே. ஒருவர் மற்றொருவருக்கு ஏதாவது ஒருவகையில் தீங்கு விளைவிக்க முயலும் ஒவ்வொரு முறையும் அது துன்புறுத்தலாகும்.
மற்றொருவர் தங்களுக்கு ஏதாவது ஒருவகையில் தீங்கு செய்திருக்கும்போது, பதிலுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்ற மனப்போக்கு மக்களிடம் பொதுவாக எழுகிறது. அன்போடு உண்மையைப் பேசுவதன் மூலம் நம்மைத் தற்காத்துக்கொள்வதில் தவறொன்றுமில்லை. ஆனால் பல நேரங்களில், நாம் அனுபவித்த மனக்காயம் நம்மை ஆட்கொள்ளும் அச்சமாகவோ, நமக்குத் தீங்கு செய்தவருக்கு எதிரான தாக்குதலாகவோ மாறிவிடுகிறது. இந்தச் சோதனை எழும்போது, மேலுள்ள இயேசுவின் வார்த்தைகள் பெரிதும் உதவுகின்றன; விடுதலையும் அளிக்கின்றன. இறுதியில், எந்த அநீதியும் புறக்கணிக்கப்படாது. ஒவ்வொரு தவறும் கடவுளின் நீதியாலும் இரக்கத்தாலும் கையாளப்படும்; நிறைவான ஒழுங்கும் உண்மையும் என்றென்றைக்குமாக முழுமையாக மீண்டும் நிலைநாட்டப்படும்.
அச்சத்தோடு நீங்கள் நடத்தும் எந்தப் போராட்டத்தையும் குறித்து இன்று சிந்தியுங்கள். அவ்வாறு சிந்திக்கும்போது, இயேசுவின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் தியானியுங்கள்: “எவருக்கும் அஞ்சாதீர்கள்.” உங்களுக்கு இழைக்கப்படும் எந்த அநீதியும் உங்களை ஆட்டிப்படைக்க இடமளிக்காதீர்கள். மாறாக, உண்மையில் நம்பிக்கையுடன் நிலைத்திருங்கள். ஏதாவது ஓர் அநீதியை இங்கே இப்போதே சரிசெய்ய முடியாவிட்டால், கடவுளின் திருவுளத்திற்கும் நீதிக்கும் ஏற்ப அனைத்தும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்படும் காலத்தின் முடிவை நம்பிக்கையுடன் எதிர்நோக்குங்கள்.
துணிவுமிக்க என் ஆண்டவரே, நீர் ஏராளமான ஏளனங்களையும் கொடுமைகளையும் தாங்கிக்கொண்டீர்; ஆயினும், உமது இறை அன்புப் பணியிலிருந்து உம்மைப் பின்வாங்கச் செய்ய அவற்றை ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அச்சம் அனைத்திலிருந்தும் என்னை விடுவித்தருளும். வாழ்வின் அநீதிகளை நான் எதிர்கொள்ளும்போது, இறுதியில் ஒவ்வொரு தவறையும் நீர் சரிசெய்வீர் என்று நம்புவதற்கான துணிவை எனக்குத் தந்தருளும். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்
இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்




