தமிழ்

மிக உயர்ந்த பிறரன்புச் செயல்

ஜனவரி 12, 2024
பொதுக்காலத்தின் முதல் வாரம் வெள்ளிக்கிழமை
இன்றைய வாசகங்கள்

காணொளி

நான்கு பேர் சுமந்துவந்த முடக்குவாதமுற்ற ஒருவரை அவர்கள் இயேசுவிடம் கொண்டுவந்தனர். கூட்டத்தின் காரணமாக இயேசுவை நெருங்க முடியாததால், அவர் இருந்த இடத்திற்கு மேலே கூரையைத் திறந்தனர். அதில் துளையிட்ட பின், முடக்குவாதமுற்றவர் படுத்திருந்த பாயைக் கீழே இறக்கினர். மாற்கு 2:3–4

தங்கள் சொந்த முயற்சியால் நம் ஆண்டவரிடம் திரும்ப இயலாதவர்களாகத் தோன்றும், நம் வாழ்வில் உள்ள சிலருக்கு இந்த முடக்குவாதமுற்றவர் ஓர் அடையாளமாக இருக்கிறார். அவர் குணமடைய விரும்பினார் என்பது தெளிவாகிறது. ஆனால், தமது சொந்த முயற்சியால் அவரால் நம் ஆண்டவரிடம் வர இயலவில்லை. எனவே, அவருடைய நண்பர்கள் அவரை இயேசுவிடம் சுமந்துகொண்டு வந்து, கூரையைத் திறந்து (அவ்வளவு பெரிய கூட்டம் இருந்ததால்), அவரை இயேசுவின் முன் கீழே இறக்கினர்.

இந்த மனிதரின் முடக்குவாதம் ஒரு குறிப்பிட்ட வகையான பாவத்தின் அடையாளமாகும். இத்தகைய பாவத்திற்காக ஒருவர் மன்னிப்பை விரும்பினாலும், தமது சொந்த முயற்சியால் நம் ஆண்டவரை நோக்கித் திரும்ப இயலாதவராக இருக்கிறார். எடுத்துக்காட்டாக, தீவிரமான ஓர் அடிமைப்பழக்கம் ஒருவரின் வாழ்வை எந்த அளவுக்கு ஆட்கொள்ளக்கூடும் என்றால், அவரால் தமது சொந்த முயற்சியால் அந்த அடிமைப்பழக்கத்திலிருந்து மீள முடியாது. உதவி நாடி நம் ஆண்டவரை நோக்கித் திரும்புவதற்குக்கூட அவருக்குப் பிறரின் உதவி தேவைப்படுகிறது.

நாம் ஒவ்வொருவரும் நம்மை இந்த முடக்குவாதமுற்றவரின் நண்பர்களாகக் காண வேண்டும். பாவ வாழ்வில் சிக்கியிருக்கும் ஒருவரைக் காணும்போது, பல வேளைகளில் நாம் அவரைத் தீர்ப்பிட்டுவிட்டு விலகிச் செல்கிறோம். ஆனால், மற்றொருவர் தம் பாவத்தை வெல்வதற்குத் தேவையான வழிவகைகளைப் பெற உதவுவது, நாம் அவருக்குச் செய்யக்கூடிய மிக உயர்ந்த பிறரன்புச் செயல்களில் ஒன்றாகும். நமது அறிவுரை, தளராத பரிவு, அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்பது ஆகியவற்றின் மூலமும், தேவையிலும் நம்பிக்கையிழந்த நிலையிலும் அவர் இருக்கும்போது அவரை விட்டுவிடாமல் உறுதுணையாக இருக்கும் எந்தச் செயலின் மூலமும் இதைச் செய்யலாம்.

வெளிப்படையான பாவத்தின் சுழலில் சிக்கியிருப்பவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள்? அவர்களை ஏளனமாகப் பார்த்துவிட்டு விலகிச் செல்கிறீர்களா? அல்லது, தங்கள் பாவத்தை வெல்வதற்கான நம்பிக்கை வாழ்வில் மிகக் குறைவாகவோ முற்றிலும் இல்லாமலோ அவர்கள் இருக்கும்போது, அவர்களுக்கு நம்பிக்கையூட்டி உதவுவதற்காக அவர்களுக்குத் துணையாக இருக்க உறுதியாக முடிவு செய்கிறீர்களா? மற்றொருவர் நம் ஆண்டவரிடம் முழுமையாகத் திரும்ப உதவும் வகையில் அவருக்குத் துணையாக இருந்து, நம்பிக்கை என்னும் கொடையை அளிப்பது, நீங்கள் அவருக்கு வழங்கக்கூடிய மிக உயர்ந்த கொடைகளில் ஒன்றாகும்.

பாவத்தின் சுழலில் சிக்கியிருப்பதோடு மட்டுமல்லாமல், அந்தப் பாவத்தை வெல்லும் நம்பிக்கையையும் இழந்துவிட்டவராகத் தோன்றும், உங்களுக்குத் தெரிந்த ஒருவரைப் பற்றி இன்று சிந்தியுங்கள். செபத்தில் உங்களையே நம் ஆண்டவரிடம் ஒப்படையுங்கள். இறைவனாகிய நம் ஆண்டவரிடம் அவர் முழுமையாகத் திரும்ப உதவுவதற்காக, உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யும் பிறரன்புச் செயலுக்கு உங்களை அர்ப்பணியுங்கள்.

என் அருமை இயேசுவே, உம்மை மிகவும் தேவைப்படுகிறவர்களாக இருந்தும், உம்மிடமிருந்து தங்களைப் பிரித்து வைக்கும் பாவத்தைத் தங்கள் வாழ்வில் வெல்ல இயலாதவர்களாகத் தோன்றுகிறவர்கள்மீது பிறரன்பு கொள்ள என் இதயத்தை நிரப்பியருளும். அவர்களுக்குத் துணைநிற்பதில் நான் கொண்டுள்ள அசைக்க முடியாத உறுதிப்பாடு, அவர்கள் தங்கள் வாழ்வை உம்மிடம் ஒப்படைக்கத் தேவையான நம்பிக்கையை அளிக்கும் பிறரன்புச் செயலாக அமையட்டும். அன்பு ஆண்டவரே, என்னைப் பயன்படுத்தியருளும். என் வாழ்வு உமது கரங்களில் உள்ளது. இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

சிறப்புப் பரிந்துரை நூல்:

பொதுக்காலம்: வாரங்கள் 1–17
பொதுக்காலம் ஜனவரி 9 அன்று தொடங்கியது

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர் இயேசுவின் முன் கீழே இறக்கப்படுகிறார்; Wikimedia Commons வழியாக