தமிழ்

சிலுவையை விஞ்சும் மாட்சிமை

பிப்ரவரி 25, 2024
தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு (ஆண்டு B)
இன்றைய வாசகங்கள்

காணொளி

இயேசு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை மட்டும் தனியாக ஓர் உயர்ந்த மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கே அவர்கள் முன்னிலையில் அவர் தோற்றமாற்றம் பெற்றார். அவரது ஆடைகள் ஒளிவீசும் வெண்மையாயின. உலகில் எந்தச் சலவைத் தொழிலாளியும் அவ்வளவு வெண்மையாக்க முடியாது. மாற்கு 9:2–3

மாட்சிமை நிறைந்த இந்தத் தோற்றமாற்ற நிகழ்வுக்கு ஆறு நாள்களுக்கு முன்புதான், இயேசு தாம் சிலுவையில் அறையப்பட்டு இறக்கவிருப்பதைப் பற்றித் தம் சீடர்களிடம் முதன்முறையாகப் பேசினார். “மானிடமகன் பல துன்பங்கள் படவும், மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் புறக்கணிக்கப்படவும், கொல்லப்படவும், மூன்று நாள்களுக்குப் பின் உயிர்த்தெழவும் வேண்டும்” (மாற்கு 8:31) என்று அவர்களுக்குக் கற்பித்தார். இந்தப் போதனையை ஏற்றுக்கொள்வது பேதுருவுக்குக் கடினமாக இருந்ததை நினைவுகூருங்கள். இந்த இறைவாக்குப் போதனையை ஏற்க மறுத்ததற்காக இயேசு பேதுருவைக் கடிந்துகொண்டார். மேலும், “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைச் சுமந்துகொண்டு, என்னைப் பின்பற்ற வேண்டும்” (மாற்கு 8:34) என்று விளக்கினார். தோற்றமாற்றத்தைக் காண்பதற்கு முன், நம் ஆண்டவரின் இந்த முன்னறிவிப்பைப் பற்றிச் சிந்திக்க அந்தச் சீடர்களுக்கு ஆறு நாள்கள் இருந்தன.

உங்கள் வாழ்வில், கடவுள் உங்களுக்குச் சொல்ல விரும்புகின்ற ஏதாவது ஒன்றை ஏற்றுக்கொள்ள நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அப்படியானால், உங்கள் சிலுவையைச் சுமந்துகொண்டு தம்மைப் பின்பற்றுமாறு கடவுள் உங்களுக்கு விடுக்கும் அழைப்போடு அது பெரும்பாலும் தொடர்புடையதாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் கிறிஸ்துவின் சிலுவை பல வடிவங்களில் நம்மிடம் வருகிறது. நம்மைக் காயப்படுத்திய ஒருவருக்கு மாசற்ற இரக்கத்தைக் காட்டுவதற்காக, நம்முள் கொந்தளிக்கும் கோபம் தணிந்து மறைய அனுமதிக்கும்போது அதை நாம் அனுபவிக்கலாம். அல்லது, துணிவும் நம்பிக்கையும் தேவைப்படும் ஒரு முயற்சியை மேற்கொள்ள, விசுவாசத்தோடு முன்வருமாறு கடவுள் உங்களை அழைக்கலாம். அல்லது, அன்புக்குரிய ஒருவரின் இழப்பு, நோய், வேலை இழப்பு போன்ற ஏற்றுக்கொள்வதற்குக் கடினமான ஒரு துன்பத்தையோ, அன்போடும் நம்பிக்கையோடும் ஏற்றுக்கொள்ள நீங்கள் போராடும் வேறு ஏதேனும் சிரமத்தையோ ஏற்கும்படி கடவுள் உங்களை அழைக்கலாம். கசப்புணர்வு, மனக்கசப்பு, கோபம், அச்சம் போன்றவற்றை எதிர்கொண்டு, அவை நம்முள் மறைய அனுமதிப்பதே, நாம் ஏற்க அழைக்கப்படும் சிலுவைகளில் பெரும்பாலும் மிகவும் கடினமானவையாக இருக்கின்றன.

இது உங்கள் அனுபவத்தோடு ஒத்துப்போகிறதென்றால், தோற்றமாற்றத்தைப் பற்றிய இந்த நிகழ்வு உங்களுக்கானது. தாம் எதிர்கொள்ளவிருக்கும் சிலுவையைப் பற்றிய கடினமான செய்தியைச் சிந்திக்க இந்தச் சீடர்களுக்கு ஆறு நாள்கள் அளித்தபின், இந்தப் புனிதச் சந்திப்பின் வழியாக இயேசு அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கிறார். சிறிது நேரமே நீடித்திருந்தாலும், இயேசுவின் மாட்சிமை வெளிப்பட்ட இந்த நிகழ்வே, அவர் தமது பாடுகளைப் பற்றி முன்னறிவித்ததை இந்தச் சீடர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்குவதற்குப் போதுமானதாக இருந்தது. ஒருபுறம், நடக்கப்போவதாக இயேசு கூறியவற்றை எண்ணி அவர்கள் அஞ்சினர். மறுபுறமோ, அவரது மாட்சிமையையும் மகத்துவத்தையும் கண்டனர். இந்த இரண்டு அனுபவங்களும் இணைந்ததால், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் அனைத்தும் கடவுளின் ஆளுகைக்கு உட்பட்டே இருக்கின்றன என்று நம்புவதற்குப் புதிய நம்பிக்கையும் வலிமையும் இந்தச் சீடர்களுக்கு அளிக்கப்பட்டன.

நாம் எதிர்கொள்ளும் துன்பங்களைக் கடந்து செல்ல நமக்கும் நம் ஆண்டவரின் மாட்சிமையை வெளிப்படுத்தும் ஆறுதலான அனுபவம் தேவை. சிலருக்கு வாழ்க்கை நன்றாக, மிக நன்றாக இருக்கிறது; அவர்கள் நம் ஆண்டவரோடு மகிழ்ச்சியாகவும் சிரமமின்றியும் நடக்கிறார்கள். வேறு சிலருக்கோ வாழ்க்கை கடினமான திருப்பத்தை அடைந்து, குழப்பம் சூழ்ந்திருக்கிறது. இப்போது உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறதென்றால், தோற்றமாற்றத்தின் மாட்சிமையை நீங்கள் இப்போது சிறிதளவு சுவைத்துப் பார்க்கிறீர்கள் என்பதற்காக மகிழுங்கள். கடவுளுக்கு நன்றி செலுத்தி, புனித பேதுருவோடு சேர்ந்து, “ரபி, நாம் இங்கே இருப்பது நல்லது!” என்று அவரிடம் சொல்லுங்கள். நீங்கள் இப்போது அனுபவிக்கும் மகிழ்ச்சிக்காகவும் ஆறுதலுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்துங்கள். ஆனால், இப்போது உங்கள் வாழ்க்கை கடினமாக இருக்கிறதென்றால், ஆண்டவரின் பாடுகளைப் பற்றிய முன்னறிவிப்பை ஏற்றுக்கொள்ளச் சீடர்கள் போராடிய அந்த ஆறு நாள்களைச் சிந்தித்துப் பாருங்கள். அவர்களுடைய குழப்பம், ஐயங்கள், அச்சம் ஆகியவற்றைப் பற்றி எண்ணிப் பாருங்கள். அவ்வாறு செய்யும்போது, மலைமேல் உங்கள் பார்வையைத் திருப்புங்கள். கடவுளின் மாட்சிமை உங்களுக்காகக் காத்திருக்கிறது என்பதையும், எல்லா அச்சத்திலிருந்தும் கவலையிலிருந்தும் உங்களை விடுவிக்க அவர் விரும்புகிறார் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். இறைவேண்டலில் வேரூன்றிய உறுதியான விசுவாசத்தால்தான் அந்த மலையில் ஏற முடியும். இறைவேண்டலின் வழியாக நம் ஆண்டவரோடு அந்தப் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

நீங்கள் ஏறிச் செல்ல அழைக்கப்பட்டுள்ள இந்தப் புனித மலையைப் பற்றி இன்று சிந்தியுங்கள். விடாமுயற்சியோடும் மனவுறுதியோடும் அதில் ஏறிச் செல்லும்போது, உங்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கப்படும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். கொடிய மரணத்தை ஏற்றது மட்டுமின்றி, என்றென்றும் மாட்சிமையில் ஒளிர்பவருமான கடவுளை நம்பும் ஆற்றலுக்காக வேண்டுங்கள். அவரை நம்புங்கள், அவரிடம் திரும்புங்கள், உங்களுக்கு முன் இருக்கும் பயணத்தில் உறுதியுடன் ஈடுபடுங்கள்.

தோற்றமாற்றம் அடைந்த என் ஆண்டவரே, இந்தச் சீடர்கள் உமது சிலுவையை ஏற்றுக்கொள்ள உதவுவதற்காக உமது மாட்சிமையை அவர்களுக்கு வெளிப்படுத்தினீர். நானும் என் வாழ்வில் உமது சிலுவையைத் தழுவிக்கொள்ளவும், அதைத் தழுவிக்கொள்வதால் விளையும் மாட்சிமையைத் தெளிவாகக் காணவும் எனக்கு உதவும். அன்பு ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்; உம்மை இன்னும் அதிகமாக நம்ப எனக்கு உதவும். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.

தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறுக்கான தியானம்:
பாலைநிலத்தில் 40 நாள்கள்

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

தவக்காலத்திற்கான வளங்கள்

தவக்காலத்திற்கான திருவிவிலியத் தியானங்கள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள படங்கள்:  ஆண்டவரின் தோற்றமாற்றம், Flickr வழியாக