மே 22, 2024
பொதுக்காலம் ஏழாம் வாரம் புதன்கிழமை
இன்றைய வாசகங்கள்
காசியா நகர் புனித ரீத்தா—விருப்ப நினைவு

யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்களை ஓட்டுவதைக் கண்டோம். அவர் நம்மைப் பின்பற்றாததால் அவரைத் தடுக்க முயன்றோம்” என்றார். அதற்கு இயேசு, “அவரைத் தடுக்க வேண்டாம்…” என்று பதிலளித்தார். மாற்கு 9:38–39
பேய்களை ஓட்டிக்கொண்டிருந்த ஒருவரை யோவானும் மற்ற சீடர்களும் ஏன் தடுக்க முயன்றார்கள்? இதைப் புரிந்துகொள்ள, அந்தக் காட்சியை மனக்கண்முன் கொண்டு வாருங்கள். இயேசுவே கிறிஸ்து, கடவுளின் மெசியா என்று யோவானும் மற்ற சீடர்களும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அவர் பல புதுமைகளைச் செய்ததையும், பலருடைய வாழ்வை மாற்றியதையும் அவர்கள் கண்டிருந்தார்கள். எனவே, இயேசு யார் என்பதை எல்லோரும் அறிந்து, அவர்மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், தங்களுக்குத் தெரியாத ஒருவர் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டுவதை அவர்கள் கண்டபோது, அவரைத் தடுக்க முயன்றார்கள்.
இந்தப் பகுதிக்குச் சற்று முன்னதாக, பேய் பிடித்த தன் மகனை இயேசுவின் சீடர்களிடம் அழைத்து வந்து, அவனைக் குணமாக்கும்படி கேட்ட ஒருவரைப் பற்றி வாசிக்கிறோம். ஆனால் சீடர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை. பேயை ஓட்ட முடியாததால் சீடர்கள் சற்றுத் தாழ்வாக உணர்ந்திருக்கலாம். அதன் பின்னர், தங்கள் குழுவைச் சேராத வேறொருவர் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்ட முடிவதை அவர்கள் கண்டார்கள். இது அவர்களுடைய பலவீன உணர்வையும் அவமான உணர்வையும் மேலும் அதிகரித்திருக்கலாம். இயேசுவின் பெயரால் அதிகாரத்தைப் பயன்படுத்திய அந்த மனிதரைத் தடுக்க அவர்கள் முயன்றதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
திருஅவையின் உறுப்பினர்களுக்குத் தீயவன் தரும் பொதுவான சோதனைகளில் ஒன்று, அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவதாகும். கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகிய நம் அனைவரிடமும், வெவ்வேறு வழிகளில் ஒரே பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆன்மாக்களின் மீட்புக்காகவும் கடவுளின் மாட்சிக்காகவும் அவரது அருளின் கருவிகளாக மாற நாம் அழைக்கப்படுகிறோம். ஆனால் சில நேரங்களில் நாம் ஒன்றிணைந்து செயல்படத் தவறி, நம்முடன் பணியாற்றுபவர்களையே நம் எதிரிகளாகப் பார்க்கிறோம்.
இன்று நமது திருஅவைக்குள் முடிவுக்கு வர வேண்டிய உட்பிளவுகள் பல உள்ளன. ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதில் கவனம் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிப்பதே இதைச் செய்வதற்கான சிறந்த வழியாக இருக்கலாம். கடவுளின் அருளால் “வல்ல செயல்களைச்” செய்பவர்கள்மீது பொறாமையை உருவாக்க நமது செருக்கை அனுமதிப்பதற்குப் பதிலாக, நாம் காணும் ஒவ்வொரு நன்மையிலும் மகிழ முயல வேண்டும். இது வெளிப்படையான உண்மையாகத் தோன்றலாம். ஆனால், செருக்கும் தகுதியின்மை உணர்வுகளும் உண்மையான சோதனைகள்; அவை கடவுளின் திருவுளத்தை வல்லமையுடன் நிறைவேற்றுபவர்களை நாம் இழிவாகப் பார்க்க வழிவகுக்கின்றன. ஒருவர் நல்லது செய்வதைக் காணும்போது, அந்த நற்செயலைச் செய்பவர்கள் நாமாக இருக்கக் கூடாதா என விரும்பி, உடனே நம்மைப் பற்றியே நினைக்கத் தொடங்குகிறோம். மேலும், கடவுள் மற்றொருவரை வல்லமையுடன் பயன்படுத்தும்போது, அவர் வழியாக நிகழ்ந்த நற்செயல்களுக்காகக் கடவுளை மகிமைப்படுத்துவதற்குப் பதிலாக, நமது சொந்தக் குறைபாடுகளையும் தோல்விகளையும் பற்றியே நினைக்கும் சோதனைக்கு நாம் எளிதில் ஆளாகலாம்.
ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரே ஆன்மிக அணியைச் சேர்ந்தவர் என்ற எளிய உண்மையை இன்று சிந்தித்துப் பாருங்கள். கடவுளின் மாட்சியையும் ஆன்மாக்களின் மீட்பையும் இலக்குகளாகக் கொண்டு உழைக்க நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். உங்கள் வாழ்வில் இதைச் சிறப்பாகச் செய்பவர்களைப் பணிவுடன் நினைத்துப் பார்க்க முயலுங்கள்; அவர்கள்மீது உங்களுக்குள்ள மனப்பான்மையையும் ஆராயுங்கள். பொறாமையோ, பிறர் பெற்றிருப்பதைப் பார்த்து மனம் புழுங்குதலோ, குறைகூறுதலோ எந்த வடிவிலாவது உங்களிடம் இருப்பதைக் கண்டால், அந்த மனப்பான்மைகளை அகற்ற உறுதிகொள்ளுங்கள். மாறாக, கடவுள் தமது நோக்கத்திற்காகப் பிறரைப் பயன்படுத்தும் பல்வேறு வழிகளைக் கண்டு மகிழ்ந்து, நன்றியுணர்வுடன் இருக்க நாடுங்கள்.
ஆற்றலும் வல்லமையும் நிறைந்த ஆண்டவரே, உமது மக்களின் தாராள மனத்தாலும் பிரமாணிக்கத்தாலும் எண்ணற்ற நன்மைகளை நீர் நிறைவேற்றுகிறீர். உம்மைப் பின்பற்றும் அனைவரையும் உமது திருவுளத்தை நிறைவேற்றத் தொடர்ந்து பயன்படுத்துகிறீர். அன்பு ஆண்டவரே, உமது திருவுளத்தின் கருவியாக என்னையும் பயன்படுத்தியருளும். பிறர் வழியாக நீர் உமது அருளை வெளிப்படுத்தும் வழிகளைக் கண்டு எப்போதும் மகிழ எனக்கு உதவியருளும். இயேசுவே, நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன்.
அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்
இன்றைய புனிதர் – காசியா நகர்ப் புனித ரீத்தா
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்





