2019 செப்டம்பர் 8, ஞாயிற்றுக்கிழமை
பொதுக்காலம் இருபத்து மூன்றாம் ஞாயிறு, ஆண்டு C
தூய கன்னி மரியாவின் பிறப்பு – விழா

“உங்களுள் ஒருவர் ஒரு கோபுரம் கட்ட விரும்பினால், அதை முடிப்பதற்குப் போதுமான பொருள் தம்மிடம் உள்ளதா என்று பார்க்க, முதலில் அமர்ந்து செலவைக் கணக்கிட்டுப் பார்க்க மாட்டாரா?” லூக்கா 14:28
ஆண்டவர் உங்களிடம் விரும்பும் அனைத்திற்கும் நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மேலே உள்ள இந்தச் சுருக்கமான வினாவின் வழியாக, நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை இயேசு உணர்த்துகிறார். நீங்கள் ஒரு கோபுரம் கட்டுவதாக இருந்தால், அதை முடிப்பதற்குத் தேவையான வளங்கள் உங்களிடம் உள்ளனவா என்பதை உறுதிசெய்துகொண்டு, முன்கூட்டியே திட்டமிடும் அளவுக்கு விவேகமுள்ளவர்களாக இருப்பீர்கள் என நம்பலாம். ஆன்மிக வாழ்விலும் அவ்வாறே. கிறிஸ்துவைப் பின்பற்றும் தேர்வைச் செய்வதற்குத் தேவையான அனைத்து வளங்களும் நம்மிடம் உள்ளனவா என்பதை உறுதிசெய்வது இன்றியமையாதது.
இது, “கிறிஸ்துவைப் பின்பற்ற எனக்கு என்னென்ன வளங்கள் தேவை?” என்ற கேள்வியை எழுப்புகிறது. பதில் எளிமையானது. இந்த நற்செய்திப் பகுதியின் இறுதியில் இயேசு, “அவ்வாறே, உங்களுள் தம் உடைமைகளையெல்லாம் துறக்காத எவரும் என் சீடராக இருக்க முடியாது” என்கிறார் (லூக்கா 14:33). வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நம் வாழ்வில் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற நமக்குத் தேவையான அனைத்தையும் பெற விரும்பினால், நாம் கடவுளிடம் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும்.
கிறிஸ்துவின் சீடராக இருப்பது அரைமனதோடு செய்யக்கூடிய ஒன்றல்ல; பலர் அவ்வாறு செய்ய முயன்றாலும் அது இயலாது. அவரைப் பின்பற்ற நாம் தேர்ந்துகொள்ளும்போது, அதை முழுமனதோடு செய்ய வேண்டும். சொல்லப்போனால், நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில், நம் ஆண்டவர் நம்மிடம் கேட்கும் அனைத்தையும் நம்மால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. நம்மிடமிருந்து அனைத்தையும் விரும்புகிறார் என்ற பொருளில், அவர் அதிகம் எதிர்பார்க்கும் கடவுள். ஆனால் நம் ஆண்டவரின் இந்தக் கோரிக்கை முற்றிலும் நமது நன்மைக்காகவே உள்ளது. வாழ்வில் மகிழ்ச்சியும் நிறைவும் வேண்டுமென்றால், நாம் அவருக்கு அனைத்தையும் கொடுக்க வேண்டும்.
உங்கள் வாழ்வின் ஒவ்வொரு சிறு பகுதியையும் கிறிஸ்துவுக்குக் கொடுக்க நீங்கள் எந்த அளவுக்குத் தயாராகவும் விருப்பமுள்ளவர்களாகவும் இருக்கிறீர்கள் என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள். என்ன நேர்ந்தாலும் அவரிடம் “ஆம்” என்று சொல்ல நீங்கள் விரும்புகிறீர்களா? அவர் கேட்டால், எதையும் உங்களுக்கென வைத்துக்கொள்ளாமல், “உங்கள் உடைமைகளையெல்லாம் துறக்க” நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களிடம் பல உடைமைகள் இருக்கலாம். அவை அனைத்தையும் உண்மையில், நடைமுறையில் விட்டுவிடுமாறு நம் ஆண்டவர் உங்களை அழைக்காமல் இருக்கலாம். எனினும், உங்களிடம் உள்ள அனைத்தையும், உங்கள் முழு ஆளுமையையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் அவரது மகிமைமிக்க திருவுளத்தை நிறைவேற்ற உங்களுக்குத் தேவையானதை அவரால் உங்களுக்கு வழங்க முடியும்.
ஆண்டவரே, என் வாழ்வு உமக்கே உரியது. என் வாழ்வில் உள்ள அனைத்தையும் எதையும் விலக்காமல் உம்மிடம் ஒப்படைக்கும் அருளை எனக்குத் தந்தருளும். என் வாழ்வையும், என் நிதிவளங்களையும், என் உடைமைகளையும், என் குடும்பத்தையும், என் உழைப்பையும், என் எதிர்காலம் முழுவதையும் உம்மிடம் ஒப்படைக்கிறேன். அன்பு ஆண்டவரே, அனைத்தும் உமக்கே உரியவை. உமது விருப்பப்படி என்னை நடத்தும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
இன்றைய புனிதர் – தூய கன்னி மரியாவின் பிறப்பு




