தமிழ்

கிறிஸ்துவின் இறைவாக்குப் பணி

ஜனவரி 9, 2020
திருக்காட்சி விழாவுக்குப் பின்வரும் வியாழன்
இன்றைய வாசகங்கள்

இயேசு அவர்களிடம், “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று” என்றார்.  அனைவரும் அவரைப் புகழ்ந்து பேசினர்; அவரது வாயிலிருந்து வந்த அருள்மிகு சொற்களைக் கேட்டு வியப்படைந்தனர்.  லூக்கா 4:21-22a

இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அப்போதுதான் வந்து சேர்ந்திருந்தார். மறைநூலை வாசிப்பதற்காகக் கோவில் பகுதிக்குள் சென்றார்.  அவர் எசாயா நூலிலிருந்து இந்தப் பகுதியை வாசித்தார்: “ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது; ஏனெனில், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்க அவர் என்னை அருள்பொழிவு செய்துள்ளார்.  சிறைப்பட்டோருக்கு விடுதலையையும் பார்வையற்றோருக்குப் பார்வை பெறுதலையும் அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்யவும், ஆண்டவருக்கு உகந்த ஆண்டை அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.”  இதை வாசித்தபின் அவர் அமர்ந்து, எசாயாவின் இந்த இறைவாக்கு நிறைவேறிவிட்டது என்று அறிவித்தார்.

அவரது ஊர் மக்கள் வெளிப்படுத்திய எதிர்வினை கவனிக்கத்தக்கது.  “அனைவரும் அவரைப் புகழ்ந்து பேசினர்; அவரது வாயிலிருந்து வந்த அருள்மிகு சொற்களைக் கேட்டு வியப்படைந்தனர்.”  குறைந்தபட்சம், தொடக்கத்தில் அவர்களது எதிர்வினை இப்படித்தான் இருந்தது.  ஆனால் தொடர்ந்து வாசித்தால், இயேசு அந்த மக்களுக்குச் சவால் விடுப்பதையும், அதன் விளைவாக அவர்கள் கடுங்கோபம் கொண்டு, அங்கேயே அப்போதே அவரைக் கொல்ல முயன்றதையும் காண்கிறோம்.

பல நேரங்களில் நாமும் இயேசுவிடம் இதேபோலத்தான் நடந்துகொள்கிறோம்.  தொடக்கத்தில் நாம் அவரைப் புகழ்ந்து பேசி, அன்புடன் அவரை ஏற்றுக்கொள்ளலாம்.  எடுத்துக்காட்டாக, கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவின்போது நாம் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடி, அவரது பிறந்தநாளை மகிழ்ச்சியுடனும் கொண்டாட்டங்களுடனும் சிறப்பிக்கலாம்.  ஆலயத்திற்குச் சென்று, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவிக்கலாம்.  குடில் அமைத்து, நம் நம்பிக்கையை வெளிப்படுத்தும் கிறிஸ்தவ அடையாளங்களால் அலங்கரிக்கலாம்.  ஆனால் இவை அனைத்திலும் எவ்வளவு ஆழம் உள்ளது?  சில வேளைகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களும் மரபுகளும் மேலோட்டமானவையாக மட்டுமே உள்ளன; கிறிஸ்தவப் பற்றுறுதியிலோ நம்பிக்கையிலோ உண்மையான ஆழம் எதையும் அவை வெளிப்படுத்துவதில்லை.  இந்த அருமையான குழந்தை கிறிஸ்து சத்தியத்தை உரைத்து, நம் மனச்சான்றைத் தட்டியெழுப்பும் வார்த்தைகளைப் பேசும்போது என்ன நிகழ்கிறது?  மனந்திரும்பி வாழ்வை மாற்றிக்கொள்ள நற்செய்தி நம்மை அழைக்கும்போது என்ன நிகழ்கிறது?  இத்தகைய தருணங்களில் கிறிஸ்துவுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம்?

கிறிஸ்துமஸ் காலத்தின் இறுதி வாரத்தில் நாம் தொடர்ந்து பயணிக்கும் இவ்வேளையில், கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவில் நாம் போற்றும் அந்தச் சிறு குழந்தை வளர்ந்து, இப்போது நம்மிடம் சத்திய வார்த்தைகளைப் பேசுகிறார் என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள்.  அவரை ஒரு குழந்தையாக மட்டுமல்லாமல், சத்தியம் அனைத்தையும் அறிவிக்கும் இறைவாக்கினராகவும் போற்ற நீங்கள் மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா என்று சிந்தியுங்கள்.  அவரது செய்தி முழுவதையும் கேட்டு, அவரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?  அவரது சத்திய வார்த்தைகள் உங்கள் இதயத்திற்குள் ஊடுருவி, உங்கள் வாழ்வை மாற்றியமைக்க அனுமதிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?

ஆண்டவரே, நான் உம்மை அன்பு செய்கிறேன். நீர் பேசிய அனைத்தும் என் இதயத்திற்குள் ஊடுருவி, சத்தியத்தின் முழுமைக்குள் என்னை ஈர்த்துச் செல்ல வேண்டுமென விரும்புகிறேன்.  பெத்லகேமில் பிறந்த ஒரு சிறு குழந்தையாக மட்டுமல்லாமல், சத்தியத்தை அறிவிக்கும் மாபெரும் இறைவாக்கினராகவும் உம்மை ஏற்றுக்கொள்ள எனக்கு உதவியருளும்.  நீர் பேசும் வார்த்தைகளால் நான் ஒருபோதும் மனத்தாங்கல் அடையாதிருப்பேனாக; என் வாழ்வில் உமது இறைவாக்குப் பணிக்கு நான் எப்போதும் திறந்த உள்ளத்துடன் இருப்பேனாக.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்