தமிழ்

ஆண்டவர் கற்பித்த செபம்

ஜூன் 18, 2020
பொதுக்காலம் பதினொன்றாம் வாரத்தின் வியாழன்
இன்றைய வாசகங்கள்

“நீங்கள் இவ்வாறு செபியுங்கள்: விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே…”  மத்தேயு 6:9

பின்வரும் பகுதி, என் கத்தோலிக்க வழிபாடு! என்னும் நூலின் பதினொன்றாம் அத்தியாயத்தில் ஆண்டவர் கற்பித்த செபத்தைப் பற்றி இடம்பெறும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது:

ஆண்டவர் கற்பித்த செபம் உண்மையிலேயே நற்செய்தி முழுவதன் சுருக்கமாகும்.  எவ்வாறு செபிக்க வேண்டும் என்பதை நமக்குக் கற்பிப்பதற்காக இயேசுவே இதை நமக்கு அளித்ததால், இது “ஆண்டவர் கற்பித்த செபம்” என அழைக்கப்படுகிறது.  இந்தச் செபத்தில் கடவுளிடம் எழுப்பப்படும் ஏழு மன்றாட்டுகளைக் காண்கிறோம்.  இந்த ஏழு மன்றாட்டுகளுக்குள் மனிதரின் ஒவ்வோர் ஏக்கத்தையும், மறைநூலில் காணப்படும் நம்பிக்கையின் ஒவ்வொரு வெளிப்பாட்டையும் நாம் காணலாம்.  வாழ்வையும் செபத்தையும் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இந்த அற்புதமான செபத்தில் அடங்கியுள்ளன.

அனைத்துச் செபங்களுக்கும் முன்மாதிரியாக இயேசுவே இந்தச் செபத்தை நமக்கு அளித்தார்.  ஆண்டவர் கற்பித்த செபத்தின் சொற்களை நாம் வாய்மொழிச் செபமாகத் தொடர்ந்து சொல்வது நல்லது.  பல்வேறு அருளடையாளக் கொண்டாட்டங்களிலும் திருவழிபாட்டிலும் இவ்வாறு செய்யப்படுகிறது.  எனினும், இந்தச் செபத்தைச் சொல்வது மட்டும் போதாது.  இந்தச் செபத்தின் ஒவ்வோர் அம்சத்தையும் உள்ளத்தில் ஆழமாகப் பதியச் செய்வதே நம் இலக்கு. அப்போதுதான், கடவுளிடம் நாம் தனிப்பட்ட முறையில் எழுப்பும் மன்றாட்டுக்கு இது முன்மாதிரியாகவும், நம் வாழ்வு முழுவதையும் அவரிடம் ஒப்படைக்கும் செயலாகவும் அமையும்.

செபத்தின் அடித்தளம்

ஆண்டவர் கற்பித்த செபம் ஒரு மன்றாட்டுடன் தொடங்குவதில்லை; மாறாக, தந்தையின் பிள்ளைகள் என்ற நமது அடையாளத்தை நாம் ஏற்றுக்கொள்வதுடன் தொடங்குகிறது.  ஆண்டவர் கற்பித்த செபத்தைச் சரியான முறையில் செபிப்பதற்கு இது ஒரு முக்கிய அடித்தளமாகும்.  நமது அனைத்துச் செபங்களிலும் கிறிஸ்தவ வாழ்வு முழுவதிலும் நாம் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை அணுகுமுறையையும் இது வெளிப்படுத்துகிறது.  ஏழு மன்றாட்டுகளுக்கு முன்னால் வரும் தொடக்கச் சொற்கள் இவையே: “விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே.”  ஆண்டவர் கற்பித்த செபத்தின் இந்தத் தொடக்கச் சொற்களில் என்ன அடங்கியுள்ளது என்பதைப் பார்ப்போம்.

பிள்ளைகளுக்குரிய துணிவு: திருப்பலியில் அருள்பணியாளர், “மீட்பரின் கட்டளையின்படியும், இறைப்போதனையால் பயிற்றுவிக்கப்பட்டும், நாம் துணிந்து சொல்வோம்…” என்று கூறி, ஆண்டவர் கற்பித்த செபத்தைச் செபிக்க மக்களை அழைக்கிறார்.  நம்மிடமுள்ள இந்தத் “துணிவு”, கடவுள் நம் தந்தை என்ற அடிப்படைப் புரிதலிலிருந்து வருகிறது.  ஒவ்வொரு கிறிஸ்தவரும் தந்தையைத் தமது சொந்தத் தந்தையாகக் காண வேண்டும்.  நாம் நம்மைக் கடவுளின் பிள்ளைகளாகக் கண்டு, ஒரு பிள்ளைக்குரிய நம்பிக்கையுடன் அவரை அணுக வேண்டும்.  அன்பான பெற்றோரைக் கொண்ட ஒரு பிள்ளை அவர்களைக் கண்டு அஞ்சுவதில்லை.  மாறாக, என்ன நடந்தாலும் தங்கள் பெற்றோர் தங்களை அன்புசெய்கிறார்கள் என்பதில் பிள்ளைகளுக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.  பாவம் செய்யும்போதுகூட, தாங்கள் தொடர்ந்து அன்புசெய்யப்படுவதைப் பிள்ளைகள் அறிவார்கள்.  நமது அனைத்துச் செபங்களுக்கும் இதுவே அடிப்படைத் தொடக்கமாக இருக்க வேண்டும்.  என்ன நடந்தாலும் கடவுள் நம்மை அன்புசெய்கிறார் என்ற புரிதலுடன் நாம் தொடங்க வேண்டும்.  கடவுளைப் பற்றிய இந்தப் புரிதல் இருந்தால், அவரை அழைப்பதற்குத் தேவையான முழு நம்பிக்கையும் நமக்கு இருக்கும்.

அப்பா: கடவுளைத் “தந்தை” என்று அல்லது இன்னும் குறிப்பாக “அப்பா” என்று அழைப்பது, மிகுந்த தனிப்பட்ட நெருக்கத்துடன் நாம் அவரை நோக்கிக் குரல் எழுப்புவதைக் குறிக்கிறது.  “அப்பா” என்பது தந்தையை அழைக்கும் பாசமிகு சொல்.  கடவுள் எல்லாம் வல்லவர், அனைத்து ஆற்றலும் கொண்டவர் என்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை என்பதை இது காட்டுகிறது.  கடவுள் அதற்கும் மேலானவர்.  கடவுள் என் அன்புத் தந்தை; நான் தந்தையின் அன்பு மகன் அல்லது மகள்.

“எங்கள்” தந்தை: கடவுளை “எங்கள்” தந்தை என்று அழைப்பது, கிறிஸ்து இயேசுவின் இரத்தத்தால் நிலைநாட்டப்பட்ட புதிய உடன்படிக்கையின் விளைவாக உருவான முற்றிலும் புதிய உறவை வெளிப்படுத்துகிறது.  இந்தப் புதிய உறவில், இப்போது நாம் கடவுளின் மக்களாக இருக்கிறோம்; அவர் நம் கடவுளாக இருக்கிறார்.  இது ஒருவர் மற்றவருக்குத் தம்மையே அளிக்கும் பரிமாற்றம்; எனவே, ஆழ்ந்த தனிப்பட்ட உறவாகும்.  இந்தப் புதிய உறவு, கடவுளிடமிருந்து வரும் கொடையே அன்றி வேறல்ல; இதைப் பெற நமக்கு உரிமை ஏதும் இல்லை.  கடவுளை நம் தந்தை என்று அழைப்பதற்கு நமக்கு உரிமை ஏதும் இல்லை.  அது ஓர் அருளும் கொடையும் ஆகும். 

இந்த அருள், இறைமகனாகிய இயேசுவுடன் நமக்குள்ள ஆழ்ந்த ஒன்றிப்பையும் வெளிப்படுத்துகிறது.  நாம் இயேசுவுடன் ஒன்றித்திருக்கும் அளவில்தான் கடவுளைத் “தந்தை” என்று அழைக்க முடியும்.  இயேசுவின் மனித இயல்பு நம்மை அவருடன் ஒன்றிக்கிறது; இப்போது நாம் அவருடன் ஆழ்ந்த பிணைப்பைப் பகிர்ந்துகொள்கிறோம்.

கடவுளை “எங்கள்” தந்தை என்று அழைப்பது, நமக்கிடையே உள்ள ஒன்றிப்பையும் வெளிப்படுத்துகிறது.  இத்தகைய நெருக்கத்துடன் கடவுளைத் தங்கள் தந்தை என்று அழைக்கும் அனைவரும் கிறிஸ்துவில் சகோதர சகோதரிகள்.  எனவே, நாம் ஒருவரோடு ஒருவர் ஆழமாக இணைந்திருப்பது மட்டுமல்லாமல், ஒன்றிணைந்து கடவுளை வழிபடவும் ஆற்றல் பெறுகிறோம்.  இங்கு, தனிமனிதவாதத்தை விட்டுவிட்டு, சகோதர ஒன்றிப்பை ஏற்றுக்கொள்கிறோம்.  இந்த ஒரே இறைக்குடும்பத்தின் உறுப்பினர்களாக நாம் இருப்பது கடவுளின் மாட்சிமிக்க கொடையாகும்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதுபோல மண்ணுலகிலும் நிறைவேறுக. எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்களை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்; தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

திருஇதய நவநாள் செபம்
நவநாள் செபத் தேதிகள்:ஜூன் 10-18, 2020
ஜூன் 19, 2020: திருஇதயப் பெருவிழா

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

படம்: ஜேம்ஸ் திசோ வரைந்த ஆண்டவர் கற்பித்த செபம்


 

என் கத்தோலிக்க வழிபாடு!
செபம் மற்றும் அருளடையாளங்கள் பற்றிய சுருக்கம்

மென் அட்டை நூல் & மின்னூல் வடிவங்களில்: