தமிழ்

தாழ்ச்சியின் மேன்மை

டிசம்பர் 6, 2020
திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு (ஆண்டு B)
இன்றைய வாசகங்கள்

அவர் இவ்வாறு பறைசாற்றினார்: “என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப் பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடிகளின் வார்களை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை.” மாற்கு 1:7

இவ்வுலகில் வாழ்ந்த மனிதர்களுள் மிகச் சிறந்தவர்களில் ஒருவராகத் திருமுழுக்கு யோவானை இயேசு கருதினார் (காண்க: மத்தேயு 11:11). இருப்பினும், மேலுள்ள பகுதியில், இயேசுவின் மிதியடிகளின் “வார்களைக் குனிந்து அவிழ்க்கக்கூட” தமக்குத் தகுதியில்லை என்று யோவான் தெளிவாகக் கூறுகிறார். இதுவே தாழ்ச்சியின் உச்சம்!

புனித திருமுழுக்கு யோவானை இவ்வளவு சிறந்தவராக்கியது எது? அவரது வல்லமையுள்ள போதனையா? அவரது துடிப்பும் கவர்ச்சியும் நிறைந்த ஆளுமையா? அவரது பேச்சுத் திறமையா? அவரது அழகிய தோற்றமா? அவரைப் பின்பற்றிய திரளான மக்களா? நிச்சயமாக இவற்றில் எதுவுமே இல்லை. அனைவருக்கும் இயேசுவைச் சுட்டிக்காட்டிய அவரது தாழ்ச்சியே யோவானை உண்மையில் சிறந்தவராக்கியது.

வாழ்வில் மனிதர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய போராட்டங்களில் ஒன்று செருக்குடன் போராடுவது. பிறருடைய கவனத்தை நம்மீது ஈர்க்க விரும்புகிறோம். தாங்கள் எவ்வளவு நல்லவர்கள் என்றும், தாங்கள் சொல்வது ஏன் சரியானது என்றும் பிறரிடம் சொல்லிக்கொள்ளும் மனப்போக்குடன் பெரும்பாலானோர் போராடுகின்றனர். கவனமும் அங்கீகாரமும் பாராட்டும் நமக்கு வேண்டும். நம்மையே உயர்த்திக்கொள்வது, நாம் முக்கியமானவர்கள் என்ற உணர்வை நமக்குத் தருவதால், இந்த மனப்போக்குடன் நாம் அடிக்கடி போராடுகிறோம். அத்தகைய “உணர்வு” ஓரளவுக்கு நமக்கு மகிழ்ச்சியையும் தருகிறது. ஆனால், தாழ்ச்சி என்பது நம்மிடம் இருக்கக்கூடிய மிகச் சிறந்த பண்புகளில் ஒன்று என்பதையும், வாழ்வில் மேன்மைக்கு வேறெதையும்விட மிகச் சிறந்த ஊற்று அதுவே என்பதையும் பாவத்தால் வீழ்ச்சியுற்ற நமது மனித இயல்பு பெரும்பாலும் உணரத் தவறுகிறது.

மேலுள்ள பகுதியில் திருமுழுக்கு யோவானின் இந்தச் சொற்களிலும் செயல்களிலும் தாழ்ச்சி தெளிவாக வெளிப்படுகிறது. இயேசு யார் என்பதை அவர் அறிந்திருந்தார். இயேசுவைச் சுட்டிக்காட்டி, தம்மைப் பின்பற்றியவர்களின் பார்வையைத் தம்மிடமிருந்து தம் ஆண்டவரிடம் திருப்பினார். இவ்வாறு பிறரைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தும் செயலே இருவகையில் பலனளிக்கிறது: அது பிறரைக் கிறிஸ்துவிடம் கொண்டு செல்வதோடு, தன்னலத்தை மையமாகக் கொண்ட செருக்கினால் ஒருபோதும் அடைய முடியாத மேன்மைக்கு யோவானையும் உயர்த்துகிறது.

உலகின் மீட்பரைப் பிறருக்குச் சுட்டிக்காட்டுவதைவிட மேன்மையான செயல் எதுவாக இருக்க முடியும்? கிறிஸ்து இயேசுவைத் தங்கள் ஆண்டவராகவும் மீட்பராகவும் அறிந்துகொள்வதன் வழியாக, தங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறியப் பிறருக்கு உதவுவதைவிட மேன்மையானது எதுவாக இருக்க முடியும்? இரக்கம் நிறைந்த ஒரே கடவுளிடம் தன்னலமின்றித் தங்களையே ஒப்படைத்து வாழுமாறு பிறரை ஊக்குவிப்பதைவிட மேன்மையானது எதுவாக இருக்க முடியும்? பாவத்தால் வீழ்ச்சியுற்ற நமது மனித இயல்பின் தன்னலமான பொய்களைவிட உண்மையை மேலாக உயர்த்திப் பிடிப்பதைவிட மேன்மையானது எதுவாக இருக்க முடியும்?

திருமுழுக்கு யோவானின் தாழ்ச்சியைப் பின்பற்றி வாழ உங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பைக் குறித்து இன்று சிந்தியுங்கள். உங்கள் வாழ்வு உண்மையான மதிப்பும் பொருளும் கொண்டிருக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், உங்களைச் சுற்றியிருப்போரின் பார்வையில் உலகின் மீட்பரை இயன்ற அளவுக்கு உயர்த்திக் காட்ட உங்கள் வாழ்வைப் பயன்படுத்துங்கள். பிறருக்கு இயேசுவைச் சுட்டிக்காட்டுங்கள்; உங்கள் வாழ்வின் மையமாக இயேசுவை ஆக்கிக்கொள்ளுங்கள்; அவர்முன் உங்களையே தாழ்த்திக்கொள்ளுங்கள். தாழ்ச்சியுடன் நீங்கள் செய்யும் இச்செயலில், உங்கள் உண்மையான மேன்மை வெளிப்படும்; வாழ்வின் மைய நோக்கத்தையும் நீங்கள் கண்டடைவீர்கள்.

மாட்சிமை நிறைந்த என் ஆண்டவரே, நீர், நீர் ஒருவரே உலகின் மீட்பர். நீர், நீர் ஒருவரே கடவுள். பலரும் உம்மைத் தங்கள் உண்மையான ஆண்டவராகவும் கடவுளாகவும் அறிந்துகொள்ளும்படி, பிறருக்கு உம்மைச் சுட்டிக்காட்டுவதற்கு என் வாழ்வை அர்ப்பணிக்க எனக்குத் தாழ்ச்சியின் ஞானத்தைத் தாரும். என் ஆண்டவரே, உமக்கு நான் தகுதியற்றவன். இருப்பினும், உமது இரக்கத்தால் நீர் என்னைப் பயன்படுத்துகிறீர். உமக்கு நன்றி கூறுகிறேன்; உமது திருப்பெயரைப் பறைசாற்ற என் வாழ்வை அர்ப்பணிக்கிறேன். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

அமல உற்பவ நவநாள் செபம்
நவம்பர் 29-டிசம்பர் 7

எங்கள் திருவருகைக் கால வளங்களைப் பாருங்கள்!

விவிலியத் தியானங்கள்

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர் – புனித நிக்கோலாஸ், ஆயர்
இவ்வாண்டு ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், திருவழிபாட்டு நினைவுநாளாகக் கொண்டாடப்படுவதில்லை

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: பாலைநிலத்தில் புனித திருமுழுக்கு யோவான் — வரைந்தவர்: டிஷியன்


திருவருகைக் காலம் மற்றும் கிறிஸ்து பிறப்புக் காலச் சிந்தனைகள்

மென் அட்டைப் புத்தகம் & மின்னூல்

Amazon.com – Google Play – iTunes – Barnes and Noble