ஜூன் 1, 2021
பொதுக்காலத்தின் ஒன்பதாம் வாரம் செவ்வாய்க்கிழமை
இன்றைய வாசகங்கள்
புனித யுஸ்தின், மறைசாட்சி—நினைவு

“சீசருக்குத் தலைவரி செலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்த வேண்டுமா, வேண்டாமா?” அவர்களுடைய வெளிவேடத்தை அறிந்த இயேசு அவர்களிடம், “ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? நான் பார்ப்பதற்கு ஒரு தெனாரிய நாணயத்தைக் கொண்டுவாருங்கள்” என்றார். மாற்கு 12:14–15
இயேசுவை அவரது பேச்சிலேயே சிக்கவைக்க இந்தப் பரிசேயரும் ஏரோதியரும் அனுப்பப்பட்டனர். இவர்கள் அரசியல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர்; ஏதாவது ஒரு தரப்பைச் சார்ந்துகொண்டு மற்றவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதில் விருப்பம் கொண்டிருந்தனர். தங்களையே நீதிமான்களாகக் கருதிய இவர்கள், ஆன்மாக்களின் மீட்பைப் பற்றிச் சிறிதளவே அக்கறை கொண்டிருந்தனர். எனவே, கபடமற்றதாகத் தோன்றிய ஒரு கேள்வியுடன் இயேசுவிடம் வந்தனர். சீசருக்குத் தலைவரி செலுத்துவதை இயேசு எதிர்ப்பார் என்று அவர்கள் முன்னரே கருதியதாகத் தெரிகிறது. அவர் அவ்வாறு கூறினால், அவரைப் பற்றி அரசு அதிகாரிகளிடம் புகார் செய்ய அவர்கள் தயாராக இருந்தனர். உண்மையைப் பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை; நம் இறைவனாகிய ஆண்டவரைச் சிக்கவைப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். சீசரின் உருவம் பொறிக்கப்பட்ட உரோமை நாணயத்தை அவர்கள் இயேசுவிடம் கொண்டுவந்தபோது, ஆழ்ந்த ஞானம் நிறைந்த இந்த வார்த்தைகளை அவர் கூறினார்: “சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும், கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் திருப்பிக் கொடுங்கள்.”
வெளிவேடக்காரர்களான இந்தச் சமயத் தலைவர்கள் பணிவுடனும் நேர்மையுடனும் இயேசுவிடம் வந்திருந்தால், அவர் அவர்களுக்கு முற்றிலும் வேறுவிதமாகப் பதிலளித்திருப்பார் என்பது தெளிவு. ஆனால், நம் ஆண்டவரைச் சிக்கவைக்கவும், அவரது சொற்களைத் திரித்துக் கூறவும், அவரை அழிக்கவுமே அவர்கள் வந்ததால், இயேசு இறைஞானம் வெளிப்படும் ஒரு செயலால் அவர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கிறார். தலைவரி செலுத்துவதற்கு அவர் ஆதரவும் தெரிவிக்கவில்லை; அதற்கு எதிராகவும் பேசவில்லை. எனவே, இந்த நற்செய்திப் பகுதி, “அவர்கள் அவரைக் குறித்து மிகவும் வியப்படைந்தார்கள்” என்ற வரியுடன் முடிகிறது. “வியப்படைதல்” என்பதே சரியான மறுமொழி. ஆகவே, ஒரு வகையில், வெளிவேடக்காரர்களான இந்தச் சமயத் தலைவர்களிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ளலாம். கடவுளின் ஆழ்ந்த ஞானத்தை நாம் நேருக்கு நேர் சந்திக்கும்போதெல்லாம், பிரமிப்பையும் புனிதமான வியப்பையும் அனுபவிக்க வேண்டும்.
இயேசு தங்களுடைய தீய சூழ்ச்சியை முறியடித்ததாலேயே அவர்கள் வியப்படைந்தனர் என்பது உண்மைதான். அப்படியிருந்தாலும், கடவுளின் ஞானத்தை ஒருபோதும் எதனாலும் விஞ்ச முடியாது என்பதை இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். கடவுளின் ஞானம் இக்காலத்தின் மடமையை மௌனமாக்கி, அந்தத் தீமையின் பின்னால் மறைந்திருக்கும் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
நம் காலத்தில் உலகியல் சிந்தனையுடன், “தமக்கு எல்லாம் தெரியும்” எனக் கருதுவோரின் தந்திரங்களை நீங்கள் எப்போதாவது எதிர்கொண்டிருக்கிறீர்களா? யாராவது உங்களுக்குச் சவால் விடுத்திருக்கிறார்களா, உங்கள் நம்பிக்கையை நேரடியாகத் தாக்கியிருக்கிறார்களா, அல்லது உங்கள் அறநெறிச் சார்ந்த உறுதியான நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்களா? உங்கள் இறைநம்பிக்கையை வெளிப்படையாகவும் உறுதியுடனும் வாழ நீங்கள் தேர்ந்தெடுத்திருந்தால், பெரும்பாலும் பிறருடைய தாக்குதலை நீங்கள் உணர்ந்திருக்கலாம். ஆழ்ந்த இறைநம்பிக்கையும் இறைஞானம் என்னும் தெளிவான கொடையும் இல்லாதவர்களுக்கு இத்தகைய தந்திரங்கள் குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தக்கூடும். எவ்வாறு பதிலளிப்பது என்று தெரியாமல், இக்காலத்தின் தவறான “ஞானத்தில்” சிக்கிக்கொண்டதாக நீங்கள் உணரலாம். அப்படிப்பட்ட நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உலகியல் சிந்தனையும் கடவுள் மறுப்பும் அதிகரித்துவரும் இவ்வுலகில் நாம் அனைவரும் எதிர்கொள்ளப்போகும் பொய்யான போதனைகளுக்கும் வஞ்சகங்களுக்கும் ஒரே பதில், இறைஞானத்திலிருந்து வரும் பதில்தான். நம்முடைய சொந்த ஆற்றலால் இந்தத் தவறுகளை எதிர்த்துப் போராடும் அளவுக்கு நம்மில் எவருக்கும் ஞானம் இல்லை. எனவே, கடவுளின் ஞானத்தைத் தொடர்ந்து நாடுவதே நமக்குள்ள ஒரே வழி.
செபத்தின் வழியாகவும் புனிதமானவற்றைக் கற்றறிவதன் வழியாகவும் நாம் கடவுளின் ஞானத்தை நாடுகிறோம். தூய உண்மையைப் பேசும் கடவுளின் தெளிவான குரலுக்கு நம் மனங்களைச் செபம் திறக்கிறது. புனிதமானவற்றை, குறிப்பாகத் திருவிவிலியம், திருஅவையின் போதனைகள், புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் ஆகியவற்றைக் கற்றறிவது, கடவுளின் குரலைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவும், உலகம் நம்மீது திணிக்க முயலும் குழப்பத்தை அகற்றவும் உதவும். இறுதியில், கடவுளின் உண்மையான ஞானத்தில் நம் மனங்களை ஆழ்த்தாவிட்டால், உலகில் நாம் எதிர்கொள்பவற்றைச் சந்திக்க நாம் ஆயத்தமாக இருக்க மாட்டோம்.
உலகின் தந்திரங்களையும் மடமையையும் கடந்து செல்ல, இறைஞானத்தால் நீங்கள் நிரப்பப்பட வேண்டியதன் அவசியத்தை இன்று சிந்தித்துப் பாருங்கள். வாழ்க்கையின் குழப்பத்தை ஊடறிந்து தெளிவு பெறுவதற்குத் தேவையான ஞானம் உங்களிடம் தானாகவே இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஞானம் என்னும் கொடைக்காகச் செபித்து, நம் ஆண்டவர் அதை உங்களுக்கு அருள அனுமதியுங்கள்.
அனைத்து உண்மைக்கும் ஆண்டவரே, உமது ஞானம் உலக ஞானம் அனைத்தையும் கடந்தது; தீயவனின் தந்திரங்களை நீர் முறியடிக்கிறீர். அன்பு ஆண்டவரே, வாழ்க்கையின் சவால்களைக் கடந்து செல்லும் ஆற்றலை நான் பெறும்படி, உமது புனித உண்மைக்கு என் மனத்தைத் திறந்தருளும். அன்பு ஆண்டவரே, நீர் என்னை எங்கு வழிநடத்தினாலும் நான் உம்மைப் பின்தொடரும்படி, உமது ஞானத்தை எனக்கு அருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
திருஇருதய நவநாள் செபம்
நவநாள் செப நாட்கள்: ஜூன் 2-10, 2021
ஜூன் 11, 2021: திருஇருதயப் பெருவிழா
அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்
இன்றைய புனிதர் – புனித யுஸ்தின், மறைசாட்சி
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்
மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: வரிப்பணம் — வரைந்தவர்: லியோபோல்ட் லேயர், Wikimedia Commons வழியாக




