திங்கள், மே 31, 2021
தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்த திருவிழா

மரியா புறப்பட்டு, மலைநாட்டிலுள்ள யூதாவின் ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அங்கே அவர் செக்கரியாவின் வீட்டிற்குள் சென்று எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபோது, அவருடைய வயிற்றிலிருந்த குழந்தை துள்ளியது. எலிசபெத்து தூய ஆவியால் நிறப்பப்பட்டு, உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் மிகவும் பேறுபெற்றவர்; உமது திருவயிற்றின் கனியும் பேறுபெற்றதே” என்றார். லூக்கா 1:39–42
இன்று நாம் கொண்டாடும் அழகிய திருவிழா, அற்புதமான முறையில் நிகழ்ந்த இரு கருவுறுதல்களை நம் கண்முன் வைக்கிறது. ஒன்று தூய ஆவி நிழலிட்டதால் நிகழ்ந்தது. மற்றொன்று வயது முதிர்ந்த ஒரு பெண்ணின் வயிற்றில் நிகழ்ந்த அற்புதமான கருவுறுதல். மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள மறைநூல் பகுதி, மரியா வந்துசேர்ந்ததும் அவரும் எலிசபெத்தும் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்ட முதல் சந்திப்பை நமக்கு எடுத்துரைக்கிறது. எலிசபெத்தின் கர்ப்பகாலத்தின் இறுதிச் சில மாதங்களில், தம் உறவுச் சகோதரியுடன் இருப்பதற்காக மரியா நீண்ட தொலைவு பயணம் செய்திருந்தார். அவர் எலிசபெத்தை வாழ்த்தியபோது, மற்றோர் அற்புத நிகழ்வும் நடந்தது. எலிசபெத்தின் வயிற்றிலிருந்த குழந்தையான புனித திருமுழுக்கு யோவான், “மகிழ்ச்சியால் துள்ளினார்.” இவ்வாறு, தாம் பிறப்பதற்கு முன்பே, ஆண்டவருக்காக வழியை ஆயத்தம் செய்யும் தமது தனித்துவமான பணியை யோவான் நிறைவேற்றத் தொடங்கினார். மரியாவின் திருவயிற்றில் மீட்பர் தெய்வீகமாக உடனிருப்பதைத் தம் தாயான எலிசபெத்து உணரும்படி தூண்டியதன் வழியாக, அந்தத் தருணத்தில் அவர் இப்பணியைச் செய்தார்.
இந்த இரு புனிதப் பெண்களும் ஒன்றாக இருந்த மாதங்களில் பகிர்ந்துகொண்டிருக்கும் உரையாடல்களைச் சிறப்பாகச் சிந்தித்துப் பாருங்கள். அவர்களுடைய முதல் உரையாடலைப் பற்றிய ஒரு சிறிய பார்வையை மட்டுமே மறைநூல் நமக்குத் தந்தாலும், அவர்கள் இறைவேண்டல் நிறைந்த மனநிலையில் விரிவாகப் பேசியிருப்பவற்றின் ஒரு சிறிய பகுதியே அது என்பதை நாம் உறுதியாகக் கொள்ளலாம். குறிப்பாக, அவர்களுடைய உரையாடல்களில் மகிழ்ச்சி என்னும் ஆன்மிகக் கொடையை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்வது இடம்பெற்றிருக்கும்.
மகிழ்ச்சி என்பது வெறும் உணர்ச்சியை விட மேலானது. அது இயல்பிலேயே ஆன்மிகமானது. அது ஏதோ ஒரு குதூகலமான அனுபவம் மட்டுமல்ல; உங்கள் வாழ்வில் கடவுள் செயல்படுவதை உணர்ந்துகொள்ளும் அனுபவமாகும். கடவுள் வியத்தகு வழிகளில் செயல்படுவதைக் காண்பது நன்றியுணர்வுக்கும் அகமகிழ்வுக்கும் வழிவகுக்கிறது. இந்த மகிழ்ச்சி, பிறரிடமும் பரவி அவர்களை ஊக்குவிக்கும் வலிமையையும் ஆற்றலையும் உருவாக்குகிறது.
நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் கடவுளின் கரம் செயல்படுவதைக் காண நாம் அனைவரும் முயல வேண்டும். அப்போது அவரது தெய்வீகச் செயல்களில் நாம் கவனம் செலுத்துவது நம்மிலும் மகிழ்ச்சியை விளைவிக்கும். நமக்கு மகிழ்ச்சி தேவை. அவரது திருவுளத்தை நிறைவேற்ற நாம் நாள்தோறும் முயலும்போது, ஊக்கமும் வலிமையும் பெறுவதற்காக இந்தக் கொடையால் நாம் வலுவூட்டப்பட வேண்டும்.
இந்த இரு புனிதப் பெண்களும் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியின் சாட்சியத்தை இன்று சிந்தித்துப் பாருங்கள். கடவுள் உங்களை ஆசீர்வதித்துள்ள வழிகளின்மீது தாழ்மையுடன் உங்கள் கவனத்தைத் திருப்பும்போது, அதே மகிழ்ச்சியில் பங்குபெற நீங்களும் அழைக்கப்படுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி குறைவாக இருப்பதை நீங்கள் உணர்ந்தால், நாள் முழுவதும் உங்கள் மனதை எங்கெல்லாம் அலைபாய விடுகிறீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். கடந்த காலம், மனக்காயங்கள், பிரச்சினைகள் போன்றவற்றிலேயே உங்கள் சிந்தனை நிலைத்திருக்கிறதா? அப்படியானால், இந்தச் சிந்தனைகள் நிச்சயமாக மனச்சோர்வுக்கும், ஒருவேளை நம்பிக்கையிழப்பிற்கும்கூட வழிவகுக்கும். உங்கள் வாழ்வில் கடவுள் செயல்படுவதின்மீது உங்கள் மனதைத் திருப்ப முயலுங்கள். உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள எண்ணற்ற ஆசிகளைப் பாருங்கள்; அந்தத் தெய்வீகச் செயல்களை மனதில் அசைபோட்டு மகிழுங்கள். இவ்வாறு செய்வது, புனித எலிசபெத்துடனும் நம் அன்னையான தூய கன்னி மரியாவுடனும் சேர்ந்து மகிழ உங்களை வழிநடத்தும்.
என் புனிதக் குழந்தை இயேசுவே, உமது அன்புத் தாயின் திருவயிற்றில் நீர் குடிகொண்டிருந்தபோது, உமது உடனிருப்பு அவரது இதயத்திலும் எலிசபெத்து, யோவான் ஆகியோரின் இதயங்களிலும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீர் தொடர்ந்து என்னிடம் வருவதால் உண்டாகும் மகிழ்ச்சியால் நானும் நிறைந்திருக்கும்படி, எங்கள் உலகிலும் என் வாழ்விலும் உமது உடனிருப்பைக் கண்டுகொள்ள எனக்கு உதவியருளும். இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.
அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்
மேலும் வாசிக்க – தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல்
நம் புனித அன்னையை நோக்கிய செபங்கள்
திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்




