தமிழ்

அனைத்தையும் இழப்பதும் அதைவிட மிகுதியாகப் பெறுவதும்

ஆகஸ்ட் 10, 2021

திருத்தொண்டரும் மறைசாட்சியுமான புனித லாரன்ஸ் திருவிழா

இன்றைய வாசகங்கள்

காணொளி

தம் உயிரை நேசிப்பவர் அதை இழந்துவிடுவார்; இவ்வுலகில் தம் உயிரை வெறுப்பவர் அதை நிலைவாழ்வுக்காகக் காத்துக்கொள்வார். யோவான் 12:25

இயேசுவின் ஆற்றல்மிக்க, ஏன், அதிர்ச்சியூட்டும் பல கூற்றுகளில் இதுவும் ஒன்று. இதைப் போன்ற இயேசுவின் கூற்று நான்கு நற்செய்திகளிலும் காணப்படுகிறது. யோவான் நற்செய்தியில் இடம்பெறும் இக்கூற்றில், “நேசித்தல்”, “வெறுத்தல்” என்னும் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. நம் உயிரை நேசிப்பதால் அதை இழக்கிறோம்; நம் உயிரை வெறுப்பதால் அதைக் காத்துக்கொள்கிறோம். முதன்முதலில் இதை வாசிக்கும்போது, “நேசித்தல்”, “வெறுத்தல்” என்னும் சொற்கள் தவறுதலாக இடம்மாறிவிட்டன என்று ஒருவர் நினைக்கலாம். “தம் உயிரை வெறுப்பவர் அதை இழந்துவிடுவார்”, “தம் உயிரை நேசிப்பவர் அதைக் காத்துக்கொள்வார்” என்பதே இயேசு சொல்ல நினைத்தது என்று ஒருவர் முடிவுசெய்யலாம். ஆனால் அவர் அவ்வாறு சொல்லவில்லை. உண்மையில் அவர் அதற்கு நேர்மாறாகவே சொன்னார்.

இங்கு “நேசித்தல்”, “வெறுத்தல்” என்னும் சொற்கள் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் பொருளில் பயன்படுத்தப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இப்பகுதியில், இயேசு “நேசித்தல்” என்னும் சொல்லைச் சுயநலத்தையோ தன்னையே மையமாகக் கொண்டு வாழ்வதையோ குறிக்கப் பயன்படுத்துகிறார். “வெறுத்தல்” என்னும் சொல்லைத் தன்னலமின்மையையோ தியாகத்தோடு தன்னையே கையளிப்பதையோ குறிக்கப் பயன்படுத்துகிறார். வேறு வார்த்தைகளில் சொன்னால், வாழ்வில் சுயநலத்தோடு இருப்பவர் இறுதியில் அனைத்தையும் இழப்பார்; ஆனால் உண்மையாகவே தன்னலமின்றித் தம்மையே கையளித்து வாழ்பவர் இறுதியில் அனைத்தையும் பெறுவார்.

நம் ஆண்டவரின் இந்த ஆழமான போதனையை அருள் என்னும் கொடையின்றிப் புரிந்துகொள்வது கடினம். தன்னலமின்றி வாழ்வது நல்லது என்னும் கருத்தை ஏற்றுக்கொள்ள நம் மனிதப் பகுத்தறிவு மட்டும் போதாமல் திணறலாம். எல்லாருக்கும் முன்பாக நம்மையே உயர்த்திக்கொள்வதே மிகவும் சிறந்தது என்று பகுத்தறிவின் அடிப்படையில் முடிவுசெய்வது எளிது. செல்வம், அந்தஸ்து, அதிகாரம், அனைவரின் மதிப்பு ஆகியவற்றைப் பெறுவதில்தான் மகிழ்ச்சியும் “நல்ல வாழ்வும்” அடங்கியுள்ளன என்று பகுத்தறிவு முடிவுசெய்யலாம். ஆனால், முற்றிலும் மனித நோக்கில் கவர்ச்சியாகத் தோன்றினாலும், சுயநலத்தோடு தன்னையே மையமாகக் கொண்டு இவ்வாறு வாழ்வது, உண்மையிலேயே நல்லவை அனைத்தையும் இழப்பதற்கான பாதையாகும். மாறாக, கடவுளின் அருள் நம் மனிதப் பகுத்தறிவுக்கு ஒளியூட்ட நாம் அனுமதிக்கும்போதுதான், சுயநலத்தோடு இருப்பதைவிடத் தன்னலமின்றி இருப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வருவோம். தன்னலமின்றி இருப்பது என்பது, நம் பார்வை எப்போதும் பிறருடைய நலனை நோக்கியே இருப்பதாகும். நம்மைப் பற்றியே எண்ணிக்கொண்டு இருப்பதில்லை என்பதே அதன் பொருள். நமக்கு எத்தகைய இழப்பு ஏற்பட்டாலும், கடவுளுக்கும் அயலாருக்கும் பணிசெய்வதில் நம்மை முழுமையாக அர்ப்பணிக்கிறோம் என்பதே அதன் பொருள். கடவுளை அன்புசெய்து அவருக்குப் பணியாற்றுவதில் நாம் அனைத்தையும் கொடுத்துவிட வேண்டும்; அவ்வாறு செய்வதன் வழியாக மட்டுமே, நாம் எதிர்பார்க்கக்கூடியதைவிட மிகுதியாகக் கடவுள் நமக்குத் திருப்பித் தருகிறார்.

இன்று நாம் போற்றும் புனித லாரன்ஸ், மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தொண்டரும் மறைச்சாட்சியுமாவார். கடவுளுக்கு “ஆம்” என்று சொல்வதற்காக, இந்த மாபெரும் புனிதர் தம் உயிர் உட்பட அனைத்தையும் உண்மையாகவே கைவிட்டார். உரோமையிலுள்ள பேராலயத்தில் திருத்தொண்டராக இருந்த அவரிடம், தேவையில் வாடிய ஏழை மக்களுக்குத் தருமம் வழங்கும் பணி ஒப்படைக்கப்பட்டிருந்தது. 258ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், திருப்பணியாளர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்று பேரரசர் ஓர் ஆணை பிறப்பித்தார். திருத்தந்தை கொல்லப்பட்ட பிறகு, அவர்கள் லாரன்ஸைத் தேடி வந்தனர்; அவரைக் கொல்வதற்கு முன், திருஅவையின் செல்வங்கள் அனைத்தையும் ஒப்படைக்குமாறு கேட்டனர். அந்தச் செல்வங்களைச் சேகரிக்க அவர் மூன்று நாட்கள் அவகாசம் கேட்டார். அந்த மூன்று நாட்களிலும் தம்மால் இயன்ற அனைத்தையும் ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார். பின்னர், மூன்றாம் நாளன்று அவர் ஆளுநர்முன் வந்து நின்றார். அப்போது அவர் தம்முடன் கொண்டுவந்தது திருஅவையின் பொருட்செல்வத்தை அல்ல, அதன் உண்மையான செல்வத்தையே. ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் துன்புறுவோரையும் அழைத்துவந்து, திருஅவை உண்மையிலேயே செல்வம் மிக்கது என்றும், தம்முடன் இருப்பவர்களே திருஅவையின் உண்மையான செல்வங்கள் என்றும் அறிவித்தார். ஆத்திரமடைந்த ஆளுநர், லாரன்ஸை நெருப்பில் எரித்துக் கொல்லத் தீர்ப்பளித்தார். லாரன்ஸ் அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.

எல்லா வகையிலும் முற்றிலும் தன்னலமின்றித் தம்மையே கையளித்து வாழுமாறு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உயர்ந்த கிறிஸ்தவ அழைப்பைப் பற்றி இன்று சிந்தியுங்கள். பெரும்பாலும் உங்களைப் பற்றியே எண்ணிக்கொண்டிருப்பதை நீங்கள் உணர்ந்தால், அந்தப் பழக்கத்தை மாற்ற முயலுங்கள். உங்கள் பார்வையைக் கடவுளை நோக்கியும் பிறருக்குப் பணிசெய்வதை நோக்கியும் திருப்புங்கள். உங்கள் சொந்தக் கவலைகளைவிட, உங்களைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளில் அதிக அக்கறை காட்ட முயலுங்கள். இதைத்தான் இயேசு நம்மைச் செய்ய அழைக்கிறார் என்பதால் இவ்வாறு செய்யுங்கள். இத்தகைய தன்னலமற்ற வாழ்வுக்கு அவர் நம்மை அழைக்கிறார் என்றால், இறுதியில் அது பயனுள்ளது என்பதை நாம் அறிந்து நம்ப வேண்டும்.

தம்மையே பலியாக அளித்த என் ஆண்டவரே, அன்பினால் உமது விலைமதிப்பற்ற உயிரை அனைவருக்காகவும் கையளித்தீர். உமது வாழ்வை முழுமையாகக் கையளித்ததன் வழியாக, இந்த மாட்சிமிக்க கொடையை ஏற்றுக்கொள்வோருக்கு மீட்பு கிடைத்தது. நீர் இலவசமாக வழங்கிய இந்தக் கொடையை ஏற்க என் உள்ளத்தைத் திறப்பதோடு மட்டுமல்லாமல், உமக்கும் பிறருக்கும் பணிசெய்வதில் என்னையே கையளிப்பதன் வழியாக உமது தன்னலமற்ற வாழ்வைப் பின்பற்றவும் எனக்கு உதவியருளும். திருத்தொண்டரும் மறைச்சாட்சியுமான புனித லாரன்ஸே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர் –  திருத்தொண்டரும் மறைச்சாட்சியுமான புனித லாரன்ஸ்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: புனித லாரன்ஸின் மறைச்சாட்சியம் — வரைந்தவர் ழான் பாப்டிஸ்ட் து ஷாம்பேன், விக்கிமீடியா காமன்ஸ் வழியாக