தமிழ்

மண்ணுலகச் செல்வங்களின் பொறுப்பாளர்கள்

நவம்பர் 5, 2021
பொதுக்காலத்தின் முப்பத்தொன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை
இன்றைய வாசகங்கள்

காணொளி

இயேசு தம் சீடர்களிடம் கூறினார்: “செல்வர் ஒருவருக்குச் சொத்துப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் சொத்துகளை வீணாக்குவதாகச் செல்வரிடம் புகார் கூறப்பட்டது. செல்வர் அவரை வரவழைத்து, ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உன் பொறுப்பிலிருந்த சொத்துகளின் முழுக் கணக்கையும் ஒப்படை; இனி நீ என் சொத்துப் பொறுப்பாளராக இருக்க முடியாது’ என்றார்.” லூக்கா 16:1–2

இந்த உவமையில் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியவை பல உள்ளன; கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும் பல உள்ளன. முதலில், செல்வரைக் கடவுளாகவும், சொத்துப் பொறுப்பாளரை உங்களாகவும் புரிந்துகொள்ள வேண்டும். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான முதல் பாடம் இதுவே. ஏனெனில், இவ்வுலகின் பொருள்களைப் பொறுத்தவரை, அனைத்திற்கும் உண்மையான உரிமையாளர் கடவுளே; நாம் பொறுப்பாளர்கள் மட்டுமே என்பதை இது நமக்கு வெளிப்படுத்துகிறது. இதைக் கவனமாகச் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்குச் சொந்தமான அனைத்தையும், உங்கள் பணத்தையும் உடைமைகளையும், அவற்றின் முழு உரிமையாளரே நீங்கள்தான் என்பதுபோல் பற்றிக்கொண்டிருக்கிறீர்களா? பெரும்பாலான மக்கள் இவ்வாறுதான் நினைக்கிறார்கள் என்பது தெளிவு. அவர்கள் வாழ்வாதாரத்திற்காகக் கடினமாக உழைக்கலாம்; சேமித்து, இதையும் அதையும் வாங்கலாம்; வங்கிக் கணக்குகளில் பணத்தைக் குவிக்கலாம். பின்னர், அந்தப் பொருள்கள் கடவுளுடையவை என்று கருதாமல், “என்னுடையவை” என்று கருதி, அவற்றின்மீது மிகுந்த பற்றுடன் இருக்கலாம். ஆகவே, நாம் கவனிக்க வேண்டிய, மிகுந்த சவால் விடுக்கும் முதல் பாடம் இதுதான்: நாம் “சொந்தம் கொண்டாடும்” அனைத்தும் உண்மையில் கடவுளுக்கே சொந்தமானவை. இவ்வுலகப் பொருள்களுக்கு நாம் பொறுப்பாளர்களாக இருக்க மட்டுமே அவர் அனுமதிக்கிறார். இதை நீங்கள் நம்புகிறீர்களா?

பொறுப்பாளர்களாகிய நாம், நமது பொறுப்பில் உள்ள செல்வங்களைக் கடவுள் விரும்பும் முறையில் மட்டுமே பயன்படுத்த உறுதிபூண்டிருக்க வேண்டும். இந்த உவமையில், சொத்துப் பொறுப்பாளர் “தம் தலைவரின் சொத்துகளை வீணாக்குவதாக” செல்வரிடம் புகார் கூறப்பட்டது. நாமும் கடவுளுடைய விருப்பத்திற்கும் விரும்புதல்களுக்கும் ஏற்பப் பணத்தைப் பயன்படுத்தாமல், நமது சொந்த விருப்பத்திற்கும் ஆசைகளுக்கும் ஏற்ப அதைப் பயன்படுத்தும்போது, கடவுளுடைய சொத்துகளை வீணாக்கும் குற்றத்திற்கு ஆளாகிறோம். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு மனப்போக்கு; குறிப்பாக, பெருமளவு பணத்திற்குப் பொறுப்பாளர்களாக இருப்பவர்களிடம் இது காணப்படுகிறது. எனவே, ஒருவரின் பொறுப்பில் எவ்வளவு அதிகமான பணம் இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அதை வீணாக்குவதற்கான சோதனையும் அவருக்கு ஏற்படும். அதாவது, கடவுளுடைய திருவுளத்திற்கு ஏற்ப அவரது மாட்சிக்காக அதைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சுயநல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் சோதனை ஏற்படும். இந்தப் போதனையை ஏற்றுக்கொண்டு அதன்படி வாழ்வது கடினம். ஆயினும், இந்த உண்மைகள் இந்த உவமையின் வழியாக நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. ஆகவே, நாம் செவிகொடுப்பது இன்றியமையாதது.

“உன் பொறுப்பிலிருந்த சொத்துகளின் முழுக் கணக்கையும் ஒப்படை” என்று செல்வர் கூறிய வார்த்தைகளை, ஒரு நாள் நாம் அனைவரும் கேட்க வேண்டியிருக்கும் என எதிர்பார்க்க வேண்டும். அந்த நாள் இன்றாக இருந்தால், அந்த “உன் பொறுப்பிலிருந்த சொத்துகளின் முழுக் கணக்கு” எப்படியிருக்கும்? சுயநல ஆதாயத்திற்காக நீங்கள் கடினமாக உழைத்திருக்கிறீர்களா? அல்லது கடவுள் உங்கள் பராமரிப்பில் ஒப்படைத்த பொருள்களைக் கையாள்வதில் மிகுந்த பொறுப்புடன் செயல்படக் கடினமாக உழைத்திருக்கிறீர்களா?

உவமை தொடர்ந்து செல்லும்போது, அந்தச் சொத்துப் பொறுப்பாளர் தம் பதவியை இழந்தபின் தமது பொருளாதாரத் தேவைகள் நிறைவேறுவதை உறுதிசெய்ய ஒரு திட்டம் தீட்டியதன் மூலம் “முன்மதியுடன்” செயல்பட்டார் என்று வாசிக்கிறோம். ஆனால், இங்கு குறிப்பிடப்படும் “முன்மதி” என்பது, இவ்வுலகில் தாங்கள் அடைய விரும்பும் பொருட்செல்வத்தைப் பொறுத்தவரை பலரிடம் காணப்படும் உலகியல் சார்ந்த, அதனால் தீமையான சாதுரியம், புத்திக்கூர்மை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது. வாழ்வில் கருத்துடனும் கடின உழைப்புடனும் செயல்படுவது நல்லது என்றாலும், மிகப் பல வேளைகளில் அது சுயநல ஆதாயத்திற்காகவே செய்யப்படுகிறது. செல்வந்தராவதற்காக இவ்வளவு கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும், அதைவிட அதிக முயற்சியை இம்மண்ணுலகில் இறையாட்சியைக் கட்டியெழுப்புவதற்குச் செலுத்தினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! கடவுளுடைய பணிக்காகக் கடினமாக உழைப்பவர்கள் இவ்வளவு பேர் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு வேறுபட்டதாக இருக்கும்!

இவ்வுலகச் செல்வங்களைப் பொறுத்தவரை, உங்கள் வசம் உள்ளவற்றிற்கு நீங்கள் பொறுப்பாளர் மட்டுமே, உரிமையாளர் அல்ல என்ற எளிய உண்மையை இன்று சிந்தித்துப் பாருங்கள். உங்களிடம் உள்ள அனைத்தையும் கடவுளுடைய மாட்சிக்காகவும் அவரது நோக்கத்திற்கு ஏற்பவும் தாராளமாகப் பயன்படுத்தும்படி, பொருட்செல்வத்தின்மீதுள்ள பற்றிலிருந்து நீங்கள் விடுபட்டிருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதற்காக உங்களிடம் உள்ள அனைத்தையும் அறப்பணி அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என்று பொருளல்ல. மாறாக, உங்களிடம் உள்ள அனைத்தையும் தொடர்ந்து கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, அவரது திருவுளத்திற்கு, அவரது திருவுளத்திற்கு மட்டுமே ஏற்ப அவற்றைப் பயன்படுத்த நாட வேண்டும் என்பதே அதன் பொருள். அவ்வாறு செய்யும்போது, நீங்கள் புதிதாக ஏதாவது வாங்க வேண்டும் என்று கடவுள் விரும்புவதாகப் பகுத்துணர்ந்தால், புதிதாக ஏதாவது வாங்குங்கள். இன்னும் அதிகமாகப் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்பதாக இருந்தால், இன்னும் அதிகமாகக் கொடுங்கள். ஒரு புனிதமான தியாகமாக இன்னும் எளிமையாக வாழ வேண்டும் என்பதாக இருந்தால், அவ்வாறே செய்யுங்கள். பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது. கடவுளுடைய திருவுளத்தை முழுமையாக ஏற்று வாழ்வது மட்டுமே, நீங்கள் ஆழ்ந்து ஏங்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும்.

அனைத்துச் செல்வங்களுக்கும் ஆண்டவராகிய என் இறைவா, படைக்கப்பட்ட அனைத்திற்கும் நீர் ஒருவரே உரிமையாளர். அன்பு ஆண்டவரே, என்னிடம் உள்ளவையும் எனக்குச் சொந்தமானவையும் அனைத்தும் உம்முடையவையே. இதை நம்பவும், என்னிடம் உள்ள சொத்துகளின் பொறுப்பாளராக மட்டுமே என் வாழ்வை வாழவும் எனக்கு உதவியருளும். என் பராமரிப்பில் நீர் ஒப்படைத்தவற்றை வீணாக்குவதிலிருந்து என்னை விடுவித்தருளும். அனைத்தையும் உமது மாட்சிக்காகவும் உமது திருவுளத்திற்கு ஏற்ப மட்டுமே பயன்படுத்துவேனாக. இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள சிறப்புப் படம்: ஆந்திரே நிக்கொலாயெவிச் மிரோனோவ் வரைந்த ‘நம்பிக்கைக்கு உரியவராக இல்லாத ஆட்சியாளரின் உவமை’, விக்கிமீடியா காமன்ஸ் வழியாக