தமிழ்

மனதை உலுக்கும் ஒரு பாவம்

செப்டம்பர் 5, 2022
பொதுக்காலத்தின் இருபத்து மூன்றாம் வாரம் திங்கள்
இன்றைய வாசகங்கள்

கல்கத்தா புனித அன்னை தெரசா—நினைவு

காணொளி

“உமது கையை நீட்டும்.” அவர் அவ்வாறே செய்தார்; அவரது கை நலமடைந்தது. ஆனால் அவர்கள் கடுஞ்சினம் கொண்டு, இயேசுவுக்கு என்ன செய்யலாம் என்று தங்களுக்குள் கலந்துபேசினார்கள்.  லூக்கா 6:10-11

இது மனதை மிகவும் கலங்கச் செய்யும் ஒரு பகுதி. மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் வேண்டுமென்றே திட்டமிட்டு, மிகுந்த தீய நோக்கத்துடன் செயல்பட்டதை மீண்டும் மீண்டும் காண்கிறோம். இங்கே, இயேசு செய்தவற்றில் எதையாவது வைத்து அவர்மீது குற்றம் சுமத்த முடியுமா என்று அவர்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்மீது குற்றம் சுமத்த அவர்களுக்கு என்ன கிடைக்கிறது? ஓய்வுநாளில் அவர் ஓர் அற்புதம் செய்வதை அவர்கள் காண்கிறார்கள். இயேசு ஏதோ பாவம் செய்துவிட்டதுபோல அவர்கள் நடந்துகொள்கிறார்கள். இது என்ன நியாயம்?

இந்தப் பகுதி மனதை இவ்வளவு உலுக்குவதற்குக் காரணம், அக்காலச் சமயத் தலைவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதும், தங்களையே முக்கியமானவர்களாகக் கருதிய அவர்களுடைய மனப்பான்மைக்கு இயேசு இடையூறாக இருந்தார் என்பதும் தெளிவாகத் தெரிவதுதான்.  மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும்விட அவர் மக்களிடையே அதிகப் புகழும் மதிப்பும் பெற்றுவந்தார்; அவர்களோ பொறாமையால் நிறைந்திருந்தார்கள்.

இந்தப் பகுதியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை என்னவென்றால், பொறாமை என்னும் பாவம் நம்மைப் பகுத்தறிவற்ற நிலைக்கும் மடமைக்கும் இட்டுச் செல்கிறது என்பதே. இந்தப் பாவம் நம் கண்களைக் குருடாக்கி, மடத்தனமானவற்றைச் சிந்திக்கவும் பேசவும் நம்மைத் தூண்டுகிறது. மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் செய்தது இதைத்தான். ஓய்வுநாளில் குணமாக்குவது போன்ற ஒரு நல்ல செயலைச் செய்ததற்காக இயேசுவின்மீது “குற்றம் சுமத்த” தெளிந்த அறிவுடைய யாருக்குத்தான் தோன்றும்? பொறாமையால் கண்கள் குருடாகிப் போனவர்களுக்கு மட்டுமே அவ்வாறு தோன்றும்.

இந்தப் பகுதி மனதை உலுக்கினாலும், அது நமக்கு உதவும் விதத்தில் நம் மனதை உலுக்குவதாக அமையும் என நம்பலாம்.  நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்வை உற்றுநோக்கவும், நமக்குள்ள உறவுகளை ஆராய்ந்து பார்க்கவும் இது ஒரு வாய்ப்பாக அமைய வேண்டும்.  அந்த உறவுகளில் ஏதேனும் ஒன்றில் பொறாமை இருப்பதைக் காண்கிறீர்களா?  சில வேளைகளில் இவரிடமோ அவரிடமோ நீங்கள் அறிவுக்குப் பொருந்தாத விதத்தில் நடந்துகொள்வதையும் சிந்திப்பதையும் காண்கிறீர்களா?

மறைநூல் அறிஞர்களையும் பரிசேயர்களையும் போல இருப்பதற்கான போக்கு உங்களிடம் ஏதேனும் உள்ளதா என்பதை இன்று சிந்தித்துப் பாருங்கள்.  நாம் சில வேளைகளில் போராடும் இந்த அருவருப்பான பாவத்தைப் பற்றி நமக்குக் கற்பிப்பதற்காகவே அவர்களுடைய செயல்கள் மறைநூலில் இடம்பெற்றுள்ளன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.  இதில் மனதை உலுக்கும் அம்சம், உங்கள் வாழ்வில் பொறாமையிலிருந்து விடுதலை பெற முயல உங்களைத் தூண்டட்டும்.

அற்புதங்களை நிகழ்த்தும் என் ஆண்டவரே, ஆணவம், அழுக்காறு, பொறாமை என்னும் பாவங்களிலிருந்து விடுபட நான் உண்மையாகவே விரும்புகிறேன். என் வாழ்வில் இவற்றைக் கண்டுணரவும், இவற்றிற்காக மனம் வருந்தி மனந்திரும்பவும், இவற்றிற்குப் பதிலாக உமது இரக்கத்தையும் அன்பையும் என் வாழ்வில் ஏற்கவும் எனக்கு உதவியருளும். இயேசுவே, உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

பொதுக்காலத்திற்கான இறைவார்த்தைத் தியானங்கள்

அனைத்துப் புனிதர்கள்/திருவிழாக்கள்

இன்றைய புனிதர் – கல்கத்தா புனித அன்னை தெரசா

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

மேலே இடம்பெற்றுள்ள படங்கள்: அந்த மனிதரைக் குணமாக்கும் கிறிஸ்து, Wikimedia Commons வழியாக