தமிழ்

நீங்கள் பேறுபெற்றவரா?

அக்டோபர் 8, 2022
பொதுக்காலத்தின் இருபத்தேழாம் வாரம் சனிக்கிழமை
இன்றைய வாசகங்கள்

காணொளி

இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த ஒரு பெண் உரத்த குரலில் அவரிடம், “உம்மைச் சுமந்த வயிறும், நீர் பாலுண்ட மார்புகளும் பேறுபெற்றவை” என்றார். அதற்கு அவர், “அதைவிட, இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்பவர்களே பேறுபெற்றவர்கள்” என்று பதிலளித்தார்.  லூக்கா 11:27-28

நீங்கள் இறைவார்த்தையைக் கேட்கிறீர்களா?  அவ்வாறு கேட்கிறீர்கள் என்றால், அதைக் கடைப்பிடிக்கிறீர்களா?  அப்படியானால், நம் ஆண்டவரால் உண்மையிலேயே பேறுபெற்றவர்களுள் நீங்களும் ஒருவர் எனக் கருதலாம்.

இந்தப் பகுதியில் இயேசுவிடம் பேசும் பெண், அவரைச் சுமந்து பாலூட்டியதால் அவருடைய தாய் பேறுபெற்றவர் என்று கூறி அவரைப் போற்றுகிறார் என்பது கவனிக்கத்தக்கது.  ஆனால் இயேசு தாம் கூறும் பதிலின் வழியாகத் தம் தாயை இன்னும் மேலாகப் போற்றுகிறார்.  மற்ற அனைவரையும்விட அவர் இறைவார்த்தையைக் கேட்டு, அதை நிறைவாகக் கடைப்பிடிப்பதால், இயேசு அவரைப் போற்றி, பேறுபெற்றவர் என அழைக்கிறார்.

கேட்பதும் செயல்படுத்துவதும் மிகவும் வேறுபட்ட இரு செயல்கள்.  ஆன்மிக வாழ்வில் இவை இரண்டிற்கும் மிகுந்த அர்ப்பணிப்பு தேவை.  முதலில், இறைவார்த்தையைக் கேட்பது என்பது வெறுமனே காதால் கேட்பதோ விவிலியத்தை வாசிப்பதோ அல்ல.  இங்கு “கேட்பது” என்பது கடவுள் நம் ஆன்மாவோடு பேசியிருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.  ஓர் ஆளாகிய இயேசுவுடனேயே நாம் உறவாடுகிறோம் என்பதும், அவர் நமக்குத் தெரிவிக்க விரும்பும் அனைத்தையும் தெரிவிக்க நாம் அவரை அனுமதிக்கிறோம் என்பதும் இதன் பொருள்.

இயேசு பேசுவதைக் கேட்பதும், அவர் சொல்வதை உள்ளத்தில் ஏற்றுக்கொள்வதும் சவாலாக இருக்கலாம். ஆனால், அவர் கூறியபடி நாம் வாழும் அளவுக்கு அவரது வார்த்தை நம்மை மாற்ற அனுமதிப்பது அதைவிடச் சவாலானது.  பல வேளைகளில் நமக்கு மிக நல்ல நோக்கங்கள் இருக்கலாம்; ஆனால் இறைவார்த்தையின்படி வாழ்ந்து, அந்த நோக்கங்களைச் செயலாக்கத் தவறிவிடுகிறோம்.

இறைவார்த்தையைக் கேட்பதையும் கடைப்பிடிப்பதையும் பற்றி இன்று சிந்தியுங்கள்.  முதலில் கேட்பதிலிருந்து தொடங்குங்கள்; இயேசு உங்களோடு உறவாட ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களைத் திறந்து கொடுக்கிறீர்களா என்று சிந்தியுங்கள்.  அதன் பின்னர், அவர் கூறியதாக நீங்கள் அறிந்திருப்பவற்றின்படி வாழ்கிறீர்களா என்று சிந்தியுங்கள்.  இந்த முயற்சியில் உங்களை மீண்டும் அர்ப்பணியுங்கள்; நீங்களும் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள் என்பதைக் கண்டுகொள்வீர்கள்!

இறைவனின் நித்திய வாக்கே, நீர் என்னோடு பேசுவதை நான் கேட்க அருளும்.  என் ஆன்மாவில் உம்மைச் சந்தித்து, உமது புனித வார்த்தையை ஏற்றுக்கொள்ள அருளும்.  நீர் எனக்காக வைத்திருக்கும் ஆசிகளை நான் அனுபவிக்கும் பொருட்டு, அந்த வார்த்தையை என் வாழ்வில் செயல்படுத்தவும் அருளும்.  இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன்.

புதியது!


கடவுளை நோக்கிய அகப் பயணம்:
அவிலா புனித தெரேசாவின் சிந்தனைகள்

மேலும் நற்செய்திச் சிந்தனைகள்

இறை இரக்கச் சிந்தனைகள்

இன்றைய புனிதர்கள்/திருவிழாக்கள்

திருப்பலி வாசிப்புகளுக்கான தெரிவுகள்

சிறப்புப் படம்: கூட்டத்தில் உரக்கக் குரல் எழுப்பும் ஒரு பெண் — ஜேம்ஸ் திசோ, விக்கிமீடியா காமன்ஸ் வழியாக